Advertisement

வாராக்கடனும், கல்விக்கடனும்! -ப.திருமலை -பத்திரிகையாளர்

கல்லூரிகள் திறந்து விட்டன. வங்கியில் கடன் வாங்கியாவது பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்த்து விட வேண்டுமென, பெற்றோர் துடிக்கின்றனர். ஆனால், வாராக்கடன்களை அனாயசமாகக் கையாளும் வங்கிகள், கல்விக்கடன் அளிக்க எக்கச்சக்க நிபந்தனைகள் விதித்து பெற்றோருக்கு கிலியூட்டுகின்றன. வாராக்கடனை ஒப்பிடும் போது கல்விக்கடன் என்பது, ஒன்றும் இல்லை என்பது வங்கிகளுக்கு தெரியாததல்ல.

அது என்ன வாராக்கடன்? நாம் வாங்கிய ஒரு சில ஆயிரம் அல்லது லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்த காலதாமதமாகும் பட்சத்தில் ஏலம், ஜப்தி என வங்கிகள் நம்மை மிரட்டும். ஆனால், கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருப்பவர், கடனை செலுத்தாமலிருந்தால், ஒரு கட்டத்தில், 'அவரிடம் கடனை வசூலிக்க முடியவில்லை; அது திரும்பி வாராத கடன்' என, வங்கிகள் சொல்லும் வாய்ப்பும் உண்டு. கடனை வாங்கியவர் அதன் வட்டி அல்லது முதலின் தவணை அல்லது இரண்டையும், 90 நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால், அவருடைய கடன், வாராக்கடன் என்ற வகையில் சேர்க்கப்படும் என்பது பொதுவான வரைமுறை.

வயிற்றை கட்டி, வாயை கட்டி சேமித்த பணத்தை வங்கியில் போட்டிருக்கிறோம். தேசிய அளவில் மக்களின் பணம், 75 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டிபாசிட்டாக உள்ளது. அப்பணமும் தான் பெரும் தொழிலதிபர்களுக்கு கடனாக செல்கிறது.நாம் சிறுக சிறுக சேகரிக்கும் தொகையை எடுத்து, ஒரு சிலருக்கு பெரிய தொகையாக வங்கிகள் கடன் கொடுக்கின்றன. வங்கிகளின் பெரிய வருவாயே, கடன் அளிப்பதன் மூலம் வரும் வட்டிதான். எனவே, கடன் கொடுத்தால் மட்டுமே வங்கிகள் வருவாய் ஈட்ட முடியும். ஆனால், திருப்பி தர வேண்டும் என்ற எண்ணமுடையவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறதா என்பது தான் கேள்வி.

பட்டியலிடப்பட்ட, 40 வங்கிகளின் டிசம்பர் மாதம் வரையிலான வாராக்கடன், 2.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன், 63,386 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது.

'பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், 5.2 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது, மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது' என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அண்மையில் கவலை தெரிவித்தார். நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில், '2014 - 15 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட, 74 உள்கட்டமைப்பு திட்டங்களில், 17 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இத்திட்டங்களுக்காக வங்கிகள் கொடுத்த, 54,056 கோடி ரூபாய் கடன் தொகை, வாராக்கடனாக நிலுவையில் உள்ளது. இக்கடனில், 1,308 கோடி ரூபாய் அசலும், 548 கோடி ரூபாய் வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாராக்கடன் அதிகரிப்பை தடுப்பதிலும், கடனை வசூல் செய்வதிலும், வங்கிகள் தோல்வி அடைந்து விட்டன' என்று கூறினார்.

நாடு முழுவதும், 2009ம் ஆண்டு, 47 ஆயிரமாக இருந்த வங்கிக் கிளைகள் எண்ணிக்கை இப்போது, 80 ஆயிரத்தை தொட்டுள்ளது. 2008 - 09ம் ஆண்டு, 66 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வங்கிகளின் மொத்த லாபம், 2012 - 13ம் ஆண்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

வங்கிகளில் வாராக்கடன், 2 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருப்பதற்கு வங்கிகளின் நிர்வாகமும், மத்திய அரசுமே காரணம். அதிக தொகையை கடனாகப் பெற்று விட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த மறுக்கும் பெரிய நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 10 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற பெரிய நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாத தொகை மட்டும், 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்கிறார் இந்திய வங்கி ஊழியர்களுக்கான கூட்டமைப்பின், பொதுச் செயலர் பிரதீப் பிஸ்வாஸ்.பத்திரிகையாளர் கேதன் திரோட்கர், மும்பை உயர் நீதிமன்றத்தில் வாராக்கடன் தொடர்பாக அதிரடியாக ஒரு வழக்கு தொடர்ந்தார். இதற்கான தகவல்களை அவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் பெற்றிருந்தார்.

சந்தேகத்திற்குரிய வாராக்கடன்களுக்கு ஒப்புதல் வழங்கியதில், வங்கி அதிகாரிகள் முறைகேடாக செயல்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. பெருந்தொகையை கடன் வாங்கியவர்களிடம் ஒரே முறையில் தீர்வு என்ற பெயரில் குறைந்த தொகையை பெற்று, அவர்களின் கடனை சரி செய்வதும் நடக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளால் தான் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், உள்நோக்கத்துடன் சந்தேகத்திற்குரிய கடன்கள் வழங்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் ஐகோர்ட்டில் வழங்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வங்கித்துறை முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய அரக்கன், இந்த வாராக்கடன் தான். இதன் அளவைக் குறைத்தால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சிக்கான போதுமான தொழில், விவசாயக் கடன்களை, இனிமேல் வங்கிகள் குறைந்த வட்டியில் கொடுக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், வாராக் கடன்கள் அதிகரித்தால், வங்கியின் வருவாய் சரிவடைந்து, லாபம் குறையும்; தொடர்ந்து இழப்பையும் சந்திக்கும். ஒரு கட்டத்தில், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையும் உருவாகலாம்.

பெரிய முதலாளிகளுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க முடியாத வங்கிகள், கல்விக்கடனை வழங்குவதில் கறாராக இருக்கின்றன. மாணவர்களுக்கு நாடு முழுவதும் வங்கிகள் மூலம், 75 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 22 சதவீதம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

உரிய காலத்தில் கடன் தரப்படாததால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.பல்வேறு தடைகளைக் கடந்து தங்களின் கல்வி கடனைப் பெற்று, கற்றுக் கரையேறிய மாணவர்களும், வங்கியாளர்களின் நெருக்குதலால் தாங்க முடியாத உட்சபட்ச உளவியல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பதை, கடன் பெற்ற மாணவர்களின் பேச்சிலிருந்து உணர முடிகிறது.

'கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாத மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அவமானப்படுத்த துணிகிற வங்கிகள், வேண்டுமென்றே கடனை கட்டாமல், அவற்றை வாராக்கடனாக ஆக்கியிருக்கும் முதலாளிகளின் பெயரைக் கூட வெளியில் சொல்லாமல், அவர்களது கவுரவத்தை காத்து வருகின்றன' என, குமுறுகின்றனர் பெற்றோர்.

எக்கச்சக்கமான அலைச்சலுக்குப் பின்னே, கல்விக்கடன் கிடைக்கிறது. கடன் பெற்று படித்துவிட்டு வேலை கிடைக்காத மாணவர்கள், இன்னும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். கடனை வழங்கிய நாளிலிருந்தே மாதாந்திர கூட்டுவட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிற காரணத்தால், படிக்கும்போதே அவர்களின் கணக்கு, 'இயங்கா சொத்து' என்ற அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது. இதனால், 'சிபில்'எனப்படும், 'கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ' நிறுவனத்தில் மாணவர்களின் பெயர் பதிவாகி விடுகிறது. படித்தவுடன் வேலைவாய்ப்பிற்கும். ஏதேனும் சுயதொழில் செய்ய வேண்டுமென்றால் வங்கிகளின் கடனுக்கும் உத்தரவாதமில்லாமல் போய்விடுகிறது. இந்நிலையில் மாணவரும், அவர் தம் பெற்றோரும் கல்விக்கடனை திரும்பச் செலுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கிகள் தங்கள் விருப்பம் போல, 11லிருந்து, 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயம் செய்து, வட்டிக்கடைக்காரர்களைப் போல் செயல்படுவது வேதனைக்குரியது.

கடந்த, 2013 - 2014ம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் வங்கிகள் கடன் தொகை, 2 லட்சத்து 36 ஆயிரத்து 600 கோடி ரூபாய். இவற்றில் வசூல் செய்யப்பட்டது, 30 ஆயிரத்து 590 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 2000 - 2013க்கு இடைப்பட்ட, 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை, 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய். இத்தொகையின் மூலமாக, 15 லட்சம் குழந்தைகளுக்கு தொடக்க கல்வியிலிருந்து, கல்லூரிக் கல்வி வரை இலவசமாக, மிகத் தரமான கல்வியை வழங்கியிருக்க முடியும் என்பதும் கல்வியாளர்களின் கணக்கீடு.வாராக்கடன்கள் தொகையோடு ஒப்பிடும்போது, வழங்கப்பட்ட கல்விக்கடன் என்பது மிகக் குறைவு. வங்கிகள் நிர்ப்பந்தம் செய்யாமலிருந்தாலே கல்விக்கடன் தானாகத் திரும்பிவிடும். பணம் படைத்தவர்களின் குழந்தைகளுக்கு இணையாக ஏழை மாணவர்களும் கல்வி கற்று முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு கல்விக்கடன். கல்வி கற்பதன் மூலமே சமத்துவம் ஏற்படுத்த முடியும். இதற்கு, வங்கிகளின் ஒத்துழைப்பு தேவை.
இ-மெயில்:thirugeethagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement