Advertisement

மாணவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள்!

''ஒருமைக் கண்தான் கற்றகல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப்பு உடைத்து''கல்வி வெள்ளத்தால் போகாது, வெந்தணனால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவே ஒழியக் குறைபடாது. கல்வி என்னும் பொருள் இருக்க, உலகெலாம் பொருள் தேடி ஊழல்வது ஏனோ.ஒரு பிறவியில் நாம் கற்ற கல்வியின் சிறப்பானது பல பிறப்பிற்கும் வந்துதவும்.'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என கல்வியின் பெருமையை குறுந்தொகை நவில்கிறது. கல்வியை பெறுவது என்பது உள்ளத்தால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் மேன்மையான நிலைக்கு கொண்டு செல்லுதல் ஆகும். கல்வி என்பது உலகத்துடன் இயற்கையுடன் இயைந்த தேடலாக இருக்க வேண்டும். குருகுல வாழ்க்கை குருகுல வாழ்க்கையில் கல்வி, நற்பண்புகளை பெற குழந்தைகளை ஆசிரியரின் இல்லத்தில் விட்டு விடுவர். ஆசிரியரும் அவருடைய மனைவியும் குழந்தைகளுக்கு அனைத்துமாய் இருந்து அரவணைப்பர். குழந்தைகளுக்கு மாதா, பிதா, குரு தெய்வங்களாக இருந்தார்கள். குரு தன்னிடம் பயில வரும் மாணவர்களுக்கு கல்வியுடன் இறைவனிடம் மாறாத பக்தி, மனஅடக்கம், ஒழுக்கம் உடமை என அனைத்துப் பண்புகளையும் கற்று கொடுத்தார். 'பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்பது போல மாணவர்கள் குருவை பணிந்து நல்லுறவுடன் கற்றனர். காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப, கல்வியின் தன்மையும் மாறி விட்டது. குருகுல வாழ்க்கை மாறி, பள்ளிகள் உருவாகின. ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் இருப்பார். அவரே எல்லா பாடங்களையும் நடத்துவார். மாணவர்களுக்கு பாடம் சுமையாக இருக்காது. சுலபமாகவும், சுகமாகவும் அனைத்தையும் விரும்பிக் கற்று கொள்வார்கள். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே கள்ளமில்லா அன்பு, கனிந்துருகும் பேச்சு, உண்மை சொல்லும் உயர்வு என அனைத்துமே இயல்பாக நிறைந்திருந்தது. மாணவர்கள் ஆசிரியர் கூற்றே மெய்கூற்று என்று எண்ணினர்.சின்னஞ்சிறு குருவி போலே நீதிரிந்து பறந்துவா பாப்பாவண்ணப்பறவைகள் கண்டு நீமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பாகாலை எழுந்தவுடன் படிப்பு பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுவதும் விளையாட்டு என்றுவழக்கப்படுத்தி கொள்ளு பாப்பாபாரதியார் கூற்றுக்கு இணங்க மாணவர்கள் பறவைகளுடனும், வண்ணத்துப் பூச்சிகளுடனும் ஓடி மகிழ்ந்தனர். மாசில்லா காற்றை சுவாசித்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். நுங்கு வண்டி, நொண்டி, கிட்டிப்புல், கபடி, பல்லாங்குழி என்று எளிதில் கிடைப்பதை கொண்டு இன்பமாக விளையாடினர்.ஆற்றிலும், குளத்திலும் குளித்து உடம்பை உறுதிப்படுத்தி கொண்டனர். விழாக்காலங்களில் கூட்டு முயற்சியுடன் அன்பை பரிமாறிக் கொண்டனர். பள்ளிக்கூடத்தில் மட்டுமின்றி சமுதாயத்திலும், நன்மை தரும் செயல்களை கற்று கொண்டார்கள். குருகுல வாழ்க்கையில் மாணவர்களுக்கு ஆசிரியரிடம் பக்தி இருந்தது. அடுத்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு ஆசிரியரிடம் மரியாதை இருந்தது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கிலிருந்து இதை அறியலாம்.''ஆல் ஒடிந்து வீழ்ந்தாலும், தோள்கள் தாங்கும்அப்படி நாம் பிள்ளைகளை, வளர்த்தாலோபாலொடும் சர்க்கரை கலந்த இனிய சொல்லாய்பரிசு நமக்கு தந்தார் பாராய்'' எழுத்துக்கு பாரதி, எண்ணுக்கு ராமானுஜர், அறிவியலுக்கு அப்துல் கலாம், ஆன்மிகத்திற்கு ரமணர் என அனைவரையும் தந்தது எளிய பள்ளியே. இன்றைய நிலை என்ன இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் கல்வி வாழ்க்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது. வண்ணத்துப் பூச்சிகளோடு ஓடி மான் போல துள்ளி, மயில் போல ஆடி விளையாட வேண்டிய குழந்தைகள், கல்வி என்ற போர்வையில் சிறகுகள் ஒடிக்கப்பட்ட பறவைகளாக மாற்றப்பட்டு விட்டனர். ''மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றுஅவர்சொல் கேட்டல் இன்பம் செவிக்கு''கல்வியின் பளுவால் மக்களின் மெய் தீண்டலைக் கூட பெற்றோர்கள் பெற முடியவில்லை. காலத்தின் கட்டாயத்தால் தங்கள் குழந்தைகள் காலையிலிருந்து இரவு வரை என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோரே அட்டவணை தயார் செய்து விடுகிறார்கள்.காற்றில் பட்டம் விட்டு விளையாட வேண்டிய பருவத்திலேயே குழந்தைகள் என்ன பட்டம் வாங்க வேண்டும் என பெற்றோர்கள் தீர்மானித்து குழந்தைகளை உருவாக்குகின்றனர். மடியில் பொம்மை வைத்து விளையாட வேண்டிய பருவத்தில் மடிக்கணினியை சுமக்கிறார்கள். அன்று குழந்தைகள் பள்ளி விட்டு வீடு வந்தால் மாலை நேரம் முழுவதும் வெளியில் விளையாடுவார்கள். இன்று பள்ளி விட்டு குழந்தைகள் வீடு வந்தால், பாடச்சுமையின் காரணமாக விளையாட்டு என்பதையே மறந்து விட்டார்கள்.''அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்''அமிழ்தம் போன்று இன்பத்தை அளிக்கும் குழந்தைகளின் சொல்லையும் செயலையும் காண வழியின்றி போய் விட்டது. குழந்தைகளின் மதிப்பெண்ணே வாழ்க்கையின் குறிக்கோளாக மாற்றப்பட்டு விட்டது.அவர்களுக்கு முன்னே வெற்றி காண பல இலக்குகள் உள்ளன. அந்த இலக்குகளை காண மறுக்கிறோம். கல்வி என்ற ஓட்டப்பந்தயத்தில் குழந்தைகள் தவறி விட்டால் அவர்களுக்கு எண்ணச் சிதறல்களும் மனச்சிதைவும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மனதளர்ச்சி ஏற்படும் போது குறைகளை நிறைகளாக்கி காட்டியவர்களை பற்றி பெற்றோர் சொல்ல வேண்டும். 27 வயதில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், கண் பார்வையின்றி இருட்டையே சவாலாக ஏற்றுக் கொண்டு பார்வையற்றோர்க்கு பிரெய்லி முறையை கண்டுபிடித்த ஹெலன் கெல்லர், அறிவிலி என்று மற்றவர்களால் கேலி செய்யப்பட்டு விஞ்ஞானத்தில் அரிய தொண்டு ஆற்றிய ஐன்ஸ்டின், காதில் குறைபாடு இருந்தும் சிறந்த இசைக் கலைஞரான பீத்தோவன்- இவர்கள் அனைவரும் நம்பக்கையின் சிகரங்கள் என பெற்றோர் உணர்த்த வேண்டும். சிறந்த கல்வி என்பது மாணவர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கையே.-முனைவர் ச.சுடர்க்கொடி,காரைக்குடி. 94433 63865.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement