Advertisement

மாப்பிள்ளை சிங்கம் விமல்

''இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு,'' என்ற பஞ்ச் பேச்சால் 'பசங்க' படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை திருடிய 'களவாணி'. சரசர சாரை காற்றாக... நடிப்பை அள்ளி வீசி வாகை சூடிய வெற்றி நாயகன். கலகலப்பாக காமெடியில் கலக்கும் 'கேடி பில்லா'. காதல் பார்வையால்அந்த காதலையே கவர்ந்து இழுக்கும் 'கில்லாடி ரங்கா'. 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' அதில் இவர் தான் 'தேசிங்கு ராஜா'. இதுவரை மணப்பாறை சிங்கம், இனி காமெடியை கர்ஜிக்கும் 'மாப்பிள்ளை சிங்கம்'. இப்படத்தில் 'மாஸ் ஹீரோ'வாக களமிறங்கும் விமல் தினமலர் வாசகர்களுக்காக அளித்த பளிச் பேட்டி.
* நடிப்பு அனுபவம் எப்படி?கூத்துப்பட்டறையில் இருந்த போது சினிமா ஆர்வம் வந்தது. பின் கிரீடம், கில்லி, குருவி போன்ற படங்களில் சில காட்சிகளில் நடித்தேன். இப்படங்களின் ஹீரோக்களின் நடிப்பை பார்த்து நானும் நல்ல நடிகனாக வேண்டும் என நினைத்து முழுநேர நடிகனாக களமிறங்கினேன்.
* உங்கள் சினிமா பயணம்?'பசங்க' படத்திற்கு பிறகு ஒரே மாதிரி கதை களம் கொண்ட படங்களாக வந்தன. அதனால் கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. 'மஞ்சள் பை' படத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை விட நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என முடிவு செய்து நடிக்கிறேன்.
* ஹீரோ பட்டம்?அந்த காலத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் எளிமையாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் ஹீரோ என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இன்று, அப்படியல்ல படம் வெளியான நாள் முதல் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் படத்தை பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அதனால், இன்றைய சூழ்நிலையில் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டினால் தான் தொடர்ந்து ஹீரோவாக இருக்க முடியும்.
* காமெடிக்கு பயிற்சி எடுக்கிறீர்களா?காமெடிக்கு பயிற்சியா? காமெடி என்பது நம் உடன் பிறந்திருக்க வேண்டும். காமெடி உணர்வு உள்ளவர்கள் நம்மை சுற்றியிருந்தால் போதும் காமெடியில் நாமும் கலக்கலாம்.
* நடிகர் சங்க தேர்தல் குறித்து...இதுவரை அதுகுறித்து யோசிக்கவில்லை. யார் வந்தாலும் சரி... சங்கம் நல்ல முறையில் இயங்க வேண்டும்.
* கிராமத்து படங்களில் தான் நடிப்பீர்களா?'இஷ்டம்' படத்தில் மாடர்ன் ஹீரோவாக நடித்தேன். அன்று, கட்டாயத்திற்காக நடித்த ஒரு சில படங்கள் நன்றாக ஓடவில்லை. இப்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் கிராமத்து குடும்ப படங்களில் நடிக்கிறேன்.
* அடுத்த படம்?இயக்குனர் எழில் உதவியாளர் ராஜசேகர் இயக்கத்தில் 'மாப்பிள்ளை சிங்கம்' படம் வெளியாகவுள்ளது. இதில் அஞ்சலி, சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படம் என்னை ஒரு 'மாஸ் ஹீரோ'வாக காட்டும். அடுத்து இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கும் 'மன்னர் வகையறா' படத்தில் நடிக்கிறேன்.
* நீங்கள் விரும்பும் சினிமா மாற்றம்?அதிக பொருட்செலவில் படம் எடுக்கிறோம் என்று பணத்தை விரையம் செய்யாமல், கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். உதாரணமாக 'பாகுபலி' போல படங்கள் வெளிவர வேண்டும்.
* மதுரை குறித்து?எனக்கு மணப்பாறை, மனைவிக்கு வாடிப்பட்டி. அடிக்கடி வந்து போகும் ஊர் மதுரை. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். உணவுக்கு பிரபலமான ஊர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement