Advertisement

மீண்டும் ஏற்படுமா வெண்மை புரட்சி

1946- ல் குஜராத்தில் 200 லிட்டர் பால் சேகரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களின் விஸ்வரூப பரிணாமம்தான் இந்திய வெண்மைப்புரட்சி. 'வெண்மை புரட்சியின் தந்தை' என்று போற்றப்படும் வர்க்கீஸ் குரியன் 1921ம் ஆண்டு நவ., 26-ல் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். 1940-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லுாரியிலும், பின்னர் கிண்டி பொறியியல் கல்லுாரியிலும் பட்டம் பெற்றார். அன்றைய பிரிட்டிஷ் அரசு, 500 இந்திய இளைஞர்களை தேர்வு செய்து, மேல்படிப்பிற்காக மெக்ஸிக்கோ பல்கலைக்கு அனுப்பியது.
அப்போது அணுசக்தி துறையில் படிக்க விண்ணப்பித்த குரியனுக்கு, கிடைத்ததோ பால்பண்ணை பொறியியல் பிரிவு. 1949-ல் பயிற்சி முடித்தபின், அவரை குஜராத் ஆனந்தில் உள்ள ஒரு பழைய பால்பண்ணை தொழிற்சாலையில் இந்திய அரசாங்கம் பணியமர்த்தியது. வேண்டா வெறுப்பாய் அங்கு பணியாற்ற ரயில் ஏறியவர், பின்னர் 'அமுல்' எனும் பெரிய நிறுவனத்தை ஏற்படுத்தி, விவசாயிகள் வாழ்வினை மேன்புறச் செய்தார்.
எட்டு மாதங்களில் அரசுப் பணியை நிராகரித்துவிட்டு, திருபுவன்தாஸ் என்ற தலைவரின் வழிகாட்டுதல்படி, கைரா மாவட்ட பால் யூனியன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இன்று இந்தியா முழுமைக்குமான கூட்டுறவு பால் உற்பத்தி திட்டத்தின் முன்னோடி அவர். கூட்டுறவு உற்பத்தி மையங்கள்: நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்பகால கட்டங்களில், இந்தியா பால் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது. வெளிநாட்டு பால் கம்பெனிகளின் பிடியில் இந்திய பால் வணிகம் இருந்தது. 1955-ம் ஆண்டு அக்.,31 முதல் பால்பண்ணை தொழிற்சாலை கைராவில் திறக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு அமுல் (ஆனந்த் மில்க் யூனியன் லிட்.,) என்று பிராண்ட் செய்யப்பட்டது. விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாயிகளின் பெயரால் அமைக்கப்பட்ட கூட்டுறவு உற்பத்தி மையங்கள் பெருகி பால் உற்பத்தி பெருகியது.ஒருமுறை ஆனந்த்திற்கு வந்த அன்றைய பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி, ஆனந்த் பாணியில் அதே மாதிரி ஒரு வளர்ச்சியை இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்தி தருமாறு குரியனை கேட்டுக்கொண்டார். 1964ம் ஆண்டு உதயமானதுதான் தேசிய பால்வள வாரியம், அதன் சீரிய செயல்பாடுகளால் தான் வெறும் 124 கிராமாக இருந்த தனிமனித பால் நுகர்வு இன்று, 300 கிராமாக உயர்ந்து நிற்கிறது. வெண்மை புரட்சித் திட்டம் தான் பால் உற்பத்தியில் நமது தேசத்தை தன்னிறைவு பெற வைத்தது.குரியன், நாடு முழுமைக்கும் கூட்டுறவு உற்பத்தி திட்டத்தை எடுத்துச் சென்றபோது, அவருக்கு முட்டுக்கட்டை போட்ட பன்னாட்டு கம்பெனிகள், அதற்கு துணைபோன சில அரசியல் தலைவர்கள் மற்றும் அவநம்பிக்கை ஏற்படுத்திய மேல்மட்ட துறை அதிகாரிகள் என அனைத்து தடங்கல்களையும், அதனை தகர்த்த வழிகளையும், தனது சுயசரிதை நுாலான 'எனக்கும் ஒரு கனவு உண்டு' என்ற நுாலில் விவரித்திருக்கிறார்.
பயிற்சி மையம்: 1977-ல் இந்தியாவும், 1982-ல் பாகிஸ்தானும் இலங்கையும், இதே மாதிரி ஒரு நிறுவனத்தை தங்களது நாட்டில் நிறுவும் சூழ்நிலை குறித்து ஆராய குரியனை அழைத்தன. ஆனால் அன்றைய சூழலில் அந்நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்த முடியவில்லை. 1979-ம் ஆண்டு கிராமப்புற நிர்வாக அமைப்புகளுக்கு நிர்வாகத்திறன் பயிற்சி வழங்கும் வகையில், தேசிய அளவில் ஐ.ஆர்.எம்.ஏ., பயிற்சி மையத்தை உருவாக்கினார்.
இன்றளவும் அது ஒரு மிகச்சிறந்த கிராம பொருளாதார மேம்பாட்டிற்கான பயிற்சி மையமாக விளங்குகிறது.இந்திய அரசு பத்மவிபூஷண் விருதையும், 1986ல் வாட்லா அமைதி விருதையும், 1989ல் உலக உணவு பரிசையும், 1990-ல் சமஸ்வயா புரஸ்கார் விருதையும் பெற்றார் குரியன். 1965 - 1998 வரை 33 ஆண்டுகள் தேசிய பால்வள வாரியத்தின் சேர்மனாக திறம்பட செயலாற்றி, 2012 செப்.,9-ல் தனது 91 வயதில் இறந்தார். இன்று அவரது நினைவுதினம்.
தமிழகம் சாதனை: அவருக்கு பின்னால் அவரால் பயிற்றுவிக்கப்பட்ட கால்நடை டாக்டரான அமிர்தா பட்டீல் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.பல நல்ல தலைவர்கள், அறிஞர்கள், வல்லுனர்களின் தியாக உழைப்பில் வளர்ந்தது தான் நம் பால் வளம். உலகின் முதல் இடமாக இன்று பால் உற்பத்தியில் இந்தியா 140 மில்லியன் டன்னை கடந்து தன்னிறைவு பெற்ற நாடாக திகழ்கிறது.
தமிழ்நாடு நாள் ஒன்றுக்கு அமைப்புசார் மற்றும் சாரா உற்பத்தியாளர்களிடம் இருந்து 127 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதில் பாதி அளவு பால் உற்பத்தியாளர்களின் சுயதேவைக்கும், 63 லட்சம் லிட்டர் பால் உபரி சந்தைக்கும் அனுப்பப்படுகிறது. பால் உற்பத்தியில் தமிழகம் 4-வது மாநிலமாக திகழ்கிறது.வெண்மை புரட்சியின் மூன்றாவது நிலையாக பால் உற்பத்திக்கு தேவையான நவீன தீவனம், கால்நடை மருத்துவம் மற்றும் உயர்ரக காளை விந்துக்கள் மூலம் செயற்கை முறை கருவூட்டல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டதன் விளைவாக, பால் உற்பத்தி தன்னிறைவை அடைந்தது. ஊழலை களைய வேண்டும்: சமீபத்தில் கூட ஆவின் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காரணம் உற்பத்தி பெருக்கம். ஆனால் அதற்கேற்ப விற்பனை பெருகவில்லை.
நீண்டகால திட்டங்கள் மூலம்தான் விற்பனையை பெருக்க முடியும்.சமூகநல சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் ஆவின் பால் பொருட்களை வாங்கி உபயோகிக்க அவர்களாகவே முன்வர வேண்டும். ஆவினில் நடக்கும் சிலரின் ஊழல்களை தடுக்க, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் ஆவினின் தோல்வி என்பது ஒட்டுமொத்த கூட்டுறவு உற்பத்தி கொள்கையின் தோல்வி.
எனவே, அரசு ஊழலை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊழல்கள் களையப்படவில்லை என்றால், தனிநபர்கள் லாபம் பார்க்கும் அமைப்பாக ஆவின் மாறிவிடுமேயின்றி, கூட்டுறவு விவசாய பால் உற்பத்தி கொள்கையின் நோக்கம் மற்றும் பயன்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிடும். பால் உற்பத்தியை பெருக்குவோம்! கிராமப் பொருளாதாரம் காப்போம்!- டாக்டர் பி.மணிவண்ணன்கால்நடை சிறப்பு மருத்துவர்தேனி, 99942 94254

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement