Advertisement

ஓடி விளையாடு பாப்பா! நாளை தேசிய விளையாட்டு தினம்

1905 ஆக.,29ல் அலகாபாத்தில் பிறந்து ஹாக்கியில் சிறந்து விளங்கியவர் ராணுவ மேஜர் தயான் சந்த். அவரது தலைமையில் விளையாடிய இந்திய ஹாக்கி அணி சுதந்திரம் அடைவதற்கு முன் 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அவரது விளையாட்டு திறன்தான் அவருக்கு 'ஹாக்கி விசார்டு' புனைப்பெயரை பெற்றுத்தந்தது. 42 வயது வரை ஹாக்கியில் முத்திரை பதித்து ஓய்வு பெற்றார். அவரது பிறந்தநாளே ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
நாட்டின் உயர்ந்த மூன்றாவது விருதான 'பத்ம பூஷன்' இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்தநாளை பல கல்வி நிறுவனங்கள் தங்களது நிறுவன விளையாட்டு தினமாக கொண்டாடிவருகின்றன. இளம் பிஞ்சுகளின் மனதில் இப்போது முதலே விளையாட்டிற்கான அன்பையும், மரியாதையையும் விதைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதே நாளில்தான் ஜனாதிபதி மாளிகையில் நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, தயான் சந்த் விருதுகள் 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விளையாடும் வாய்ப்பு யாருக்கு கிராமப்புற மாணவர்களிடம் தனித்திறமைகள் புதையல்களாக ஒளிந்துள்ளன. அதை தோண்டியெடுத்து பட்டை தீட்டும்போதுதான் அவர்கள் வைரங்களாக ஜொலிக்க இயலும். நகர்ப்புற பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டு பயிற்சியில் சேர்த்துவிடுவர். ஆனால் கிராம மாணவர்களுக்கு அது எட்டாக்கனி. நம்நாட்டில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமீபத்தில் பேட்மின்டனில் தங்கத்தை தவறவிட்ட சாய்னா நேவாலின் சாதனை பெருமைக்குரியது. ஒலிம்பிக்கில் கால்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், தடகளத்தில் நமது முத்திரையை பதிக்க தவறிவிட்டோம். விளையாட்டு மட்டுமே இளம் தலைமுறையினரை ஜாதி,மத, இன வேறுபாடின்றி ஆரோக்கியமான போட்டியில் கலந்து கொள்ள செய்கிறது. சிறு வயதில் விளையாட்டை விளையாட்டாக துவங்கியவர்கள் கூட புகழின் உச்சியை அடைந்துள்ளனர்.
சிறுவயது முதலே ஒருவன் விளையாட்டை நேசிக்க துவங்கினால் ஆயுள் முடியும்வரை அது மகிழ்ச்சியை தரும். ஆனால் இன்றைய இளைஞர்கள் ' உள்ளங்கையளவு அலைபேசியில் அடைக்கலமாகி, வாக்கிங்கை மறந்து வாட்ஸ்அப்பிலும் டென்னிசை மறந்து டுவிட்டரிலும், நெட்பாலை மறந்து இன்டர்நெட்டிலும் 'அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இதிலிருந்து இவர்களை விளையாட்டினால் மட்டுமே மீட்க முடியும். விளையாட்டில் சர்வதேச, தேசிய பதக்கங்களை அள்ளும் இளம் தலைமுறையினரை கல்வி நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன.பள்ளி, கல்லுாரிகளில் உள்ள ஏதாவது ஓர் அணியில் தங்கள் குழந்தைகள் சேர்ந்து பயிற்சி எடுக்க முனையும்போது பெரும்பாலான பெற்றோர் தடையாக நிற்கின்றனர். குழந்தைகளின் மதிப்பெண் குறைந்துவிடும் என நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. இரண்டுமே குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகள் மட்டுமே. அப்படியென்றால் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் முழுக்கவனம் செலுத்தும் அனைத்து குழந்தைகளும், 100 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டுமே.
விளையாடும் மாணவர்களால் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் சிந்தனை செலுத்த இயலும். வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சீரான ரத்த ஓட்டத்தினால் சிந்தனைகள் சீராகி, எதிர்மறை எண்ணங்கள் மறையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் விடுபடுகின்றது. உடல்நலம், மன நலம் என இரண்டுமே மேம்படுவது விளையாட்டில் மட்டும் சாத்தியம்.அரசு எடுக்கும் முயற்சிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டிற்கென தனிப்பல்கலையை சென்னையில் அமைத்தது தமிழக அரசு. 2005ல் தனது பணியை துவக்கிய இப்பல்கலை இன்றுவரை ஆயிரக்கணக்கான உடற்கல்வி ஆசிரியர்கள், யோகா பயிற்றுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களை உருவாக்கி உள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு மருத்துவக்கல்லுாரியில் மூன்று இடங்கள், தொழில் நுட்ப கல்லுாரிகளில் 500 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 51 வித விளையாட்டுக்களை அண்ணா பல்கலை அனுமதித்துள்ளது. அனைத்து கல்லுாரிகளுமே பள்ளி முடிந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு
கட்டணம் ஏதுமின்றி விரும்பும் பாட பிரிவுகளை கொடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்துகின்றன. பள்ளிகளிலும் இதே போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன. தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்கிறது. மத்திய அரசு, மாநில விளையாட்டு சம்மேளனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், பள்ளிகள் இணைந்து முயற்சி எடுத்தால் அனைத்து விளையாட்டிலும் சர்வதேச அளவில் இந்தியா அணி முதலிடம் பிடிக்கும்.பெற்றோரின் பங்கு என்ன விளையாட்டிற்கான முதல் உத்வேகம் கொடுக்கப்பட வேண்டிய இடம் நமது வீடுதான். குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்து பழக்கங்களுடன் வளர்கின்றனரா என பெற்றோர் கவனிக்க வேண்டும். இக்குழந்தைகள்தான் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பின்னாளில் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். குழந்தைகளின் விளையாடும் பழக்கத்தை ஊக்குவிக்க அவர்கள் தவறக்கூடாது. பள்ளிகளும் விளையாட்டை விருப்பத்தோடு கட்டாய பாடமாக்க முனைய வேண்டும்.
கல்லுாரி, பல்கலைகள் விளையாட்டை ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். சர்வதேச போட்டிகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல், நமது பிள்ளைகளை அதில் ஈடுபட ஊக்குவிப்போம். விளையாட்டை முழுவதும் நம்பிய தயான்சந்த், பி.டி.,உஷா, சச்சின், விஸ்வநாதன் ஆனந்த், லியாண்டர் பயஸ், சாய்னா நேவால், பைசாங் பூட்டியா, அபிநவ் பிந்த்ரா போன்றோர் கைவிடப்படவில்லை என்பதை உணர்வோம். விளையாட்டை நேசிப்போம்!--முனைவர். கி.ஜமிலா ஜோதிபாய்,உடற்கல்வி இயக்குனர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி,விருதுநகர். 90951 10111

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement