Advertisement

மாற்றி யோசித்தால் உண்டு மறுமலர்ச்சி!

தமிழனின் பண்பாடு, நாகரிகம், கலாசாரம் என்பதை பழமை என்கிற ஒற்றைச் சொல்லால் உள்ளடக்கிவிட முடியாது. 'மனித நாகரிகத்தின் தொட்டில் குமரிக்கண்டம் எனவும், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களுக்கு முந்தைய 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது' எனவும் தமிழனின் நாகரிகம், பண்பாட்டினை ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர்.
இந்திய நாகரிக மேன்மைக்கும், ஆன்மிக அடித்தளத்திற்கும் தமிழரின் நாகரிகம், பண்பாடு அடிப்படை என்பது தெரிந்ததே.உலக மானுட சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழனுடைய பண்பாடு, நாகரிகம், கலாசாரம் எல்லாம் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' போல சமீபத்திய நிகழ்வுகளான மூன்று வயது குழந்தைக்கு மது புகட்டலும், பதின்ம வயது மாணவி மதுத் தாண்டவமும் நமது பண்பாட்டு சீரழிவை உலகிற்கு உணர்த்த தொடங்கி விட்டன.நமது கலாசாரத்தை, தேர்விற்கு எழுதும் 'வினா விடைக் குறிப்புகளாகவே' பார்க்கிறோமே தவிர 'வாழ்வியல்' என்பதை மறந்துவிட்டோம்.மனதை அழுத்தும் பாரம் மழலைக்கு மதுவை புகட்டியதோடு அதில் தொழில்நுட்ப நுணுக்கங்களை புகுத்தி ரசிப்பதை வழக்கமானது என வாழக் கற்றுக்கொண்டு விட்டோம். 'மதுவை தொடுவதே தவறு' என்ற சமூகப் பண்பாட்டை இளைய சமூகத்திற்கு புகட்ட கல்வி வழியிலும் நாம் மறந்து விட்டோம்.பாடப்புத்தகத்தில் ஆட்சியாளர்கள் விரும்பிய தலைவர்களை பதிப்புரிமை செய்யவே முன்னுரிமை தந்து, சமூகப் பண்பாட்டுக் கல்வியினை பதிப்பு செய்ய பக்கங்களுக்கு இடம் தராமலே விட்டு விட்டார்கள். மாணவி ஒருவர் மட்டுமே என இவற்றை புறம் தள்ளிவிட முடியாது. காலையில் பள்ளிக்கோ, கல்லுாரிக்கோ செல்வதாக கூறி ஒதுக்குப்புற மரத்தடி அல்லது மதுக்கடையில் மயக்கமாய் மாலை வரை காத்துக் கிடக்கும் மாணவர் சமூகத்தின் வாழ்வினை, பெற்றோர் மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமா? என்கிற கேள்விக் கணைகள் மனதை பாரமாய் அழுத்துகிறது.
நாணிக் குனியும் நாகரிகம் :'கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி' என்கிற வரிகளை மாணவ இளையோர் தவறாக பொருள் புரிந்துக்கொண்டனரோ? உலக இலக்கியத்திற்கு அறவழி இலக்கியம் அமைத்த வள்ளுவப் பெருந்தகை தன் பணத்தை கொடுத்து தனக்கே ஊறு செய்யும் மதுவினை "கையறி யாமை யுடைத்தே பொருள்கெடுத்து மெய்யறி யாமை கொளல்" என சாடுகிறார்.நாகரிகத்தால் பண்பட்டு வாழ்ந்த தமிழ்ச் சமூக இளையோர் நாணிக்குனியும் நாகரிகத்தில் ஆட்பட்டுக்கொண்டனர்.'உழவுத் தொழிலே நாகரிகத்திற்கு அடிப்படை ஆகும்' என்கின்றனர் ஆய்வாளர்கள். மண்ணைத் திருத்திய மனிதன் தானும் திருந்தினான். தான் வாழ்ந்த இடத்தை திருத்திய மனிதன் நகரமாக்கினான், நாகரிகத்தை பண்பாடு சிதையாமல் வடிவமைத்தான். இன்றளவிலும் கிராம வழக்காற்று சொல்லாக இருக்கிற 'அவருக்கு நிலபுலம் இருக்கிறதா?' என்கிற சொல் பல்வேறு பொருளை தாங்கி இருக்கிறது.'நிலம்' என்பதன் பொருள் அனைவருக்கும் தெரியும். 'புலம்' என்பது நிலத்தையும் குறிக்கும் (வருவாய்த்துறை நிலஅளவவேடுகளில் 'புல எண்' என இன்றும் குறிக்கப்படுகிறது), உள்ளத்தையும் குறிக்கும். நிலத்தில் விளையும் பயிருக்கு இடையே களைகள் வளர்வது இயற்கையே. பயிர் நன்றாக வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால் களைகளை அகற்றி எறிய வேண்டும்.பண்பாட்டின் ஆணி வேர் பண்பாடு, நாகரிகம் என்கிற சொல் உள்ளச் செம்மையை சுட்டுகிறது. 'பண்பெனப்படுவது எது?' என்ற வினாவிற்கு கலித் தொகை 'பாடறிந்து ஒழுகலாகும்' என வரையறை செய்கிறது. அதாவது பிறர் மனம் புண்படாதவாறு தனது வாழ்வினை அமைக்க வேண்டும் என்கிறது.ஆனால் பிறர் மனம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் பெற்றோருடைய மனமாவது புண்படாத வகையில் கல்வி பயிலும் இளையோர் சமூகம் நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவனின் புறவளர்ச்சியை மட்டுமே பெருமையாக பேசுகின்றனர். அகவளர்ச்சியினையும் பெருமையாக கொள்ளவேண்டும். அகவளர்ச்சி தான் பண்பாட்டின் ஆணி வேர்.'அரசாங்கத்தின் நிதி நிலைமைக்கு மதுக்கடைகளின் வருமானமும் ஒரு காரணம்' என்கிற வாதத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மதுக்கடை வருமானத்தை கவனத்தில் கொள்ளாமல் அக்கடைகளை மூடிவிட்டு கடுமையான சட்டங்களால் இளையோர் மதுவை நாட விடாமல் செய்ய வேண்டும்.
மதுவால் மடியும் மனிதவளம் ;தமிழர் வாழ்வியலில் காதல், வீரம், இல்லறம், துறவறம், நட்பு, செய்நன்றி, புகழ், மானம், ஈகை, கண்ணோட்டம் ஆகியவை தமிழனுக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாக இருந்தன. ஆனால் பண்பாடு துறந்த மதுவால் மயக்கமுற்ற இளையோர் சமூகத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பெற்றோர், அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள், சமூக நல ஆர்வலர்கள் இன்னும் அமைதிகாப்பது ஏனோ புரியவில்லை. இளையோர் மனிதவளம் இந்தியாவில் தான் அதிகம். ஆனால் அவ்வளத்தை மதுவால் மாய்க்கிறோம்.'பிறப்பு முதல் இறப்பு வரை மதுவில்லா விருந்து இல்லை' என நாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். 'பண்பாடு என்னும் தாய்பாலினை ஓரம் கட்டிவிட்டு, மது என்கிற புட்டிப்பாலை புகட்டிக் கொண்டிருக்கிறோம்'.
வேண்டும்... வேண்டும் தமிழ் மொழி தொடங்கிய காலத்தினையும், பண்பாடோடு வளர்ந்த விதத்தினையும் பள்ளிகளில் விளக்க தமிழ் பண்பாட்டு மன்றங்களாக செயல்பட ஆக்கம் தரவேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் கலை விழாக்கள் ஆடம்பர, ஆடை குறைப்பு இல்லாத சமூகப் பண்பாட்டு விழாக்களாக அமையப் பெறவேண்டும். பேச்சு, கட்டுரை, கவிதை இவைபோன்று இலக்கியப் போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக பங்குபெற வேண்டும் என்கிற நிலையில், போட்டி தேர்விற்காக அல்லாமல் பண்பாட்டு மாறுதலுக்காக நடத்தப்பட வேண்டும். - முனைவர் கரு. முருகன், உதவிப் பேராசிரியர், தேவகோட்டை . 94434 66564.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement