Advertisement

பாரதியின் இதழியல் புதுமைகள்

பாரதி பார் போற்றும் கவிஞர். நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு இதழியலாளர், தமிழ் இதழியலில் புதுமைகள் தந்த முன்னோடி என்பது முக்கியமான பதிவு.
தொடக்க காலத் தமிழ் இதழியலில் பல புதிய உத்திகளைத் திறம்படக் கையாண்டவர். அவற்றில் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, சூரியோதயம், தர்மம் ஆகிய இதழ்களிலும் பாலபாரதா, 'ஆர் யங் இந்தியா' என்னும் ஆங்கில இதழிலும் பாரதி பணியாற்றினார்.
தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழும் அரசியல் இதழுமாகிய சுதேசமித்திரனின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரிடம் நல்ல பயிற்சி பெற்றிருந்த பாரதி, தாம் ஆசிரியராக பொறுப்பேற்ற இதழ்களில் அமைப்பில் பல புதுமைகள் செய்தார். வார இதழ்கள் அளவில் பத்திரிகைகள் வந்தபோது, 'இந்தியா'வின் அளவை பெரிதாக நாளிதழ் போல் மாற்றினார். விஜயா இதழும் இந்தியா இதழை போன்றே பெரிய அளவில் வெளிவந்தது. சூரியோதம், கர்மயோகி போன்றவை புத்தக அமைப்பில் வெளிவந்தன.
இதழின் உள்ளடக்கம் :இலக்கிய பகுதி, கைத்தொழிற்பகுதி, ராஜரீகப் பகுதி, வர்த்தமானங்கள், இந்தியாவில் குழப்பம் என்னும் தலைப்புகளில் பல பகுதிகளை இந்தியா இதழில் அமைத்தார். அரசியல் இதழ் என்றாலும் உழவுத் தொழில், அறிவியல், கல்வி, பெண்கள் பற்றிய செய்திகள், தலவரலாறு, சமயக் கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டு இந்தியா இதழை வெளியிட்டார்.
செய்திகளை பிரித்து பம்பாய், கல்கத்தா, லாகூர், சென்னை என்று தலைப்புகளில் வெளியிட்டதோடு ராய்ட்டர் என்ற தலைப்பில், அச்செய்தி நிறுவனம் அனுப்பிய செய்திகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.சக்கரவர்த்தினி (1905 -1906) இதழில் ஆங்கில ஆண்டும் மாதமும் குறிப்பிட்டு வெளியிட்டார். பின்னர் இந்தியா, விஜயா (1906 -1910) முதலிய இதழ்களில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் குறித்து அவற்றோடு ஆங்கில ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றை குறித்தார்.
இவ்வாறு இதழியலில் தமிழ் ஆண்டு மாதம், நாள் இவற்றை முதன்முதலாக குறித்தவர் பாரதி. கர்மயோகி (1910) இதழில் தமிழ் ஆண்டு, மாதம், நாள் மட்டுமே குறித்தார். புதுவை இந்தியா இதழிலும் விஜயா இதழிலும் பக்க எண்களைத் தமிழ் எண்களில் கொடுத்துள்ளனர். இவ்வகை இதழியலில் முதன் முதலில் தமிழ் எண்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே.
தலைப்பிடும் முறை :செய்திகளுக்கும் ஆசிரியர் உரைகளுக்கும் செய்தி அலசல்களுக்கும் தலைப்பிடும் முறை பாரதி காலத்தில் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனினும் செய்தி எழுத்தின் அளவை விட சிறிது பெரிய அளவு எழுத்தை தலைப்பாக பயன்படுத்தினார். தலைப்பிடுதலை 'மகுடமிடல்' என்று பாரதி குறிப்பிடுவார். சக்கரவர்த்தினி இதழில் 1905, 1906 மற்றும் இந்தியா இதழில் 1906, 1907 ல் பாரதி ஆங்கிலத் தலைப்பும் கீழே தமிழ்த்தலைப்பும் தந்து எழுதும் வழக்கம் கொண்டிருந்தாலும் பின், இந்தியா, விஜயா, கர்மயோகி முதலிய இதழ்களில் தமிழில் மட்டுமே தலைப்பு அமைத்துள்ளார். தமிழில் மட்டும் தலைப்பிடுவதை திரு.வி.க.வுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியவர் பாரதியே.
விவாதக் கட்டுரைகள் :சக்கரவர்த்தினி இதழில் பாரதி வெளியிட்ட அறிக்கையில் ''மாதந்தோறும் நமது பத்திரிகையில் பெண்களுக்கினிய ஏதேனுமோர் விடயம் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட இருவர்களால் ஒவ்வொரு வியாசம் எழுதப்படும். ஒரே விடயத்தைபற்றி ஜனங்கள் எத்தனை மாறுபாடான அபிப்பிராயம் வைத்துக் கொண்டிருந்தால் சாத்தியமென்பதை எடுத்து விளக்கும் பொருட்டு ஒரு விவாதத்தின் இரு கட்சிகளையும் கேட்டு நியாத்தைக் கண்டுபிடிக்கும் வழக்கம் நமது மாதர்களுக்குள்ளே பலப்படும் பொருட்டும் இம்முறை அனுசரிக்கப்படுகிறது'' எனக்குறிப்பிட்டார்.
சந்தாவில் புதுமை :200 ரூபாய்க்கு குறைவாக மாத வருமானம் உடையவர்களுக்கு ஆண்டு சந்தாவை மூன்று ரூபாயாகவும்; 200 ரூபாய்க்கு மேற்பட்டவர்களுக்கு பத்து ரூபாயாகவும் அரசாங்கத்தார், ஜமீன்தார்கள், ராஜாக்கள், பிரபுக்களுக்குஉரிய ஆண்டு சந்தா 30 ரூபாய் எனவும் பாரதி அறிவித்தார். கர்மயோகி இதழுக்கு மாணவர்களுக்கு மட்டும் குறைந்த ஆண்டுக்கட்டணம் விதித்தார்.
பாரதி தனது பெயரை, மிகப் பொதுவாக எழுதும்போது மட்டுமே வெளிப்படையாக காட்டிக் கொண்டுள்ளார். பிற இடங்களில் தம்மை காட்டிக் கொள்ளாமல் புனைப்பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார். வெள்ளைக்காரர்களை துண்டு துண்டாக வெட்டி கங்கையாற்றில் எறிய வேண்டும் என்று ஸ்வர்ணவங்கம் என்ற ரகசிய சங்கம் வெளியிட்ட துண்டு விளம்பரத்தை ஆங்கில இதழ் எடுத்து வெளியிட, அதனைத் தம் இதழில் அப்படியே வெளியிட்டு இறுதியாக, ''ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களைப் பற்றி பிற இதழ்களில் வந்தவற்றைத் தான் எடுத்து வெளியிட்டுள்ளேன்'' என்ற வகையில் சட்ட நுணுக்கத்தோடு பாரதி எழுதியுள்ளார்.
கேலிச்சித்திரங்கள் :பாரதியாருக்கு முன் சமூக சீர்திருத்தம் தொடர்பான கார்ட்டூன்கள் எனப்படும் கேலிச்சித்திரங்கள் வெளிவந்துள்ளனவாக கூறப்படுகிறது. ஆனால் அரசியல் பிரசாரக் கருத்துப்படம், சுயப்படைப்புகளாக பாரதியாரிடம் இருந்தே தொடங்கியது என்பது வரலாற்று உண்மை. கருத்துப் படம் (கார்ட்டூன்) என்பது கேலிச் சித்திரம், அங்கத ஓவியம், அரசியல் வகை கேலிச் சித்திரம், ஏளன ஓவியம், வேடிக்கை ஓவியம் என்றும் வழங்கப்படும்.அவற்றை பாரதி தமது பத்திரிகையில் அமைக்கும் போது, ஓவியரிடம் இப்படி இருக்க வேண்டுமென கூறி தமது முகத்திலும் அபிநயங்களிலும் காண்பித்து விடுவதுண்டு. ஓவியரின் மனதில் அந்த பாவனைகள் நன்கு பதிந்துவிடும். அவ்விதமே சித்திரமும் தயாராகும். கேலிச் சித்திரங்களின் முன்னோடி என்ற பெருமை பாரதியை சாரும்.
விளம்பரம் என்பது கருத்துக்களை பரப்பும் கருவி என்றும், இதழியல் மக்கள் தொடர்புக்கு உரிய வாயில் என்றும் பாரதி நன்கு அறிந்திருந்தார். அதிக அளவில் விளம்பரங்களை இதழ்களில் வெளியிட்டார்.சூரியோதயம் இதழில் 13.2.2010ல் இரண்டே முக்கால் பக்க விளம்பரத்திற்காக இடம் ஒதுக்கி 'டுலெட்' என குறிப்பிட்டு காலியாக விடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு புதுமை.எளிய நடையில் எழுத விரும்பிய பாரதி மிகவும் புதிய சொற்களை பயன்படுத்தினால் மக்களுக்கு புரியாமல் போகும் என்பதால் பழைய சொற்களுக்கு புதிய பொருளை ஏற்றியும், பழைய சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கியும் வழங்கியுள்ளார்.
புனைப்பெயர்களில் புதுமை : புனைப்பெயர்களில் எழுதிப் புதுமை செய்தவர் பாரதி. இளசை சுப்பிரமணியன், வேதாந்தி, நித்தியதீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்திதாசன், சாவித்திரி என்பவை பாரதியின் புனைப் பெயர்கள். அரசியல் சூழலில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பாரதி புனைப்பெயர்களைப் பயன்படுத்தினார்.
தொடக்கத்திலும் இறுதியிலும் பணியாற்றிய சுதேசமித்திரனில் பாரதி உருவாக்கிய நடைச்சித்திரமும் எளிய தமிழ் நடையும், இந்தியா இதழில் காட்டிய அரசியல் விழிப்புணர்ச்சியும் தமிழ் நாட்டில் பல இதழ்கள், இதழாளர்கள், இதழாசிரியர்கள் உருவாக காரணமானது. எண்ணற்ற இதழாளர்களுக்கு வழிகாட்டியாகவும், இதழியல் உத்திகளுக்கு முன்னோடியாகவும் பாரதி விளங்குகிறார்.-பா. பனிமலர்,தமிழ்த்துறை தலைவர்,இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லுாரி,மதுரை. 94873 39194

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement