Advertisement

நெஞ்சை நிமிர்த்தி ஒரு சல்யூட்: என் பார்வை

கதிரவனின் கதிர்கள் நிலத்தின் மீது படாமல் இருக்கும் அடர்ந்த காடுகள், வற்றாத நதிகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், ஆர்ப்பரிக்கும் கடல்கள், பாலைவனங்கள் என உலக நாடுகள் ஒவ்வொன்றின் புவியியல் சிறப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரே நாடு நமது பாரத தேசம்.ஆரியர்கள், அரேபியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் இன்னும் பல இனத்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து நம் நாட்டை தாய் நாடாக ஏற்றுக் கொண்டனர்.
நம் அன்னை பூமியும் இவர்களை மண்ணின் மைந்தர்களாக அரவணைத்துக் கொண்டதோடு ஆரியர்களின் வேத, இதிகாசங்களையும், அரேபியர்களின் எண்கணித முறைகளையும், முகலாயர்களின் போர்முறை, கட்டடக் கலை மற்றும் உணவு முறைகளையும், ரோமானியர்களின் பேன்ட், -சர்ட் போன்ற நவீன உடை கலாசாரங்கள் இது போல இன்னும் பல இனங்களின் கலாசாரங்களை ஏற்றுக் கொண்ட நாடாக திகழ்கிறது நமது தேசம். உலகில் வேறு எந்த நாட்டுக்கும் இத்தகு பெருமைமிகு சிறப்பு அமையவில்லை. இத்தகு சிறப்புக்கு காரணம் நம் நாட்டில் காலங்கள் தோறும் தொடர்ந்து விரவிக் கொண்டிருக்கும் அன்பு, அறிவு, தியாகம் ஆகிய குணங்களே!
அன்பு மனிதர்கள்
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும், சமய, இன அடிப்படை வாதமும் உலகம் முழுவதும் நாள்தோறும் கேட்டுக் கொண்டிருக்கும் துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் "அன்பு, கருணை” என்ற சொற்கள் மனித இதயங்களிலிருந்து மெல்ல அகன்று வருவதையே காட்டுகிறது. ரத்தம் குடிக்கும் ஆயுதங்களால் எதையும் சாதிக்க இயலாது என்றும் அன்பினால் மட்டுமே மனித மனங்களை வெல்ல இயலும் என்பதை காந்தி மூலமாக இந்த உலகிற்கு வழிகாட்டியதே நம் தாய் திருநாடுதான். அகிம்சையும், சத்தியமுமே உலகின் மிகச்சிறந்த ஆயுதங்கள் என்று உலக சமுதாயத்திற்கு முதலில் உரக்க சொல்லியவர்கள் நமது புத்தரும் மகாவீரருமே.
மரம், செடி, கொடி என உலகின் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்த வேண்டுமென்று, அன்பு செலுத்துவதின் மகத்துவத்தை உலக மனித சமூகத்திற்கு விளக்கி மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்த பல கோட்பாடுகளை தந்தவர் நம் வள்ளலார். மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமானால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த மனித சமுதாயத்திற்கு "அறம் செய விரும்பு” என்று அசரீரியாக கூறி, நீ அறம் செய்ய விரும்பினால் போதும் நற்பண்புகள் தானாக வரும், உலகில் பகைமை மறையும் என்று நம் தமிழ் மூதாட்டி அவ்வை சுட்டிக்காட்டினார்.
இவர்களைப் போல் இன்றைய மனித சமுதாயத்திற்கு தேவையான அன்பை விதைக்க நம் தாய்நாட்டில் தோன்றிய அன்பு மனிதர்கள் ஏராளம்.
அறிவு ஜீவிகள்
உலகில் முதன்முதலில் எழுதப்பட்ட ஆவணமே நம் மண்ணில் படைக்கப்பட்ட ரிக் வேதம் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த உலகில் உபநிடதங்களைப் போல் அரிய தகவல்களையும், அமானுஷ்ய விஷயங்களையும் தரும் நூல் உலகில் இல்லை” என்று நம்மவர்களின் படைப்பாற்றல் திறனுக்கு புகழ்பெற்ற ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ்முல்லர் வழங்கியுள்ள சான்று நினைவில் கொள்ளத்தக்கது.
அப்ளைடு சயின்ஸ் என்ற பயன்பாட்டு அறிவியலை பயன்படுத்தி கடலில் மரக்கலம் செலுத்திய முதல் சமூகம் நம்
இந்திய சமூகமே. இந்திய மொழிகளில் அரேபியர்களின் எண்களை அசோகரின் பாறைக் கல்வெட்டுகளில் வடித்த நம் சமூகம், பூஜ்யத்தை கண்டுபிடித்து உலக கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் ஒரு அர்த்தத்தை வழங்கியுள்ளது.
"இந்தியர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் அவர்கள்தான் எண்ணிக்கை பற்றிய அறிவை நமக்கு வழங்கினார்கள், இந்தியர்களின் இந்த பங்களிப்பு இல்லையேல் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் சாத்தியமா என்பது கேள்விக் குறியே!”
என்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்று இந்திய அறிவு ஜீவிகளின் அறிவாற்றலுக்கு ஓர் அத்தாட்சி.சூரிய குடும்பம், பூமி, கிரகணங்கள், தாதுக்கள், வானவியல் உண்மைகள் என அனைத்து அறிவியல் புதிர்களையும் அன்றே அளந்து முடித்துவிட்டனர் நமது அறிவு ஜீவிகள்.
சித்தா, ஆயுர்வேத முறையில் மிகக் கடுமையான நோய்களை எளிதில் விரட்டக்கூடிய ஆற்றல் வாய்ந்த பல மருத்துவ ஞானிகள் வாழ்ந்த நாடு நமது பாரதம். தியாக உள்ளங்கள்
"எந்த நாடு தியாக உள்ளம் கொண்ட தலைவர்களைப் பெற்றிருக்கிறதோ அந்த நாட்டிற்கு அழிவில்லை” என்பார்கள். நமது இந்தியா அன்பு மற்றும் தியாகத்தால் வளர்ந்த நாடு, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் தேச விடுதலைக்காக அன்பு, அறவழியில் சிலுவை சுமந்த தியாகிகள் எத்தனை எத்தனை!
தாய் நாட்டுக்காக தன் இளமையை காணிக்கையாக வழங்கிய பகத்சிங், வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற தியாக இளைஞர்கள் ஏராளம். துப்பாக்கி குண்டுகளுக்கு முன்னே ரோஜா மலர்களுக்கு வேலையில்லை என்று முழங்கி இந்திய விடுதலை வேள்வியில் இளரத்தம் சிந்த ஏராளமான இளம் தியாக உள்ளங்களை விடுதலைப் போராட்ட களத்திற்கு அழைத்து வந்த நேதாஜி, திலகர், லஜபதிராய் போன்ற
தலைவர்கள் செய்த தியாகங்கள் எத்தனை எத்தனை!தாய் மண்ணின் விடுதலைக்காக தாங்கள் சம்பாதித்த செல்வங்களை எல்லாம் காணிக்கையாக தந்த வ.உ.சி போன்ற தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்கள் எத்தனை எத்தனை!தான் கற்ற கல்வியை தன் தாய்நாட்டின் மேன்மைக்காக மட்டுமே வழங்கிய அம்பேத்கர், ராஜாஜி போன்ற பல மேதைகளின் தியாகங்கள் எத்தனை எத்தனை!
சுதந்திரத்தையும், நாட்டின் ஒற்றுமையையும், அமைதியையும் பேணி காக்க எல்லைப் பகுதிகளிலும், ரத்தத்தை உறைய வைக்கும் சியாச்சின் பனிப் பிரதேசங்களிலும் தன் குடும்பத்தை மறந்து, இளமையைத் தொலைத்து, கடமையாற்றிக் கொண்டிருக்கும் நம் ராணுவ வீரர்களின் தியாக உள்ளங்களுக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்துவது."எங்களை இவ்வுயரங்களில் (சியாச்சின்) தங்கவிடாதேஇங்கு மரங்களும் புற்களும் கூட வளர மறுக்கும்,இப்பனிப் பிரதேசங்கள் நிறமற்றவைஏனெனில் இங்கு அனைத்தும் வெண்மை தான்பனி மற்றும் மரணமும் கூட”என்று 'பாரத ரத்னா' வாஜ்பாய் வரிகளில் ஒளிந்திருக்கும் உண்மை
எத்தகையது!அடுத்த நிமிடம் வாழ்வா, சாவா என்பது தெரியாமல் எல்லையில் மூவர்ணக்கொடியை கையில் ஏந்தி உள்ளத்தில் 'இந்தியன்' என்ற கர்வத்துடன் நிற்கும் தியாக உள்ளங்களுக்கு இந்த சுதந்திர நாளில் நெஞ்சை நிமிர்த்தி அடிப்போம் ஒரு சல்யூட்!-முனைவர். சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறைதேவாங்கர் கலைக் கல்லூரி
அருப்புக்கோட்டை.78108 41550

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement