Advertisement

மண்ணை சுமந்த பெருமான், நம்மை சுமப்பது எப்போது?:நாளை மதுரை பிட்டுத்திருவிழா

விழாக்கள் என்பவை மரபுகளின் தொடர்ச்சியாகவும், மனித நாகரிகத்தின் முதிர்ச்சியாகவுமே, உலகில் வாழும் அனைத்து இனக்குழுக்களாலும் கொண்டாடி மகிழப்படுகின்றன. பொருளற்ற கொண்டாட்டங்களாக அவற்றை அமைத்து கொள்ள விரும்பாத நம் முன்னோர்கள் அவற்றுள்ளும் கூட்டு வாழ்வியலை, கலாசார கூறுகளை கட்டமைத்து மகிழ்ந்தனர்.

பகை, சண்டை, பொறாமை ஆகியவற்றில் எல்லாம் விழாதிருக்க வேண்டும் என்பதற்காகவே திருவிழாக்களை அமைத்து கொண்டதால் தான், சிலப்பதிகாரம் கூறுவதை போன்று இன்றைக்கும் மதுரை, விழாமலி மூதுார் என்ற சிறப்புடன் விளங்குகிறது.
பாண்டிய பேரரசனின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்து, பாண்டிய மன்னன் குதிரை வாங்குவதற்காக வழங்கிய பொன்னை தனக்காக கோயில் கட்டி தன்னையே நினைந்து கசிந்துருகி வாழ்ந்த மாணிக்கவாசகருக்காக மதுரையம்பதியின் மண்ணை சுமந்த சிவனின் திருக்கோல நிகழ்வே பிட்டுக்கு மண் சுமந்த படலம். திருவிளையாடற் புராணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு இன்றைக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய ஒன்றெனில் அது மிகைச் சொல்லன்று.
ஆண்டாண்டு காலமாய் மதுரையில் நிகழ்ந்து வரும் பிட்டுத்திருவிழாவை வெறுமனே ஆன்மிகம் சார்ந்த நிகழ்வாக காணாமல், அக்காலத்தில் நிலவிய சமூக ஒழுங்கை பகுத்தறிந்து பார்க்க வேண்டிய காலப்பின்னணியில் நாம் வாழ்கிறோம்.

ஒருங்கிணைந்த மக்கள் சக்தி :
வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; ஒரு கட்டடத்தில் இரு கரைகளையும் உடைத்துக் கொண்டு நகருக்குள்ளேயே பாயும் நிலை; எப்போது வைகை நதியால் கரை பெயர்த்து எறியப்படும் என்று தெரியாத அச்சம் நிறைந்த சூழல்; அரசனின் படை களமிறங்கி என்ன செய்து விட முடியும்? வேறு வழியில்லை. இங்கே மக்கள் சக்தி ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பாண்டியன் தண்டோரா செய்கிறான். பொங்கிப்பீறிடும் வைகை பூம்புனலை கரை கட்டித் தடுக்க வேண்டுமானால், வீட்டுக்கு ஒருவர் வந்து களப்பணியாற்ற வேண்டும்.மக்கள் தங்களின் வீட்டிலிருந்த மண்வெட்டி, கடப்பாரை, மண்கூடையுடன் வெள்ளமெனத் திரண்டு வருகிறார்கள். ஒரு புறம் வைகை; மறுபுறம் மக்கள். பணி நடைபெறுகிறது. நகரிலுள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் வீட்டுக்கொருவர் வந்து விட்டனரா என்பது குறித்து கணக்கெடுத்தல் நிகழ்கிறது. அப்போது வன்னிமரத்தின் கீழே ஒரு இளைஞர் படுத்திருக்கிறார். அவரை தட்டியெழுப்பி மன்னரின் சேவகர் விபரம் கேட்கிறார்.வயதான வந்திக்கிழவிக்கு உதவும் பொருட்டு வந்த அந்த இளைஞர், வைகை கரையின் வெள்ளப் பணியில் கிழவிக்காக வேலை செய்ய ஒப்பு கொள்கிறார். அதற்கு கூலியாக அதுவும் வேலை செய்யும் முன்பே கிழவி கொடுத்த பிட்டு உணவை வயிறார உண்கிறார். பிறகு மண் வெட்டி, கூடையோடு மதுரையில் மண்ணை அள்ளி தன் தலையில் சுமந்து கொண்டு கரையோரம் செல்கிறார். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு தானே. வன்னி மரத்தடியில் சற்றே ஓய்வெடுக்க முனைந்தவர் கண்ணயர்ந்து விடுகிறார். இவற்றையெல்லாம் மன்னரின் சேவகர் கேட்டறிந்து கட்டுமான பணிகளை பார்வையிட வந்த பாண்டிய மன்னரிடம் போய் சொல்கிறார். நம் மொழியில் சொல்வதனால் 'போட்டு கொடுக்கிறார்'.கடுஞ்சினம் கொண்ட மன்னர்
குலசேகரபாண்டியன் அந்த இளைஞரை தன்னிடமிருந்த கம்பால் 'லத்தி சார்ஜ்'
செய்கிறார். அவரது முதுகில் விழுந்த அடி, எல்லோருக்கும் உறைக்கிறது. அப்போது தான் தெரிகிறது சிவபெருமான், வந்திக்கு உதவும் பொருட்டு வேடம் தரித்து வந்தது.

உணர்த்துவது என்ன:
பிட்டுக்கு மண் சுமந்த திருப்படலம் உணர்த்துகிற செய்தி என்ன?
பொது சொத்துக்களை மராமத்து செய்யும் பணியில் சிவபெருமானே ஈடுபட்டிருக்கிறார். அதை ஒரு செய்தியாக மக்களுக்கு குறிப்பு உணர்த்தி இருக்கிறார். பண்டைய காலத்தில் குடிமராமத்து என்றொரு சமூக ஒழுங்கு விதியாகவும் சட்டமாகவும் கட்டளையாகவும் இருந்திருக்கிறது. அதற்கு அரசன் மட்டுமல்ல.
சிவபெருமானே ஆனாலும் கட்டுப்
பட்டவர் தான்.
ஏனெனில் 'நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக. உமது உடம்பெல்லாம் கண்ணாகி சுட்ட போதிலும், நெற்றிக் கண் திருப்பினும் குற்றம் குற்றமே' என்று வாதாடிய பரம்பரையல்லவா, மதுரையில் வாழும் மக்கள். நீதியிலிருந்து தவறுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களே. இக் கதை உணர்த்தும் செய்திகளில் இதுவும் ஒன்று தான். பிட்டுக்கதை
இதை தான் புட்டு வைக்கிறது.
சிவனை தரிசித்து மகிழ்கிறோமே தவிர, அவர் துாக்கி சுமந்த வைகையையும், அதன் மண்ணையும் எந்த அளவிற்கு இழிவாக வைத்திருக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க தவறி விடுகிறோம். பிட்டுத்திருவிழா நடக்கும் இடத்திற்கு அருகிலேயே வைகை மிக மிக மோசமாக மாசடைந்து சீரழிந்து கழிவுகளையே சுமந்து செல்லும் சாக்கடையாக கூனிக்குறுகி வங்கக்
கடலோரம் நோக்கி பயணிக்கிறது.

வைகையின் நிலை என்ன:
தேவர்கள் வைகை கடலை கடைந்தால், அதிலிருந்து அமுதம் வராது. வைகைக்குள் வாரித்தள்ளிய நம் ஒவ்வொருவர் வீட்டு கழிவும், கூளமும் தான் வெளிவரும். இன்று வைகையின் ஒரு கரையில் இறங்கி மறுகரையை நோக்க, வைகையை கடக்க முயலும் எவரும் முகம் சுளிக்காமல், மூக்கை பிடிக்காமல் சென்று விட்டார்கள் என்றால், அதுதான் உலகின் முதல் அதிசயமாக இருக்கும்.
விழாக்களும், சடங்குகளும் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அல்லது புனையப்பட்டனவோ, அவற்றின் உட்
பொருளை உணராமலே வெறும் அடையாளமாக்கி, இயந்திரமாக பின்பற்றி கொண்டிருக்கிறோம். நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தும் கடவுளின் மற்றொரு வடிவம். இதை மக்கள் மறக்கும்போதெல்லாம், உரிய பதிலடி அவ்வப்போது கிடைத்துக்
கொண்டுதானிருக்கிறது. அதற்கு பிறகும் வாளாவிருக்கும் போது தான், அதன் சினம் ஒவ்வொரு மக்களின் மீதும் பாய்கிறது.பிட்டுத்திருவிழா என்பது வைகைக்கு மட்டுமானதாகவோ அல்லது மதுரைக்கு உரியதாகவோ எண்ணி விட வேண்டாம். எங்கெல்லாம் நீர்நிலைகள் உள்ளனவோ, எவையெல்லாம் பாரம்பரிய பெருமைக்குரிய வளங்களை கொண்ட ஊர்களோ, அவை எல்லாவற்றிலும் பிட்டுத்திருவிழா நடைபெற வேண்டும். ஏனென்றால் சிவன் துாக்கி சுமந்தது, வைகையின் மண்ணை மட்டுமல்ல. இந்த பூப்பந்தின் மண்ணை... நிலமகளின் ஒப்பற்ற செல்வத்தை... என்ற சிந்தையோடு பிட்டுத்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வதே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைமாறு.'ஈடிணையற்ற இயற்கையின் வளத்தை எவரும் சுரண்டுவதற்கோ அல்லது துாய்மைக்கேடு ஆக்குவதற்கோ ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்' என்று
உறுதியெடுக்கும் இந்த நொடியிலிருந்து தான் மண்ணை சுமந்த பெருமான்,
உங்களையும், என்னையும் மகிழ்ச்சியுடன் துாக்கி சுமப்பார். பொருள் பொதிந்த பிட்டுத்
திருவிழாவை அருள் நிறைந்து ஆக்கப்பூர்வமாக்குவோம்.- ரா.சிவக்குமார்,
சமூக சிந்தனையாளர், மதுரை.99948 27177.rrsivayahoo.com.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement