Advertisement

விவசாயமா... தொழிலா...!

நம் நாடு அடிப்படையில், ஒரு விவசாய நாடு. 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே கிராமங்களில் வாழ்கின்றனர். காரணம், நாட்டில் விவசாய நிலமும் அதிகம்; நீர் வளமும் அதிகம். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்தையும்; இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழிலையும்; மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயமும், தொழிலும் சேர்ந்து கலப்பு பொருளாதாரத்திற்கும் முன்னுரிமை அளித்தனர் நம் ஆட்சியாளர்கள்.

அதன் விளைவு, நாட்டில் பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும், நீலப்புரட்சியும், தொழில் புரட்சியும் ஏற்பட்டு நமது நாட்டு வளங்களை சிறப்படையச் செய்தனர்.திடீரென்று யார் கண் பட்டதோ தெரியவில்லை... 1967க்குப் பின் வந்த அரசியல் பிரகஸ்பதிகள் திடீர் ஞானம் வந்தவர்களாக, தொழிலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். கணிசமான நிதியும், மடை மாற்றம் செய்யப்பட்டது. 2004க்குப் பின், நாட்டின் நிலைமையே திடீரென்று மாறிவிட்டது. விவசாயப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்து கொள்வதில் தவறில்லை; புதிய பொருளாதாரக் கொள்கையில் தொழில் அபிவிருத்தி மட்டும் ஏற்படுத்திவிட்டால் போதும் என்று அப்போதைய பிரதமரே அறிக்கைவிட்டார். அவர்கள் எதிர்பார்த்த புதிய பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால், விவசாயம் தானாகவே நீர்த்துப் போனது.புதிய தொழிற்சாலைகள் பெருகின. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே வேலைவாய்ப்பும் ஏற்பட்டது. விவசாயம் புறந்தள்ளப் பட்டதால், கிராமத்து விவசாயிகள் வேலை தேடி, விட்டில் பூச்சிகளாக தொழிற்சாலைகளின் படிக்கட்டுகளில் ஏறினர். புதிய தொழில் நகரங்கள் காளான்களாக முளைத்தன. படை எடுத்த மக்களில், பத்தில் ஒரு பகுதியினருக்கே வேலை கிடைத்தது. விவசாயமும் இன்றி, வேலையும் இன்றி ஒரு கூட்டம் தானாகவே முளைத்தது. தொழில்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இடைத்தரகர்கள் அரசு ஆதரவுடன் கமிஷன்களில் கொழுத்தனர்.

உழைக்காமலேயே கிடைத்த கமிஷன் தொகை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் பங்கு கிடைத்தது; காற்று மாசுபட்டது; சுற்றுச்சூழல் கெட்டது; பருவமழை தவறியது; ஓசோனில் ஓட்டை விழுந்து வெப்ப மண்டலமாக இந்தியா உருவெடுத்தது; காடுகள் அழிந்தன; மின் தேவை அதிகரித்தது. இலவசத்தில் நிலமும், மின்சாரமும் ஒரு கால எல்லையில் இனாமாக கிடைத்தது. பின் இளித்தது.விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறின. ஆறுகள், ஏரிகள், குளங்கள் காணாமல் போயின. நிலத்தடி நீர் வற்றியது. அவைகள் எல்லாம் வீட்டுமனைப் பட்டாக்களாக, தொழிற்சாலைகளாக உருவம் மாறின! சிறு, குறு குடிசைத் தொழில்கள், பன்னாட்டு நிறுவனத் திமிங்கலங்களால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன.ஆற்று மணல், வண்டிகளில், லாரிகளில் போன நிலை மாறி, கப்பல் கப்பலாக கடத்தப்பட்டு, புதிய கோடீஸ்வரர்கள் முளைத்தனர். கூரையைப் பற்ற வைத்த குரங்குக்கு பைத்தியமும் பிடித்தது போல, 1,000 அடிக்கு ஆழ்துளை கிணறுகள் தோண்டி, நீரை உறிஞ்சி, குளிர் பானங்களாக மாற்றி, கலர் கலராய் பாட்டில்களில் அடைத்து, பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையில் கொழுத்தன. மக்களின் உடல்நிலையும் கெட்டது; புதிய நோய்களும் சிலிர்த்தன.

தமிழகத்தில் சிறிய, பெரிய ஆறுகள், 33. ஏரிகள், 39,202. குளங்கள், 41,127. எதிலும் நீர் சேமிப்பு இல்லை. 125 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யத் தகுதியான நிலங்களில், வெறும், 40 லட்சம் ஏக்கர் நிலங்களில் தான் விவசாயம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சென்னையைச் சுற்றி, 200 ஏரிகள் இருந்தன. இன்று, பூதக் கண்ணாடி கொண்டு தேடினால், 20 ஏரிகள் கூட மிஞ்சாது. விவசாயம் பொய்த்தது; உணவுக்கு பஞ்சம். விவசாயத்தின் மூலம் வருவாய் வெறும், 6.2 சதவீதமாகக் குறைந்து போனது. காரணம், விவசாயத்தை உற்பத்தி சார்ந்ததாக நாம் மாற்றாமல் விட்டுவிட்டது தான்.மழைக் காலத்தில் வருகிற வெள்ளத்தையும், கடலில் கலக்காமல் தடுத்து தேக்கி வைக்க, நமது அரசுகள் முயலவில்லை. நமது விவசாயத் தேவையான, 419 டி.எம்.சி., தண்ணீரைக் கூட சேமிக்க முடியாமல் கடலில் கலக்க விட்டுவிட்டு, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளத்துடன் தண்ணீருக்கு மல்லுக்கட்டி பிச்சை எடுக்கிறோம்!

தாமிரபரணியிலிருந்து, 104 டி.எம்.சி., தண்ணீர், பாலாற்றிலிருந்து, 124 டி.எம்.சி., கொள்ளிடத்திலிருந்து, 204 டி.எம்.சி., இன்னும் இரண்டு மடங்கு தண்ணீரையும் காவிரி, தென்பெண்ணை போன்ற ஆறுகளிலிருந்து கடலில் கலக்கச் செய்துவிட்டு, அண்டை மாநிலங்களில் அண்டங் காக்காய்களாக வாயைப் பிளந்து, நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.இந்த நிலையில், நமது நாட்டிற்கு எது தேவை? விவசாயமா - தொழிலா? தொழிலைத் துறந்து விட்டு விவசாயம் மட்டுமே நம்மை தலை நிமிர்த்தாது. ஆக இரண்டும் வளர வேண்டியது தான் சரியான அணுகுமுறை.

ஆனாலும் விவசாயத்திற்கு, 60 சதவீதமும், தொழிலுக்கு, 40 சதவீதமும் கொண்டு ஆண்டுத் திட்டங்களை வகுத்து செயல்பட்டால், வயிறும் நிறையும், தொழிலால் கஜானாவும் நிரம்பும். விவசாயத்தைப் புறந்தள்ளினால் தொழிலின் மூலம் கிடைக்கும் நோட்டுக்களை வைத்து எப்படிச் சாப்பிடுவது? சுழன்றும் ஏர் பின்னது தானே உலகம். அதைக் கொண்டு விவசாயத்திற்கு முன்னுரிமையும், தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது நிலையிலும் வைத்து திட்டங்களை செயல்படுத்தினால் குடிக்கும் தண்ணீருக்கும், உணவுக்காகவும் மூன்றாம் உலகம் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.ஆக, உணவு தரும் விவசாயம் செழிக்க வேண்டிய அவசியத்தினால், நாட்டின் நதிநீர் இணைப்பு ஏற்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. விவசாயமும், தொழிலும் நமது இரு கண்களைப் போன்று பாதுகாக்கப்பட வேண்டியது இன்றைய அரசியல் தலைமுறைகளின் கடமை. அது காலத்தின் கட்டாயம்! - வி.எம்.மகிழ்நன்,சமூக ஆர்வலர்,மாவட்ட தகவல் மற்றும் பயிற்சி அலுவலர் (பணி நிறைவு)
மொபைல் எண்: 94444 61161

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement