Advertisement

சசிகுமாரின் சக்சஸ் ரகசியம்

முதல் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் இவருக்கு முதலிடம். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என எடுத்த துறைகளில் எல்லாம் சாதித்து வருபவர் மண்ணின் மைந்தர் இயக்குனர் சசிகுமார். 'தாரை தப்பட்டை' பட வேலைகளுக்கு மத்தியில் மதுரை வந்தவர், தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...* தற்போதைய படம்?பாலா அண்ணன் இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்து வருகிறேன். அவரது இயக்கத்தில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.
* 'பிரம்மன்' படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளியோ?'தாரை தப்பட்டம்' கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கையில் காயம். மூன்று மாத ஓய்வுக்கு பிறகு இப்பத்தான் படப்பிடிப்பை துவக்கி முடிக்க உள்ளோம்.
* தாரை தப்பட்டம் கிராமத்து கதையா?தஞ்சாவூரை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். வரலட்சுமி சரத்குமார் தான் ஹீரோயின். நன்றாக பண்ணியிருக்காங்க.
* படங்களில் நட்புக்கு முக்கியம் கொடுக்கிறீர்களே?கொடைக்கானல் கான்வென்ட்டில் படித்தவன் நான். பள்ளியில் நட்பு வட்டாரம் அதிகம். இப்ப வரையும் அந்த நட்பு தொடருது. சுப்பிரமணியபுரம், நாடோடி போன்ற படங்கள் தானாக அமைந்தவை.* விழாக்களில் நீங்கள் புறக்கணிக்கப்படுவதாக இயக்குனர் பிரபாகரன் தெரிவித்துள்ளாரே?என்னை பொறுத்தவரையில் விழாவா, வேலையா என்றால் வேலைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். விழாக்கள் என்னை புறக்கணிக்கவில்லை. விழாக்களை நான் தான் புறக்கணித்திருக்கிறேன். விழாக்கள் என்றால் நிறைய பேச வேண்டும்; எனக்கு பேச வராது. முதல் படமான சுப்பிரமணியபுரம் வெற்றி விழாவிற்கு அழைப்பு வந்த போது முதலில் தயங்கினேன்.இயக்குனர் பாலா அண்ணன் தான்,''முதல் படம் கட்டாயம் போ,'' என்றார்.அதனால்தான் அதில் பங்கேற்றேன். என் படங்களுக்கு ஆடியோ விழா கூட நடத்துவதில்லை. பிரபாகரன் என் அருகில் இருந்தும் கூட என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. 'சுந்தரபாண்டியனை' விட பெரிய படமாக கொடுப்பார்.
* கிராமத்து படங்களிலேயே அதிகம் நடிக்கிறீர்களே?'சுப்பிரமணியபுரம்' ஏற்படுத்திய தாக்கம் தான். அதில் கிராமத்து இளைஞராக நடித்ததால் என்னை அப்படியே 'பிக்ஸ்' பண்ணிவிட்டனர். சசிகுமார் இப்படி தான் இருப்பார் என நம்புகின்றனர். எல்லோரும் எதிர்பார்க்கிற பாணியில் நான் பயணிக்கிறேன். அந்த 'ரூட்ல' போறது தான் சவுரியமாகவும் படுது.
* இயக்குனராவது சிறிய வயது கனவா?நான் ஏழாம் வகுப்பு படித்த காலகட்டம். சினிமா படம் பார்க்கும்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி பிறந்தது. இவர்கள் இப்படி நடிக்கிறார்களே என ஆராய்ந்த போது, இயக்குனர் தான் அவர்களை இயக்குவது தெரிந்தது. அப்படி தான் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை பிறந்தது.கொடைக்கானலில் படித்த போது பள்ளியில் இசை ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் வசந்தன். நாங்கள் சந்திக்கும் போது சினிமா கனவை பத்தி பேசுவோம். சுப்பிரமணியபுரம் இயக்கிய போது அவரையே இசை அமைப்பாளராக போட்டேன்.
* இயக்குனராக விரும்பிய நீங்கள் நடிகரானது எப்படி?சுப்பிரமணியபுரம் கதையை முதலில் ஒரு பிரபல நடிகரிடம் தெரிவித்தேன். அவர் கதையை கேட்டு விட்டு பதில் கூறவில்லை. பிறகு நாமே நடித்தால் என்ன எனத் தோன்றியது. உண்மையில் அந்த நடிகர் நடித்திருந்தால் நான் நடிக்க வந்திருக்கவே மாட்டேன். மேலும் சுப்பிரமணியபுரத்தில் நடித்த இயக்குனர் சமுத்திரகனி தன்னிடம் ஒரு கதை இருப்பதாக தெரிவித்தார்.அப்போது அவரிடம், ''சுப்பிரமணியபுரம் வெளியாகி மக்கள் என்னை நடிகராக ஏற்றால் உங்கள் படத்தில் கட்டாயம் நடிக்கிறேன்,'' என்றேன். அதன்படி சுப்பிரமணியபுரம் 'ஹிட்' ஆனதும் அவரது 'நாடோடி' படத்தில் நடித்தேன்.
* சமீபத்தில் பார்த்து ரசித்த படம்?காக்காமுட்டை, எப்பவுமே நடிகனாகவோ, இயக்குனராகவோ படம் பார்க்க மாட்டேன்.தியேட்டருக்கு சென்று ரசிகனாக தான் பார்ப்பேன்.
* பிடித்த இயக்குனர்கள்?பாலுமகேந்திரா, பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன்.
* நிஜ வாழ்க்கையில் காதலர்களை சேர்த்து வைத்த அனுபவம் உண்டா?நாடோடியில் நடித்த போதும்... இப்போது வரைக்கும், 'சார், நாங்கள் உண்மையிலேயே காதலிக்கிறோம். எங்களை சேர்த்து வையுங்க,' என ஏராளமானோர் போன் செய்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement