Advertisement

இலக்கில்லா பறவைகளா இளைஞர்கள்?

கோவையில் போதையில் பள்ளிச் சீருடையில் தள்ளாடிய மாணவி.நாமக்கல்லில் மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆசிரியரின் சட்டையைப் பிடித்த மாணவன்.நடிகரின் கட்அவுட் வைக்க தாய் பணம் தராததால் பள்ளி மாணவன் தற்கொலை.- சமீப காலமாக நாம் படித்தவை இந்த செய்திகள். இதுபோல் இன்னும் பல நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நம் நாட்டின் வருங்கால துாண்கள் என்று நாம் கருதும் இளைஞர்கள் பலரின் நடவடிக்கைகள் இவ்வாறு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன?இன்றைய இளைஞர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்கள், கீழ்படிதலின்மை, ஆபாச எண்ணங்கள் ஆகியவை தான் அவர்கள் தடம் மாறுவதற்கு காரணம் என சட்டென பதில் சொல்லிவிடுகிறோம். ஆனால் பிரச்னையின் ஆழத்தை நன்கு ஆராய்ந்தால் கோளாறு அவர்களிடமிருந்து தொடங்கவில்லை, அது நிச்சயம் சமூகத்திலிருந்து தொடங்குகிறது என்று உணர்ந்து கொள்ளலாம். இங்கே 'சமூகம்' என்பது இளைஞர்களை சமூக பொறுப்புள்ள மனிதர்களாக்க வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் தான். காணாமல் போன குடும்ப உறவுகள் கூடி வாழும் இயல்புள்ளதே மனித சமூகம், காலப்போக்கில் அந்த இயல்பை மனித சமூகம் பறவைகளுக்கு மட்டுமே சொந்தமென கருதி இருந்துவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, அண்ணன், மாமா, அத்தை என்று இளைஞர்களிடம் அன்பு செலுத்த அரவணைக்க, ஒழுக்கத்தை போதிக்க, அறிவுரை வழங்க சொந்தங்கள் இருந்தன. ஆனால் இன்றைய தனிக்குடித்தன கலாசாரத்தில், உறவுகள் இருந்த இடத்தை தொலைக்காட்சி போன்ற அறிவியல் சாதனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. இதனால் தேவையற்ற சிந்தனைகளை மனதுக்குள் கொண்டு வரும் வாலிப வயதில் இளைஞர்களுக்கு கிடைப்பது தனிமை.
இந்த தனிமை தான் அன்பு, சுய ஒழுக்கம் என எல்லாவற்றிலிருந்தும் பல இளைஞர்களை வெகு துாரத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. காலத்திற்கேற்ப வசதிகள், பணத்தேவைகள் மாறலாம். ஆனால் இளைஞர்கள் மனதில் நல்ல ஒழுக்கத்தையும், நற்சிந்தனைகளையும், முதலில் விதைக்க வேண்டியது குடும்ப உறவுகளின் முக்கிய கடமையாகும். கடைச்சரக்காய் போன கல்வி இளைஞர்களிடையே இன்று நாம் வெகுவாகக் காணும் தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று நம் கல்வி முறை.
“உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற சமூக வேற்றுமையிலிருந்து மனித சமூதாயத்தை காக்கக் கூடிய ஒரே சர்வ நிவாரணி கல்வியே” என்றார் வீரத்துறவி விவேகானந்தர். அத்தகைய மாற்றத்தை வழங்கக் கூடிய கல்வியே இன்று இளைஞர்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வின் உச்சமாக மாறி இருக்கிறது. கல்வியின் அடிப்படைச் சாராம்சமே ஏற்றத்தாழ்வில்லா சமூகத்தை உருவாக்குவது தான். ஆனால் இன்று ஒவ்வொரு விலைக்கும் ஏற்றாற்போல் கல்வி என்ற நிலை அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்கள் அல்ல.
அறிவை வளர்ப்பதற்கே கல்வி என்ற நிலைமாறி பெற்றோர்களின் கவுரவத்துக்காகவே கல்வி என்ற நிலை வந்தது தான். பிள்ளைகளின் லட்சியங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் லட்சங்களை வாரி இறைத்து மார்க், மார்க் என்று பணம் கட்டி ஓடவிடும் பந்தயக் குதிரைகளைப் போல் விரட்டுவோர் எல்லாம் தெரிந்த நம் சமூக அங்கத்தினர்களே.தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொள்கிற இளம் பிஞ்சுகளின் உயிர் பலிகளுக்கு முதல் பொறுப்பு ஏற்க வேண்டியவர்களும் இவர்களே. இதற்கு மாறாக தன் பிள்ளை என்ன படிக்கிறான் என்று அறியாத பாமர பெற்றோர்களும் இங்கே நம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். படிப்பை முடித்து விட்டு தனக்கான வேலையை தேடும்போது தான் ஒவ்வொரு இளைஞனும் ஏற்றத்தாழ்வான கல்வியால் பாதிக்கப்பட்டதை உணர்கிறான். இன்றைய உலகம் புத்தகத்தை மட்டுமே படித்து அதிகம் மார்க் எடுக்கும் இளைஞனுக்காக அல்ல, தன்னம்பிக்கையும், தனித்திறனும் உள்ள இளைஞர்களுக்கானது என்பதை அவர்கள் கல்வி கற்கும் போதே மனதில் பதிய வைக்க வேண்டியது நமது பொறுப்பு.
கற்றுக்கொடுங்கள் நல்லதை குட்மார்னிங், குட்நைட், ஹேப்பி பெர்த்டே, ஹேப்பி நியூ இயர், இவை தவிர தேவையற்ற அநாகரிகங்களை மேலை நாடுகளிலிருந்து காப்பியடிக்கிற நாம், அந்த நாடுகளில் நாம் காணும் நல்ல விஷயங்களை இளைஞர்களின் மனதில் விதைப்பதில்லை. உதாரணமாக மேலை நாட்டு மக்களிடம் உள்ள தாய்மொழிப் பற்று, மந்திரி மகன் முதல் மாடுமேய்க்கும் தொழிலாளி மகன் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி என சொல்லிக் கொண்டே போகலாம். தமிழை செம்மொழி என்ற ஆசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கிறோம், தமிழ் எங்கள் உயிர்மூச்சு என்றும் இளைஞர்களுக்கு உரக்க பாடம் நடத்துகிறோம். ஆனால் சத்தமில்லாமல் நம் வீட்டு வாசல் கோலங்களில் கூட ஆங்கிலம் தான் எட்டிப்பார்க்கிறது.
“தாய்மொழிக் கல்வி தாய்ப்பால் போல” என்பதை உணர்ந்து நம் பிள்ளைகளுக்கு தாய்மொழிக் கல்வி மூலம் உலக விஷயங்களை மனதில் பதிய வைக்க வேண்டும். பள்ளி கல்லுாரிகளில் பிள்ளைகளை சேர்க்கும் போது அவன் படித்து பண்டிதனாக மட்டும் வரவேண்டுமென நினைக்காமல் ஸ்கவுட், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவைச் சங்கம், விளையாட்டு போன்ற புற ஒழுக்கங்களை கற்றுத் தரும் அமைப்பில் பங்கு பெறச் செய்ய வேண்டும். மிக முக்கியமாக சமூகத்தில் அன்றாடம் நடப்பதை குறித்து அறிந்து கொள்ள செய்ய வேண்டும். அதற்கு செய்தித்தாள்களை வாசிக்க இளைஞர்களை பழக்க வேண்டும்.
தலைவர்கள் பற்றியும், சமூகம், பொருளாதாரம், அறிவியல் உண்மைகள் ஆகியவை பற்றிய நல்ல புத்தகங்களை வாசிக்க துாண்ட வேண்டும். மறைந்த மாமேதை அப்துல் கலாமின் வேண்டுகோளான “ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நல்ல பயனுள்ள புத்தகத்தை படிக்க வேண்டும்” என்பதை நம் வீட்டில் உள்ள இளைஞர்களிடம் பழக்கப்படுத்த வேண்டும். ஜாதி, மத துவேஷங்களை இளைஞர்களின் மனதில் விதைக்காமல், பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதிக்க கற்றுக்கொடுங்கள். இருங்கள் முன்மாதிரியாய் உங்களின் முன்மாதிரி யார்? என்று மாணவர்களிடம் கேட்டால் பல மாணவர்களின் பதில் சினிமா நடிகரின் பெயராகஉள்ளது. தான் வாழ்க்கையில் முன்னேற யாரை பின்பற்றுவது என்ற கேள்வியே அவர்களிடம் எழவில்லை. நான் காவல்துறை அதிகாரி ஆவேன், ராணுவ வீரன் ஆவேன், ஆசிரியர் ஆவேன் என்று கூறும் பல மாணவ இளைஞர்களால் நான் காமராஜர் போல் துாய்மையான அரசியல் தலைவராவேன், அப்துல் கலாமைப் போல் இளைஞர்களின் நேசத்திற்குரியவராவேன் என்றோ தொழிலதிபராக உயர்வேன் என்றோ சொல்லத் தயங்குகின்றனர்.
இதற்கு காரணம் சமூகம் பற்றியும் நம் தலைமுறை வரலாறு பற்றியும் அவர்களிடம் உள்ள அறியாமையே. இவ்வாறு ஒரு இலக்கில்லாப் பறவைப் போல பறந்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் 'ரோல் மாடல்'களாக நாம் இருக்க வேண்டும்.இளைஞர்கள் பிளாஸ்டிக் பூக்களல்லஅவர்கள் பட்டாம்பூச்சிகள், அவை கவர்ச்சிகரமான மலர்களைத் தேடித் தான் செல்லும், அந்த இளைஞர்களுக்கு எதற்கும் பயன்படாத காகிதப் பூக்களாக இல்லாமல் அவர்கள் எதிர்காலத்தில் வாழ்வில் சிறக்க தேனை வழங்கும் பூக்களாக நாம் ஒவ்வொருவரும் இருப்போம்!-முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறைதேவாங்கர் கலைக் கல்லுாரிஅருப்புக்கோட்டை.78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement