Advertisement

இளைஞர்களும் அரசியலும்;இன்று சர்வதேச இளைஞர் தினம்

'இளைஞர்களே கனவு காணுங்கள், அது துாக்கத்தில் காணும் கனவு அல்ல. நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும்,” என்றார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இதற்காக தானோ என்னவோ ஐக்கிய நாடுகள் சபை ஆற்றி வரும் பல பணிகளில் இளைஞர் நலனும் ஒன்றாக இருக்கிறது.
1985ஐ சர்வதேச இளைஞர் ஆண்டாக அறிவித்தனர். இளைஞர் நலம் மேம்பாட்டிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழித்தல், சுற்றுச்சூழல் காத்தல், போதை பழக்கத்தை நீக்குதல், ஓய்வு நேர நடவடிக்கை, சுகாதாரம், எச்.ஐ.வி., மகளிர் இளம் பெண்கள், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், பாலின பாகுபாடு, உலகமயமாதலில் உள்ள பிரச்னை, தீவிரவாதம், சமூகம், முடிவு எடுப்பதில் இளைஞர் பங்களிப்பு என பல்வேறு பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த ஐ.நா., சபை முடிவு செய்தது.
தேசிய இளைஞர் தினம் :1985ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தனர். பின்னர் 1999ல் சர்வதேச இளைஞர் தினமாக ஆகஸ்ட் 12ம் தேதியை கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி ஆண்டுதோறும் இளையோர் கொள்கையை அறிவித்தது. 2001 முதல் ஆரோக்கியம் மற்றும் வேலையின்மை, சுயசார்பு வளர்ச்சி, உற்பத்தி துறையில் ஈடுபடுத்துதல், ஒருமைப்பாடு, இளைஞர்களின் ஈடுபாடு, வறுமை ஒழித்தல், இளைஞர் முன்னேற்றத்திற்கு அவர்களது பங்களிப்பு, காலநிலை மாற்றம், போட்டித்தன்மை, கலந்து உரையாடி ஒன்று சேர்த்தல், உலகத்தை மாற்றுவோம், சிறந்த உலகத்திற்கு இளைஞர்கள், முன்னேற்றத்திற்காக இடம் பெயர்தல், இளைஞர் மனநிலை என்ற கொள்கைகளை அந்தந்த ஆண்டில் அறிவித்து கடைபிடித்து வருகின்றனர். அரசியலில் இளைஞர் ஈடுபாடு இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ல் சர்வதேச இளைஞர் தினத்தை 'குடிமையில் இளைஞர்களின் ஈடுபாடு' என்ற தலைப்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஈடுபாடுகளில் இளைஞர்கள் குறைந்து காணப்படுகின்றனர்.
எனவே, இந்த ஆண்டின் சர்வதேச இளைஞர் தினத்தை 'அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஈடுபாடுகளில்' இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.ஐக்கிய நாடு சபை ஆய்வு அறிக்கை ஒன்றில் உலகிலேயே வயது 10 முதல் 24க்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் வசிக்கும் நாடு இந்தியா தான் என்கிறது. இவ்வயதில் இந்திய அளவில் 35.60 கோடி இளைஞர்கள் உள்ளனர். இந்தியாவை விட அதிக மக்கள் தொகை உள்ள சீனாவில் 26.90 கோடி, அமெரிக்காவில் 6.50 கோடி இளைஞர்கள் தான் உள்ளனர்.சுவாமி விவேகானந்தர் முதல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரை 'இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இளைஞர்கள் நினைத்தால் தான் முடியும்,' என்று கூறியுள்ளனர்.
திறமையான இளைஞர்கள் :இந்திய இளைஞர்கள் மிக திறமையானவர்கள் என்பதற்கு ஒரு சில உதாரணங்களை கூறலாம். அதன்படி அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில் 38 சதவீதம் பேர் இந்தியர். அங்குள்ள விஞ்ஞானிகளில் 12 சதவீதம் பேர் இந்தியர். ஐ.பி.எம்., கம்பெனிகளில் உலகளவில் 28 சதவீதம் பேர் நம் நாட்டினர். 'நாசா'வில் பணிபுரியும் ஊழியர்களில் 36 சதவீதத்தினர் இந்தியர். 'இன்டெல்' கம்பெனியில் உலகளவில் 13 சதவீதம், 'மைக்ரோசாப்ட்' கம்பெனிகளில் உலகளவில் 34 சதவீதம், துபாயில் உள்ள டாக்சி டிரைவர்களில் 90 சதவீதத்தினர் இந்தியர்கள் தான்.
நமக்கு முன் உள்ள பெரிய சவால் வேலை வாய்ப்பு தான். அனைத்து இளைஞர்களுக்கும் அரசே பணி தர முடியாது. அதற்கு இணையாக தனியார் நிறுவனங்களிலும் சுய வேலைவாய்ப்பினை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு மாணவ பருவத்திலேயே ஆளுமை திறன் வளர்ச்சி, தன்னம்பிக்கை பயிற்சி கொடுக்கப்பட்டு நவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தும் நிகழ்வுகளை நடத்த வேண்டும். அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஈடுபாடுகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் ஆண்டாக இது அமைய வேண்டும். நாம் எல்லோரும் நம் பணிகளில் இளையோர் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
இளைஞர் தின பணி :உலகளாவிய பிரச்னை குறித்து பட்டிமன்றம், பொதுக்கூட்டம் நடத்தி இளைஞர்கள் விவாதிக்க வேண்டும். முதியோர், இளைஞர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க இணைந்து செயல்படவேண்டும்.சத்தியாகிரகத்தை இளைஞர் மனதில் ஆழமாக பதிக்க அவர்களுக்குள் சிறுசிறு கூட்டங்கள் நடத்தி, நம் நாட்டிற்குரிய பண்பாட்டினை கடைபிடிக்க செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள், அரசியல்வாதிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போன்றோரை அழைத்து 'குடிமையில் இளைஞர்களின் ஈடுபாடு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற செய்யவேண்டும்.
இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றிய தகவல்களை திரட்டி கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். பொதுமக்கள் மத்தியில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி விளக்கும் பொருட்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் ஆலோசனைகளை ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இளைஞர் நல அமைச்சகத்திற்கு www.un.org/youth என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.-கே.ஜவஹர்,இளைஞர் ஒருங்கிணைப்பாளர்,நேரு யுவகேந்திரா99764 78181.dyc.maduraigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement