Advertisement

கொல் எனக் கொல்லும் கொசு!

இரவும் பகலும் மனிதர்களை பாடாய்படுத்தும் கொசுக்களை அழித்தொழிக்கும் வழி மட்டும் இன்னும் தென்படாதது ஏனென்று தெரிய வில்லையே... ஆங்கே தெருக்கோடியில் ஒரு புலம்பல் கேட்கிறது.
நாம் சொல்கிறோம். முடியும்... நம்மால் முடியும். ஆமாம் சார்... நாம் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால் அந்த கொசுக்களை அழித்து நோய்களிலிருந்து விடுபட
நிச்சயம் முடியும்.
தொற்று நோய்களைப் பரப்பும் கொசுக்களை அழிக்க பெரிய ரிஸ்க் எல்லாம் தேவையில்லை போதிய விழிப்புணர்வுடன், நமது அன்றாட வழக்கமான வேலைகளில் ஒன்றாக இதையும் சேர்த்துக் கொண்டால் எந்தவிதமான கொசுவும் நம்மை அண்டாது. இந்த இடத்தில், ஒரு நிகழ்வை குறிப்பிட்டுக்காட்டினால் நல்லது என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் புறநகர் பகுதியில் மூன்று வயது குழந்தை டெங்கு அறிகுறியுடன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைக்கவும், நோய் தாக்குதலுக்கு உள்ளான குழந்தையின் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டினுள், கொசுக்கள் உற்பத்தி செய்யும் காரணிகளை நாலாபுறமும் தேடினோம். வீட்டை சுற்றிலும் ஆய்வு செய்த போது எதுவும் தென்படவில்லை.
கடைசியாக வீட்டின் உள்பகுதியில் ஆய்வு செய்த போது, குளிர்சாதனப்பெட்டியின் அடியில் இருந்த ஒரு தட்டில் நீர் தேங்கியிருந்தது. அதில் கொசுக்களின் முட்டைகளும், லார்வா நிலையிலுள்ள கொசுப்புழுக்களும் இருந்தது. இதில் இருந்து கூடவா கொசு உற்பத்தியாகப் போகிறது என்ற கவனக்குறைவால், இன்று பலர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு பெறாமல் பாதிப்புக்குள்ளாவது வேதனையளிக்கிறது.
இதே போல் கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் தோறும் பயன்பாடில்லாத ஆட்டு உரல்களை கவிழ்த்து வைக்காமல் போட்டிருப்பார்கள். எப்பொழுதோ பெய்த மழைநீர் அதில் தேங்கி கொசுக்களை உற்பத்தியாக்கும். வீட்டில் உள்ளவர்கள் அதை கண்டுகொள்ளாததன் விளைவு, தொடர் காய்ச்சலுக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது.
பொதுமக்களின் விழிப்புணர்வு
பொது சுகாதாரத்துறையினர் என்னதான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் தகுந்த விழிப்புணர்வு பெறாதவரை கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது கடினமானது.
சுகாதாரத்துறையின் மூலம் புகை மருந்து அடிப்பது, அபேட் (டெமிபாஸ்) மருந்து தெளிப்பது எல்லாம் தற்காலிக தடுப்பு நடவடிக்கைகள் தான். நிரந்தரமான தீர்வு என்பது கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை வீட்டுக்கு வீடு அடியோடு அழித்துவிடுவது தான்.
வீட்டை சுற்றிலும் பயன்பாடற்ற மழை நீர் தேங்கி நின்றாலோ, கழிவுநீர் கால்வாய் இருந்தாலோ 'ஆயில்பால்' தயாரித்து தேங்கிய நீரின் மேற்பரப்பு, கழிவுநீர் பரப்பில் போட வேண்டும்.
இந்த 'ஆயில்பால்' என்பது, வாகனப் பயன்பாட்டிற்கு பின் கிடைக்கும் கழிவு ஆயிலில், துணியால் தயாரிக்கப்பட்ட மரத்துாள் பந்துகளை ஊறவைத்து பயன்படுத்துவது.
இந்த 'ஆயில்பால்களை' பயன்பாடற்ற நீர் நிலைகள், கழிவுநீரில் மிதக்க விடுவதன் மூலம் அதன் எண்ணெய் படலங்கள் நீர் பரப்பில் பரவி கொசுக்கள் உற்பத்தியை முற்றிலும் அழித்து விடும். சாதாரணமாக நம்மை கடிக்கும் கொசுக்களாக இருந்தாலும் அல்லது தொற்று நோய்களை பரப்பும் எந்த கொசுக்களாக இருந்தாலும் இந்த 'ஆயில்பால்' படலங்கள், கொசு முட்டைகள் மற்றும் அதன் 'லார்வா' நிலையிலுள்ள புழுக்களையும் கூண்டோடு அழித்துவிடும்.
சுத்தம் அவசியம்
வீட்டை சுற்றிலும் ஈரப்பதம் காணப்பட்டால், பிளீச்சிங் பவுடர் தெளித்து விட வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்ரூம், டாய்லெட் ஆகியவற்றை நாள்தோறும் கிருமி நாசினி (டெட்டால், பினாயில்) கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் டப்பாக்கள், பாத்திரங்களில் நீர் தேங்கியுள்ளதா என கவனித்து, எந்த ஒரு பொருட்களிலும் நீர் தேங்க விடாமல் கவிழ்த்தி விடுவதை தினசரி வழக்கமாக கொள்ள வேண்டும். ஆடு மாடுகள் வளர்ப்பவர்கள் தினமும் அதற்கான இடத்தை சுத்தப்படுத்தி, 'பிளீச்சிங் பவுடர்' தெளித்து வரவேண்டும். செல்லப்பிராணிகள், பறவைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் தினசரி அதற்கான கூடுகளை சுத்தப்படுத்துவதோடு, அதன் கழிவுகளை அகற்றி தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை, தினமும் கழுவியபின் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
வீட்டின் சுற்றுப்புறத்தை அன்றாடம் ஆய்வு செய்து பயன்பாட்டுக்குப் பின் போடப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், பேப்பர் கப்கள், தேங்காய் நார் மற்றும் இளநீர் குடுவைகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில்
எந்தவிதமான டயர்களையும் வைத்திருக்க கூடாது.
வீடுகளில் திறந்த நிலை தொட்டிகள் இருந்தால், வாரம் ஒரு முறை தண்ணீரை காலிசெய்து, சுத்தம் செய்து காய வைத்துவிட வேண்டும். மீண்டும் நிரப்பும் போது, அதை தேக்கி வைக்க முற்பட்டால், சிறிதளவு தேங்காய் எண்ணெயை அத்தொட்டியின் நீர்பரப்பில் ஊற்றிவிட வேண்டும். அந்த எண்ணெய் படலங்கள் மூலம் நீர்பரப்பில் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படும்.
மூடியில்லாத கிணறு என்றால், மேற்பரப்பை வலையால் மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டில் ஸ்பிலிட் 'ஏசி' யிருந்தால் அதில்இருந்து வடியும் நீரை ஒவ்வொரு நாளும் கவனித்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.கொல்லைப்புறத்தில் வாழை மரங்கள் இருந்தால், அதன் கிளை பிரியும் இடங்களில் பட்டைகளில் நீர் தேங்கியுள்ளதா என கவனித்து அகற்றி விட வேண்டும்.
நம்மால் முடியும்
இது போன்ற எளிதான நடவடிக்கைகளை, தினமும் கடைபிடித்தால் நமது வீடும் ஒரு 'பிரான்ஸ்' நாடு தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை (கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ்).
நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை அமைய நமது பிரதமரின் 'துாய்மை
இந்தியா' திட்டத்தை ஒவ்வொருவரும் தினசரி கடைபிடித்தால் நலம் காணலாம் என்றென்றும்.
வீட்டை சுற்றிலும் தண்ணீர் வேண்டாம்
வேதனை தரும் நோய்கள் வேண்டாம்
தேங்கும் நீர் வீட்டுக்குள் வேண்டாம்
தேகம் நோகும் காய்ச்சல் வேண்டாம்
நலமான வளமான இந்தியாவை
உருவாக்குவோம்!

-எம்.முகம்மது அனீஸ்

சிறப்பு நிலை மேற்பார்வையாளர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்
உச்சிப்புளி. 94424 51608.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement