Advertisement

பெண்களின் கட்சி பேசுகிற ஆண்மை வீரர்

இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் இணையற்ற கவிஞராக விளங்கியவர் பாரதியார். அவர் பெண் விடுதலையையும், மண் விடுதலையையும் இரண்டு கண்களாகக் கொண்டவர். 'பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா' என்று கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காக முனைப்புடன் குரல் கொடுத்தவர். பெண்கள் படும் துன்பத்திற்காகத் துடித்தவர்; 'பெண் இனிது' ('வசன கவிதை') என்றும், 'பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா' ('குயில் பாட்டு') என்றும் பெண்மையை வானளாவப் போற்றியவர்.
கண்ணன் பாட்டில் கண்ணனைப் பெண் குழந்தையாகவும் காதலியாகவும் தாயாகவும் குல தெய்வமாகவும் பாடிப் பெண்மைக்கு ஏற்றம் நல்கியவர். 'புதுமைப் பெண்'ணைப் படைத்துக் காட்டியவர். பாரத நாட்டைப் 'பாரத மாதா'வாகவும், தமிழ்நாட்டைத் 'தமிழ்த் தாயாகவும், சுதந்திரத்தைச் 'சுதந்திர தேவி'யாகவும், கவிதையைக் 'கவிதைத் தலைவி'யாகவும் பார்த்தவர். “பாரதி பெண்களின் கட்சி பேசுகிற ஆண்மை வீரர். இப்படி அவர் பெண்களின் கட்சி பேசுகிற ரகசியத்தை அவருடைய கவிதைகளே பல இடங்களில் பறைசாற்றுகின்றன” என்பது 'தீபம்' நா.பார்த்தசாரதி பாரதியாருக்குச் சூட்டும் புகழாரம்.
பாரதியாரின் 'தாய்ப் பாசம்' பாரதியார் - ஐந்து வயதில் - தாயை இழந்தவர்.“ என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்ஏங்கவிட்டு விண்எய் திய தாய்”என்று அன்னையின் இழப்பிற்காக - இறப்பிற்காக - ஏங்கிப் பாடியவர் அவர். அன்னையைப் பிரிந்த ஏக்கம், அவருடைய ஆழ்மனத்தில் அழுந்தப் பதிந்திருந்தது. எனவே, நாட்டைப் பாடுவதாக இருந்தாலும் தாயாக - பாரத மாதாவாக - உருவகித்துப் பாடுகிறார்; தமிழைப் பாடுவதாக இருந்தாலும் 'தமிழ்த் தாயாக'ப் போற்றுகிறார். 'பாரத மாதா திருத்தசாங்கம்'. 'பாரத மாதா நவரத்தின மாலை', 'பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி', 'தாயின் மணிக்கொடி' என்றெல்லாம் பாடி, அவர் பாரத மாதாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பாரதியாரின் 'புதுமைப் பெண்' “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்.
ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்”என்று பெண்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் பாரதியார். 'நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்; விலகி வீட்டில் ஒரு பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்' என்று வீரப் பெண்களின் செயல்களைப் பட்டியலிடுகிறார் பாரதியார். 'புதுமைப் பெண்', 'இளைய நங்கை', 'பெண்மைத் தெய்வம்', 'செம்மை மாதர்', 'உதய கன்னி', 'வீரப் பெண்' - என பெண்களுக்கு அவர் சூட்டி மகிழும் அடைமொழிகள் தான் எத்தனை எத்தனை!“ ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம்”எனப் பெண்ணுக்கு ஆணுக்கு நிகரான ஏற்றத்தினை நல்குகின்றார் பாரதியார்.
காரணம் என்ன? பாரதியார் பெண்ணை ஏற்றிப் போற்றிப் பாடுவதற்குக் காரணமாக அமைந்தது வீரத் துறவி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவுடன் அவருக்கு நேர்ந்த சந்திப்பு. 1905-ல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பாரதியார், நிவேதிதா தேவியைச் சந்திக்கின்றார்.
“மனைவியை அழைத்து வரவில்லையா?” என்று அவர் வினவ, “அவ்வாறு அழைத்து வருதல் வழக்கம் இல்லை” என்கிறார் பாரதியார். அப்பொழுது நிவேதிதா, “மகனே! புருஷர்கள் அனேகம் பேர் படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்கள். ஸ்திரீகளை அடிமைகளென மதிப்பவர்கள். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள். அவர்களும் இப்படி அறியாமையில் மூழ்கி ஸ்திரீகளுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்? சரி, போனது போகட்டும். இனிமேலாகிலும் அவளைத் தனியென்று நினைக்காமல் உனது இடக்கை என்று மதித்து, மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி நடந்து வருதல் வேண்டும்” என்றாராம்.
இச்சந்திப்பினால், இயல்பாகவே பெண்கள் மீது பரிவும் பாசமும் கொண்ட பாரதியாருக்கு, அவர்கள் விடுதலைக்காகவும் பாடுபட வேண்டும் என்னும் எண்ணம் மிகுதியாக எழுந்தது.பெண்ணுக்கு மட்டுமே கற்பு நெறி என வலியுறுத்தப்பட்டு வந்த காலகட்டத்தில், பெண்ணின் கற்பு போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்றால், ஆணும் கற்புடையவனாக விளங்க வேண்டும் என்பதை மக்கள் மனத்தில் பதியும் வண்ணம் தம் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைக்கின்றார் பாரதியார்.“கற்புநிலை என்று சொல்லவந்தார் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்”என்று அறுதியிட்டு எடுத்துரைக்கின்றார்.பாரதியார் படைத்த பாஞ்சாலி, அவர் கனவு கண்ட புதுமைப் பெண்ணின் முழு வடிவம் - ஒட்டுமொத்தமான வார்ப்பு. எனவே தான், தன்னைத் தன் கணவன் சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைத்துத் தோற்று அடிமையாக்கினான் என்பதைக் கேள்விப்பட்டதும் அடங்கிப் போகாமல் -பொங்கி எழுகிறாள்.
'சாத்வீக எதிர்ப்பு முறை' பெண் விடுதலையை முழுமையாகச் சாதிப்பது எப்படி? காந்தியடிகளின் வழியில் 'சாத்வீக எதிர்ப்பைப் பின்பற்ற வேண்டும்' என்கிறார் பாரதியார்.“'நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று ராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்.
'இந்த வீடு என்னுடையது, இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்' என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய கொடுமைகள் எத்தனை-யோயாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக் கூடாது. ஆதலால் சகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த கணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்” என எழுதினார்.
பெண்கள் முழு விடுதலை பெற வேண்டுமானால் கல்வியறிவில் தலைசிறந்தவர்களாக ஆவதுடன், அரசியலிலும் ஈடுபாடு கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார் பாரதியார்.பாரதியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் இன்றவும் முக்கியமானவையாக விளங்குகின்றன. தாம் படைக்கும் புதுமைப் பெண், பழைமை எண்ணங்களினின்றும் முற்றிலுமாக விடுபட்டு, கல்வி கேள்விகளில் சிறந்து, அறத்தை நிலைநாட்ட வேண்டும். தீமையைக் களைந்து, சாதனை படைக்கும் ஆற்றலும் பெற்றவள் என்பதைத் தம் படைப்புகளில் நிறுவியுள்ளார் பாரதியார்.- முனைவர் நிர்மலா மோகன்தகைசால் பேராசிரியர்காந்திகிராம பல்கலைக்கழகம்94436 75931

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement