Advertisement

மக்கள் பங்களிப்புடன் சமுதாயப் பணி

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், கிராமப்புறங்களில் அனைத்து பொதுவேலைகளையும் அந்தந்த கிராமத்தினரே கலந்தாலோசித்து, இன, மத வேறுபாடு இன்றி செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆட்சியாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களை ஈடுபடுத்தி பொதுப்பணிகளையும், அவசரப்பணிகளையும் நிறைவேற்றினர். மன்னர்கள் காலத்திலேயே இந்த வழக்கம் இருந்துள்ளது.“குடி செய்வலென்னு மொருவற்குத் தெய்வமடிதற்று தான் முந்துறும்” என்றார் திருவள்ளுவர்.என் குடியை உயர்வடையச் செய்வேன் என்று முயற்சி செய்பவனுக்குத் தெய்வம் துணை செய்ய, தன் ஆடையை இறுக கட்டிக் கொண்டு உதவிக்கு வரும் எனக்கூறியுள்ளார்.

விடுதலைக்கு முன்பு:நமது நாடு விடுதலை அடைந்த சமயத்தில் பெரும்பாலான கிராமங்களில், குடிநீர், சாலைப்போக்குவரத்து, மின்சாரம், தெருவிளக்கு, பள்ளி போன்ற வசதிகள் கிடையாது. குடிநீருக்கு அந்தந்த கிராமத்தினரே ஒன்று சேர்ந்து குளம் வெட்டினர். ரோடுகளுக்கு பதிலாக மாட்டுவண்டி பாதைகள் மட்டுமே இருந்தன. அவ்வப்போது கிணற்று சரளையை கொட்டி பாதையை சரி செய்து கொண்டனர்.மோட்டார் வாகன போக்குவரத்து கிடையாது, மின்சாரம், தெருவிளக்கு போன்ற வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் ஆங்காங்கே தெருமுனைகளில் பெரிய எண்ணெய் விளக்குகளை ஏற்றிக்கொண்டனர். ஆரம்ப பள்ளிகள் 5 கி.மீ., துாரத்திற்கு ஒன்று என இருந்தன. உயர்நிலைப்பள்ளிகள் 10 கி.மீ., துாரத்தில் இருந்தன. மாணவர்கள் கட்டாயமாக நடந்து சென்று தான் படிக்க வேண்டிய நிலை இருந்தது.

நிரம்பிய குளங்கள்:விவசாயத்திற்கு பயன்படும் ஏரி, குளங்களை அந்தந்த கிராமத்தினரே பாசன வசதி பெறும் ஒவ்வொரு ஏக்கருக்கும் ஒரு ஆள் வீதம் வரச்செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். இதனால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி இருந்தது. அந்தக்காலத்திலேயே கிராமத்து மக்கள் தங்கள் பங்களிப்பில், மழைக்காலத்திற்கு முன்னரே ஏரி, குளங்களின் வரத்து கால்வாய்களை சுத்தம் செய்தனர். இதனால் மழைநீர் தங்குதடையின்றி ஏரி, குளங்களை வந்தடைந்தது. அவைகள் நிரம்பின.கண்மாயில் துார்ந்த மண்ணை அப்புறப்படுத்தினர். அவ்வாறு அப்புறப்படுத்தும் மண் அந்தந்த ஏரி, குளங்களின் கரைகளை உயர்த்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் உதவின. இதில் தெளிவான வண்டல் மண்ணை உரத்திற்கு பயன்படுத்தினர். தண்ணீர் வயல்களில் சீராக பாய்வதற்கு மதகுகளை சரி செய்தனர். மதகுகளின் வழியாக வெளியேறும் தண்ணீர், தடையின்றி வயல்களுக்கு செல்ல கால்வாய்களை சரி செய்தனர். அதனால் கடைக்கோடியில் இருந்த நிலங்களும் பயனடைந்தன.கோடை காலத்தில் ஏரி, குளங்களில் நீர் வற்றி விட்டாலும், ஏற்கனவே இந்த பணிகளை செய்திருந்ததால், ஆங்காங்கே வயல்களில் உள்ள கிணறுகளில் நீர் ஊறி, கோடை சாகுபடிக்கு நீர் தங்கு தடையின்றி கிடைத்து விவசாயம் செழித்தது. கிராம மக்கள் நல்ல வேலை வாய்ப்பும், வசதியும் பெற்று செழிப்பாக இருந்தனர்.

கிராம மக்கள் ஒற்றுமை :இந்த மாதிரியான ஈடுபாடுகளால் கிராம மக்களிடையே இன, மத வேறுபாடு இன்றி, ஒற்றுமை, பாச உணர்வு மேலோங்கி இருந்தது. சுதந்திரம் பெற்ற பிறகு 1952 அக்டோபர் 2 ல் மத்திய அரசு சமுதாய நலத்திட்டம் என்ற திட்டத்தை சில பகுதிகளில் செயல்படுத்தினர். 1963 ல் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்துதல், அதற்கு மேல்நீர் தொட்டி கட்டுதல், சாலைகள் அமைத்தல், அவைகளுக்கு தேவையான பாலங்கள் கட்டுதல், பள்ளிகள் திறத்தல், அவைகளுக்கு தேவையான கட்டடங்கள் கட்டுதல், ஏரி, குளங்களை பராமரித்தல் போன்ற பணிகளை செய்ய திட்டமிட்டு, 50 சதவீத நிதி மானியமாக மத்திய அரசு வழங்கியது.மீதம் உள்ள 50 சதவீத நிதியை கிராம மக்கள் அல்லது ஊராட்சி, பணமாகவோ, பொருள் மூலமாகவோ அல்லது உழைப்பின் மூலமாகவோ ஈடுகட்டி திட்டப்பணிகளை செயல்படுத்தினர். அப்பொழுது எல்லாப்பணிகளும் சீராகவும், வேகமாகவும், தரமாகவும் நடந்தன.1960 முதல் 1975 வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரின் கீழ், விவசாயம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, பொதுசுகாதாரம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் விரிவாக்க அலுவலர்களாக பணிபுரிந்தனர். கிராம மக்கள் தங்களின் வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகி, தங்கள் கிராமங்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றிக்கொண்டனர். கிராம அளவில் கிராம சேவக் (ஊர் நல அலுவலர்), பணிபுரிந்து அந்தந்த கிராமங்களுக்கு தேவையான வசதிகளை திட்டமிட்டு அந்தந்த ஊராட்சி தலைவர் மூலம், விரிவாக்க அலுவலரின் மேற்பார்வையில் நிறைவேற்றிக்கொண்டனர். காலப்போக்கில் விரிவாக்க அலுவலர்கள் அவர்களின் துறைகளுக்கு சென்று விட்டதால், சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல், கிராமப்பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. தவிர தற்போது எல்லா வசதிகளையும் அரசே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உருவானதால், கிராமப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பாசனத்திற்கு பயன் இல்லை :குறிப்பாக ஏரி, கண்மாய்கள், குளங்கள் பராமரிக்கப்படாததால், மழை நீர் வீணாகி, பாசனத்திற்கு பயன்படாத நிலைக்கு சென்று விட்டது. ஏரிகளுக்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால், கால்வாய்கள் சில சுயநல வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு நிலமாகி விட்டது.
அதனால் மழைநீர் ஏரி, குளங்களை வந்தடையாமல், சாலைகளையும், பாலங்களையும் உடைத்து குடியிருப்புகளை அழித்து வருகிறது. விவசாயம் நடைபெறாமல், கிராம மக்கள் வேலை வாய்ப்பினை இழந்து, விவசாய உற்பத்தி குறைந்து வறுமையில் வாழ்கின்றனர். குடிநீர், ரோடு வசதிக்காக தினமும் ஏதாவது ஒரு பகுதியில் கடையடைப்பு, ரோடு மறியல் நடந்து வருகிறது. இதனால் தினமும் நுாற்றுக்கணக்கான மனித சக்கி வீணாகிறது. மக்களும் இலவச சலுகைகளை நம்பி, சோம்பேறிகளாக மாறி வருகின்றனர்.இதற்கு பதிலாக ஆங்காங்கே இயங்கும் தொண்டு நிறுவனங்கள் மக்களின் சக்தியை ஒன்று திரட்டி, அந்தந்த பகுதியில் தேவையான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றலாம். மக்களுக்கு சமுதாய உணர்வை ஏற்படுத்தி, பணிகளை செய்ய அவர்களை ஈடுபடுத்த கட்சிகள் முயற்சிக்கலாம். அவ்வாறு செய்தால் மக்களின் ஒற்றுமையும், சமுதாய உணர்வும் மேலோங்கும். மக்களுக்கு நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.மக்களுக்கு சமுதாய உணர்வை ஏற்படுத்தி, பணிகளை செய்ய அவர்களை ஈடுபடுத்த கட்சிகள் முயற்சிக்கலாம். அவ்வாறு செய்தால் மக்களின் ஒற்றுமையும், சமுதாய உணர்வும் மேலோங்கும். மக்களுக்கு நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.

.--எல்.ஜெகந்நாதன்
ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் (ஓய்வு)
தேனி. 94420- 32516.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement