Advertisement

அச்சம் என்பது மடமையடா!

மனிதனாக பிறந்து விட்டான். வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தமாகி விட்டதொரு சூழலில் எது வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும் என்ற நிலை ஸ்திரப்பட்டதாலும் நாம் நம் வாழ்க்கையில் அச்சத்தைத் தவிர பிறவற்றை கையாளுதல் நலமாக இருக்கும்.

'அச்சத்தில் தினம் தினம் செத்து செத்து பிழைப்பதை விட ஒரே நாளில் மடிவதே மேல்,' என ஆன்றோர் சொல்லி வைத்தனர். மனிதனாகிய நம்மிடம் எத்தனையோ திறமைகள் உள்ளன. இதனை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. எனினும் அச்சத்தை ஒரு மனிதன் தன்னிடம் இருந்து முழுமையாக அகற்றி விட வேண்டும். அது தான் அறிவாளிக்குரிய புத்திசாலித்தனம்.

தன்னம்பிக்கை சுடர் :எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ, அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனை தான் நாத்திகன் என குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்றும் சொல்கிறது. நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுள் இடத்தில் நம்பிக்கை, பின் மனிதனிடத்தில் நம்பிக்கை. இவை ஒருவரிடம் வந்து விட்டால், மனிதன் தானே மகிமை பெற்று விடுவதோடல்லாது பிரகாசிக்கவும் செய்வான். இது தான் ஞானிகளின் பரம ரகசியம். இது வளர்ந்து விட்ட நிலையில் மனிதனிடம் தன்னை அறியாது, அவனிடம் ஆட்கொண்டு இருந்த அச்சம் என்ற உணர்வு தானே அகன்று விடுகிறது.

மனிதன் எதை நினைக்கின்றானோ, அதுவே தானாகி விடுகிறான். மனிதன் தன்னை பலவீனமானவன் என்று நினைக்க துவங்கினால், பலவீனமானவனாகவே ஆகி விடுகிறான். எனவே
என்றைக்கு ஒரு மனிதன் அச்ச உணர்வோடு செயல்பட நினைக்கிறானோ, அன்றைக்கே
சமுதாயத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில் அவன் 'உதவாக்கரையாகி' விடுகிறான்.
அஞ்சாமை, வலிமை உபநிடதங்களில் இருந்து வெடிகுண்டை போல கிளம்பி, அறியாமைக் குவியல்களின் மீது வெடிகுண்டை போன்று வெடிக்கும் சொல் ஒன்றை நீ காண்பாயேயானால் அந்த சொல் 'அஞ்சாமை' என்பது தான். ஒவ்வொரு மனிதனும் வலிமையுடையவனாக
இருக்கின்றானா அல்லது வலிமையை உணர்கிற நிலையை பெற்றிருக்கிறானா என்பது தான் முக்கியம்.

வலிமை தான் வாழ்வு. மனிதனுக்கு பலவீனம் மரணம். அச்சம் நரக வாழ்க்கை. வலிமையே மகிழ்ச்சியான வாழ்க்கை. பலவீனமும், அச்சமும் ஒரு மனிதனுக்கு இடையறாத சித்தரவதையாகவும், துயரமாகவும் அமைகிறது. பலவீனமும், அச்சமுமே மரணமே தான். ஒருவன் நீச்சல் கற்று கொள்ள விரும்புகிறான். அவன் நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரைக் கண்டு அஞ்சினால் நீச்சல் கற்று கொள்ள முடியுமா? முடியாதே!

எதையுமே முழுமையாக பெற வேண்டுமெனில் விடா முயற்சி, பெரும் மன உறுதியை பெற வேண்டும். விடா முயற்சி பெற்றவன், 'சமுத்திரத்தையே குடித்து விடுவேன். எனது உறுதியால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும்,' என்று சொல்கிறான். அத்தகையை ஆற்றலை, மன உறுதியை பெற்று விட்டான். அச்சம் நம்மை விட்டு அகன்று விடும். அறியாமை மிக்க உயிரற்ற புல், பூண்டு, வாழ்க்கையை காட்டிலும், மரணமே மேலானது. தோல்வியை தழுவி உயிர் வாழ்வதை விட போர்க்களத்தில் மாய்வதே மேல். இவை எல்லாம் அச்சத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட வைர வரிகளின் வீரச் சொற்கள்.

சிங்கத்தின் இருதயம் மனிதன் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. 'உழைப்பே வடிவெடுத்த, சிங்கத்தின் இருதயம் படைத்த ஆண் மகனையே' திருமகள் நாடிச் செல்கிறாள். பின்னால் திரும்பி பார்க்கத் தேவையில்லை. இவை இருந்தால் மட்டுமே மகத்தான காரியங்களை நம்மால் சாதிக்க முடியும். நம்பிக்கையை நாம் என்றுமே இழந்து விடக்கூடாது. நம் பாதை கத்தி முனையில் நடப்பதை போன்று மிகவும் கடினமானது. மனம் தளராது, நாம் அடைய வேண்டிய நமது லட்சியமாகிய குறிக்கோளை நாம் அடைய முற்பட வேண்டும்.

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நமது சொந்த உறுதியான முடிவு பிடிப்புடன் இருந்தால், அதுவே போதும். பின் நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் நமது காலடியில் பணிந்து கிடக்கும்.

அஞ்சாத நிலை :பயங்கரத்தை எதிர்த்து நிற்க பழக வேண்டும். அஞ்சாமல் எதிர்த்து நிற்க வேண்டும். மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதன் நிச்சயம் அச்சத்தை தவிர்த்திடுவான்.
''வேப்ப மர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாட போகும்போது
சொல்லி வைப்பாங்க...
உந்தன் வீரத்தை முளையிலேயே
கிள்ளி வைப்பாங்க...
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே
நீ வீட்டிற்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே..!''
என்று அன்றைக்கே பட்டுக்கோட்டையார் அச்சம் தவிர்க்க குழந்தைகளுக்காக தன் பாட்டை விதைத்தார். பிஞ்சிலேயே அச்சமெனும் நஞ்சினை கலந்து விடக்கூடாது என்பதற்காக தன் பாட்டில் தத்துவத்தை புகுத்தி வைத்தார் அக்கவிஞர்.
''அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே..!
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே...!''
என முழங்கினார் பாரதியார்.

அச்சமே நரகம் என்பதை அக்காலத்தே சுட்டிக்காட்டி விட்டாரே நம்முடைய பாட்டுடைத் தலைவராம் பாரதியார்.சிவ பெருமானிடம் நக்கீரர், பாட்டில் பொருட் குற்றமிருப்பதை அச்சம் இல்லாது சுட்டிக்காட்டினார். விளக்கை சுற்றித்திரியும் பூச்சிகள், எப்படி விளக்கின் நெருப்பில் வீழ்ந்து மாண்டு விடுகிறதோ, அதே போல் அச்சம் என்ற பூச்சியாக பறந்து கொடிய நெருப்பில் வீழ்ந்து மாய்ந்து விடக்கூடாது.

எனவே 'அச்சத்தைத் தவிர்' என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி உச்சரித்து மன உறுதியோடு அச்சமின்றி எந்தவொரு பணியையும் நாம் மேற்கொண்டால் வெற்றி நமது கழுத்தில் வீழ்ந்து அலங்கரிக்கும். அச்சமில்லா வாழ்வை வாழ்ந்தால், அந்த இமயமும் நமது காலடியில் தான். வானில் உலா வரும் மேகக்கூட்டங்கள் கூட அச்சமின்றி சூரியனையும், நிலாவையும் தொட்டு விடுகிறது.

அச்சமின்றி இமயத்தின் உச்சியை தொட்டு வெற்றிப் பெற்றவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும். எனவே அச்சம் என்ற நரகத்தில் இருந்து விடுபட்டு தைரியம் என்ற சொர்க்கத்திற்கு நாம் வந்தால் அதை விட வேறென்ன பேறு வேண்டும். இனி மீண்டும் 'அச்சத்தைத் தவிர்' என்ற மந்திரத்தை நாளும் நமது உதடுகள் உச்சரிக்கட்டும்.

- சு.லட்சுமணசுவாமி,
எழுத்தாளர், மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement