Advertisement

தூக்கு தண்டனை தேவையா?

தூக்கு தண்டனை தேவையா, இல்லையா என்றொரு விவாதம், நாட்டில் தற்போது பரவலாக உலாவரத் துவங்கியுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதிலிருந்து இந்த விவாதம் பரவலாக எழுந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின்படி, கொலைக் குற்றம் புரிந்தவர்களை விட, அதற்குத் துணை போனவர்களுக்கே தண்டனை அதிகம். யாகூப் மேமன் படித்தவர் தானே? தன் சகோதரரின் நடவடிக்கை சரியில்லை என்று தெரியவந்த போதே, அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ தெரிவித்திருக்கலாம். இதிலிருந்தே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், யாகூப் மேமனுக்கும் தொடர்புள்ளது உறுதியாகிறது.

நீதிமன்றங்கள் அனைத்தும், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று தூக்கு தண்டனை வழங்கி விடுவதில்லை. ஆற அமர யோசித்த பிறகே தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகின்றன. சில வழக்குகள், 10 - 15 ஆண்டுகள் கூட அவகாசம் எடுத்துக் கொள்கின்றன. உலகில் ஜனனம் என்ற ஒன்று இருப்பது எப்படி உண்மையோ, அது போல மரணம் என்ற ஒன்று இருப்பதும் உண்மையே. முயன்றால், பிறப்பைக் கூட தவிர்த்துவிட முடியும். ஆனால், அந்த ஆண்டவனால் கூட இறப்பைத் தவிர்க்க முடியாது. மரணம் என்பது இயற்கையானது; பொதுவானது; யாராலும் அதிலிருந்து தப்ப முடியாது என்பது தான் நிஜம்!

'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது' என்று சிவாஜி கணேசன் சொன்னதை கொஞ்சம் மாற்றி, 'தப்பு செய்தவன் திருந்தப் பார்க்கணும்; தவறு செய்தவன் வருந்தியாகணும்' என்று எம்.ஜி.ஆர்., சொன்னார். பிக்பாக்கெட், திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்றவைகளில் ஈடுபடுபவர்களை தப்பு செய்தவர்கள் என்று வைத்துக் கொண்டால், கொலை செய்பவர்களும், பயங்கர வாதத்தில் ஈடுபட்டு, அப்பாவிகளின் உயிர்களைப் பறிப்பவர்களும் தவறு செய்தவர்கள் தான். அவர்கள் வருந்தியே ஆக வேண்டும். அதற்குத் தான் மரண தண்டனை!

ஒரு உயிருக்கு ஈடாக ஒரு உயிரைக் கொல்வதா என்று தூக்கு தண்டனைக்கு எதிராக வக்காலத்து வாங்கி, வியாக்கியானம் பேசுபவர்கள், கொல்லப்பட்டவர்களின் உயிரைப் பறிக்க, கொன்றவனுக்கு மட்டும் உரிமை உள்ளதாகக் கருதுகின்றனரா? குற்றவாளிகளை, குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்குத் தான் நீதி மன்றங்களும், நீதிபதிகளுமே தவிர, அவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்து, பாராட்டுவதற்கல்ல. தண்டனை கொடுப்பதற்கு நீதிமன்றங்கள்; அதை நிறைவேற்றுவதற்கு தான் அரசு.

'கழுமரம் ஏற்றுதல்' என்று ஒரு தண்டனை இருந்தது. 10 அல்லது 12 அடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கடப்பாரையின் முனையில், குற்றவாளியின் ஆசனவாய் பகுதியை நுழைத்து விடுவர். அது உடலின் ஒவ்வொரு பாகமாக ஊடுருவி வாய் வழியாக வெளியேறும். உயிர் உடனடியாகப் போகாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் போகும். சித்ரவதை என்ற சொல்லுக்குப் பொருத்தமான தண்டனை என்றால் அது இதுதான். நவீன உலகில் அது போன்ற தண்டனைகள் நடைமுறையிலில்லை. இருந்தால், இந்த மனிதாபிமான மகானுபாவர்கள் என்ன சொல்வர்?

'எத்தகைய கடுமையான குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிப்பதில்லை' என, உலகில், 102 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளதை, தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள், உதாரணமாகக் காட்டுகின்றனர். அந்த, 102 நாடுகளில், 86 நாடுகள் மீண்டும் மரண தண்டனையை பின்பற்றத் துவங்கியுள்ளதை வசதியாக மறந்து விடுகின்றனர். ரத்து செய்த நாடுகளே மீண்டும் பின்பற்றத் துவங்கியுள்ளன என்றால், தூக்கு தண்டனை அவசியம் என்பதுதானே நிதர்சனம்.

தூக்கு தண்டனை விதிக்கப்படவே கூடாது என வாதிடுபவர்கள் கூட, 'அரிதிலும் அரிதான குற்றங்களைச் செய்தவர்களுக்கு, தூக்கு தண்டனை தான் தக்க தண்டனையாக இருக்கும்; அத்தகையவர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்க கூடாது' என, கருத்துத் தெரிவித்து உள்ளனர். அதைத்தானே நீதிமன்றங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

கொடூரமாகக் கொலை புரிந்துள்ள மாபாதகர்களுக்கும், தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரைப் பறித்தவர்களுக்கும் தானே தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. சாதாரண திருட்டு, வழிப்பறி, பிக்பாக்கெட் பேர்வழிகளுக்கு ஒன்றும் தூக்கு தண்டனை வழங்கப் படுவதில்லையே. தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறங்குவதுபோல் கண்களை இறுக்க மூடியவாறு படுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் உலக நடப்பைப் புரிந்து கொள்வது எப்போது?

ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் உயிரை பறித்தவனுக்கே, தண்டனை கூடாது என்றால், சாதாரண திருட்டு, வழிப்பறி, ஜேப்படி, கொள்ளை, சங்கிலி பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மட்டும் சிறை தண்டனை வழங்குதல் நியாயமா? சிறையிலுள்ள கைதிகள் அனைவரையும் விடுவித்து, நாட்டிலுள்ள சிறைச் சாலைகளுக்கு மூடுவிழா நடத்தி விடலாமே! சிறைச்சாலைகளையே மூடிய பின் காவல்துறைக்கு என்ன வேலை; கோர்ட்டுகளுக்குத்தான் என்ன வேலை?

கொலைக் குற்றவாளிகளுக்கு கருணை காட்டச் சொல்லி கொடி பிடிக்கும் கோமான்களுக்கு ஒரு கேள்வி... எல்லையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களும், முப்படைகளிலுமுள்ள ஜவான்களும், ஆபீசர்களும், 'நாங்களும் ஜீவகாருண்யத்தைப் பின்பற்றப் போகிறோம். எதிரியாக இருந்தாலும் சரி; யாராக இருந்தாலும் சரி. உயிர்க் கொலை புரிய மாட்டோம்; துப்பாக்கியால் சுட மாட்டோம்' என, முழங்கத் துவங்கினால், என்ன செய்வீர்கள்?தூக்கு தண்டனை என்ற ஒன்று அமலில் இருக்கும்போதே, நாட்டில் கொலைக் குற்றங்களும், வன்முறைகளும் மலிந்து கிடக்கின்றன.

உச்ச நீதிமன்றம் சமீபகாலமாக வித்தியாசமான தீர்ப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், 'ஒரு ஆணும், பெண்ணும் சம்மதித்து உறவு கொண்டால் அது தப்பேயில்லை' என்றது. வாரத்திற்கு முன், 'கள்ள காதல் என்பது ஒழுக்கக்கேடான விஷயமேயன்றி அது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமல்ல' என்றது.அந்த வரிசையில், தூக்கு தண்டனை தேவை என்று சொல்லுமா; தேவையே இல்லை என்று சொல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இ-மெயில்: essorresgmail.com

- எஸ். ராமசுப்ரமணியன்- எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement