Advertisement

'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' இன்று முதல் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா

ஆன்மாவை ஆனந்தமயமாக்கும் ஆற்றல், இசையரசி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீகக் குரலுக்கு உண்டு. பறத்தலுக்குத் தயாராகும் பறவையைப்போல், அவர் தேனிசை கேட்டால் மனம் மகிழ்ச்சி வானில் அதிஉயரத்தில் பறக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தொடங்கி உலகின் அனைத்து கோவில்களும் இசையரசியின் சுப்ரபாத இசையோடுதான் தொடங்குகின்றன. மாலையில் மனம் மயக்கும் விஷ்ணுசகஸ்ரநாமம், உலகியல் வாழ்வின் உண்மையை உணர்த்தும் பஜகோவிந்தம், வெறுமையாய் மனம் உணரும்போதெல்லாம் 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்று அனைவரையும் பாடவைத்த கானக்குயில் பிறந்து நுாறாண்டுகள் ஆகிவிட்டன.
காலத்தின் காதுகளைக் கானங்களால் கவுரவப்படுத்திய இசையரசி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி, உழைப்பின் உன்னதம், இந்த நுாற்றாண்டின் எட்டா(ம்) அதிசயம். காற்றும் போற்றும் அவர் காவியகானங்களைக் கால காலமாய். உலகெங்கும் ஒலித்த குரல் சபாக்களில் வீற்றிருந்த சங்கீதத்தைச் சப்தமின்றி பாமர மக்களின் வீடுகளுக்குக் கொண்டுவந்த பெருமை எம்.எஸ்.க்கு உண்டு. எப்போதும் புன்னகையுடன் இந்த இசையரசி இந்தியாவின் இசைமுகமாய் உலகம் முழுக்க வலம் வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், குஜராத்தி, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், கன்னடம் போன்று பல மொழிகளில் தன் இசையால் எல்லோரையும் தன்வயமாக்கினார். செப்., 16, 1916 அன்று மதுரையில் பிறந்தார். மீனாட்சியம்மன் கோவில் அருகில் வீடு, தாய் சண்முகவடிவு தேர்ந்த வீணைக்கலைஞர். விடாத முயற்சியும் கடினமான பயிற்சியும் அவரைச் சிறுவயதிலேயே இசைத்துறையில் தடம்பதிக்கச் செய்தது. முந்தையநாள் தன் தாயோடு கச்சேரிகளுக்குச் சென்று வந்தாலும், மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து சாதகம் செய்யக்கூடிய பயிற்சியை அவர் மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கச்சேரிக்கு வருகைதந்த செம்மங்குடி, மணி அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்றோரின் தனித்தன்மையான இசையைத் தொடர்ந்து செவி மடுத்துத் திரும்பத் திரும்பப்பாடி எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டார். குழந்தைப் பருவத்திலேயே தமிழிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றில் பயிற்சி எடுத்ததால் அவரது இசைசாம்ராஜ்யம், இமயமாய் உயர்ந்தது.
மகுடம் சூட்டிய மதுரை:மதுரை சேதுபதி உயர்பள்ளியில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்துகொண்டிருந்தபோது, சட்டென்று தன் கச்சேரியை நிறுத்திவிட்டு பத்து வயது மகள் எம்.எஸ்.சுப்புலெட்சுமியைப் பாடுமாறு சொல்ல, ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்த “ஆனந்தஜா” எனும் மராட்டியப் பாடலைச் சற்றும் தயக்கமின்றி சிறுமி எம்.எஸ்.,அழகாகப் பாடினாள்.
குஞ்சம்மாள் என்று அன்போடு அழைத்த தன் மகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை இசைக்குயிலாக்கிய பெருமை தாய் சண்முகவடிவுக்கு உண்டு. பாரதியார், அன்னமாச்சாரியார், முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் என்று விதவிதமாய் பாடல்களைக் கற்றுத்தந்தவரும் அவரே. பல இசைக் கருவிகளின் நுண் இசைகளைக் கேட்கவைத்து இசை நுணுக்கங்களை மிகத்தெளிவாகக் கற்றுத்தந்தார்.
டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் தோடியை எம்.எஸ்.பெரிதும் விரும்பினார். தன் மகளின் பத்தாவது வயதில், அவரது பாடலோடும் தன் வயலின் இசையோடும் “மரகத வடிவும் செங்கதிர் வேலும்” எனும் இசைத்தட்டாக வெளியிட்டார். திரைத்துறையில் சாதித்த இசைவாணி சேவாசதனம் படத்தில் நடித்துத் திரைத்துறை அரங்கேற்றம் நடத்தினாலும், சகுந்தலை எனும் திரைப்படத்தில்தான் எம்.எஸ்., பெரும்புகழ் பெற்றார்.
“பிரேமையில் யாவும் மறந்தேனே” எனும் பாடல் பட்டிதொட்டிகளெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.1940 ல் கல்கி சதாசிவத்தைத் திருமணம் செய்துகொண்டார். திரைப்படத் தயாரிப்பாளரான அவர் தந்த ஊக்கம், எம்.எஸ்.சுப்புலட்சுமியை உலகளாவிய அளவிற்குப் புகழ் பெறச்செய்தது. 1945 இல் வெளியான பக்தமீராவில் எம்.எஸ்.பாடி நடித்த “காற்றினிலே வரும் கீதம்”, கிரிதர கோபாலா, போன்ற பாடல்கள் அப்போதே நாடுகடந்து பேசப்பட்டது.
அவர் மேடைகளில் விரும்பிப்பாடியது தமிழிசையைத்தான். மகாகவி பாரதியின் பாடல்களை மனம் நெகிழ்ந்து பாடியதைக் கேட்டு, அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.
விநாயகர் நான்மணி மாலை, செந்தமிழ்நாடெனும் போதினிலே, வந்தேமாதரம், பாரததேசமென்று பெயர் சொல்லுவார்,வாழிய செந்தமிழ், காலமாம் வனத்தில், வில்லினையொத்த புருவம், நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும், ஒளி படைத்த கண்ணினாய் வா..வா..வா..” என்ற பாரதியின் பாடல்கள் எம்.எஸ்.க்கு பிடித்தபாடல்கள்.
பாபநாசம் சிவன் பாடல்கள், வள்ளலார் பெருமான் பாடல்கள், கவியோகி சுத்தானந்தபாரதியார், பாடல்கள், கல்கி எழுதிய பாடல்கள், ராஜாஜி பாடல்கள் என்று தேடித்தேடிப்பாடிய இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் தமிழிசை இயக்கம் வளர்ந்தது.ரகுபதி ராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே போன்ற பாடல்களை எம்.எஸ்.பாட மகாத்மா காந்தி மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் உண்டு.
ஐக்கியநாடுகள் சபையில் ஒலித்த குரல் :உலகின் அனைத்து நாடுகளும் ஒருங்கே அமையும் ஐக்கிய நாடுகள் சபையில் அமைதியை மையமிட்டு 1966 அக்., 23 அன்று, ராஜாஜி எழுதிய “ மே தி லார்ட் பர்கிவ் அவர் சின்ஸ்” எனும் ஆங்கிலப்பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி மிக அழகாக மனம் உருகப்பாடினார். தமிழ்நாட்டு இசைக்குயில் உலகப்பரப்பில் வானுயரப்பறந்த உன்னதமான நாள் அது. இந்திய மொழிகள் அனைத்திலும் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, உலகின் சர்வதேச மொழியான அமைதி எனும் மொழியிலும் பாடியது நாம் பெற்ற பேறு.
மருத்துவம், கல்வி, சமயத்தொண்டு ஆகியவற்றிற்காக நாடெங்கிலும் இசைநிகழ்ச்சிகள் நடத்தி பலகோடிரூபாயை எம்.எஸ்.நன்கொடையாகத் தந்தார். இல்லையென்று தன் இல்லத்தில் யார் வந்துநின்றாலும் இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத உத்தம வள்ளலாய் எம்.எஸ்.சுப்புலட்சுமி திகழ்ந்தார். கலை அவரைப் பொறுத்தவரை விலைப் பொருள் அன்று.எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு உயிராகத் திகழ்ந்த கணவர் சதாசிவம் 1997 நவம்பரில் மறைந்தார், அந்தச் சம்பவம் அவருக்கு பேரிடியாக அமைந்தது. அவர் அதன்பின் பாடுவதை நிறுத்திக்கொண்டார். உலகெலாம் இசையால் வசமாக்கிய இசையரசிக்கு, 1998 ல் அரசு பாரத ரத்னா பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
டிச., 11, 2004 அன்று எம்.எஸ்.சுப்புலட்சுமி இந்த உலகைவிட்டு மறைந்தார். ஆனாலும் உலகின் ஏதோவொரு பகுதியில் அவர் இன்னும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.
-முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. 99521 40275

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement