Advertisement

உலகத்தை காட்டும் கண்ணாடி

''நீ எதைச் செய்தாலும் உனது மனம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு'' என்றார் விவேகானந்தர்.அப்படிப்பட்ட அர்பணிப்பால் உருவாக்கப்பட்டது தான் திருக்குறள். வான்புகழ் வள்ளுவர் இவ்வுலகிற்கு வழங்கிய ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறட்பாக்களும் பழகுந்தோறும், எண்ணுந்தோறும் இவ்வுலகில் வாழும் மக்களுக்கு பற்பல புதிய சிந்தனைகளைத் தருகின்றன. இது இன்றைக்கு மட்டுமல்ல. நாளை தோறும் மனுதனுக்கும் இவ்வுலகியலை உணர்த்த வல்லது.'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'.நம்மைச்சுற்றி எண்ணற்ற விஷயங்கள் நாள்தோறும் நல்லதும் கெட்டதுமாய், காட்சிகளாய், செய்திகளாகய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதில் சரியானது என்று எதை நாம் ஏற்றுக் கொள்வது? யார் எதை சொன்னாலும் உண்மைநிலையை நாம் ஆராய்ந்தறிய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.பன்னிரண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவன் தனக்கு எது சரியான துறை என்பதை தாமே தேர்வு செய்ய வேண்டும். அதை விடுத்து மற்றவர்கள் சொன்னதற்காக முற்றிலும் தான் விரும்பாத துறை ஒன்றை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதில் அவன் எவ்வாறு ஜொலிக்க முடியும். கடமையைச் செய்தால் வெற்றி, கடமைக்காக செய்தால் தோல்வியே மிஞ்சும். வேகத்திற்கு ஈடு கொடுப்பது எப்படி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த உலகத்தையே நம் கைக்குள் அடக்கிவிடலாம் என்ற நிலை இப்போது உள்ளது. இந்த வேகத்திற்கு நம்மை ஈடு கொடுப்பது எப்படி. வெறும் பட்டங்கள் மட்டுமே கை கொடுக்குமா. ஐ.டி., நிறுவனங்கள் கல்லுாரியில் முதலிடம் பெற்ற மாணவனை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. பல்வேறு திறன்களையும் சோதிக்கிறது. மாறிவரும் தொழில்நுட்பத்தை பற்றி அவனுடைய அறிவு, செயலாக்குவதில் அவனுடைய உத்வேகம் என்பதை ஆராய்கிறது. உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப நாளும் ஒரு புதிய சிந்தனையுடன் செயல்பட்டால் தான் அப்பணியில் நீடித்து நிற்க முடியும்.
இவ்வுலகில் மானிடராய் பிறந்ததன் பயன் என்னவெனில், பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது தான். பண்புகள் எல்லாவற்றிற்கும் தாய் அன்பு. அருளின் பிறப்பிடம். நட்பின் உறைவிடம். இப்பரந்த பூமியில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் முக்கியமானது அன்பு என்னும் ஒரு வழிப்பாதை என்பதை திருக்குறள் உணர்த்துகிறது. ஒரு நாட்டிற்கு தேவை நல்ல குடிமக்கள். அவர்கள் எங்கு தோன்றுவார்கள். அந்த இல்லறம் நல்லறமாய் இயங்க அன்பு என்னும் அமைதியான சக்கரம் தேவையன்றோ. அப்போது தான் சத்தமின்றி நன்றாய் ஓடும் இல்லறம் என்னும் சிறந்த அறம்.
ஊக்கமும் உழைப்பும் :வெற்றிக் கொடியை நாட்டியவர்களின் வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் அவர்களின் மனஉறுதியும், கடின உழைப்பும் நமக்குத் தெரியும். உழைப்பதற்கு ஊக்கம் மட்டும் இருந்தால் போதாது. மனத்தின்மையும், மதிநுட்பமும், உடலுறுதியும் வேண்டும். எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் அதனை முழுமூச்சுடன் செய்து முடிக்க வேண்டும். உழைப்பின்றி எளிதில் பொருள் கிடைக்கும் வழியைத் தேடுகின்றனர். இலவசங்கள் சோம்பேறிகளாக்குகின்றன. உழைக்கத் தயாரில்லாதவனுக்கு ஊதியம் எங்கிருந்து கிடைக்கும். மனஉறுதியோடும், ஊக்கத்தோடும், சிறிதும் சந்தேகமின்றி செய்கின்ற செயல்கள் யாவும் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும். கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள் கூட, ஆச்சரியப்படத்தக்க வகையில் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர்வாழ்கின்றனர் என்றால் அதற்கு அவர்களுடைய மனத்திடமே காரணம். வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு. தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு. தோல்வியில் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
பொன்னான காலம் :'காலம் பொன் போன்றது', 'கடமை கண் போன்றது'. விபத்தில் காயமடைந்த உயிரை பார்த்த மருத்துவர் அரை மணி நேரம் முன் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருப்பேனே என்கிறார். ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு திட்டம் தேவை. அதனைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றும் பழக்கத்தை இளமை முதற்கொண்டே பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். காலம் தவறி பெய்கிற மழையால் ஏர் உழும் உழவனுக்கு ஏதும் நன்மை கிடைக்குமா. சரியான காலத்தில் சரியான செயலை சரியாய் மேற்கொள்பவனுக்கே இந்த உலகம் வசமாகும். காலத்தை மதித்தவர்கள் காலம் கடந்தும் நிற்கிறார்கள். வாழ்வில் உயர்ந்த மனிதர்களின் பண்பானது அவர்களது காலம் தவறாமையே உணர்த்தும்.
நாட்டுநலமே நம் நலம் :'இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு'இக்குறளில் ஊற்றுநீர், மழைநீர் ஆகிய இருவளமும் தகுந்த மலையும், அந்த மலையிலிருந்து வரும் நீரும் வலிமையான அரணுமே நாட்டிற்கு உறுப்புகளாகும் என்கிறார். மழை பெய்ய இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். நகரமயமாக்கலால் காடுகளும், வனவிலங்குகளும் அழிவதை தடுக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகளால் ஆறுகள் மாசுபட்டு ஒன்றுக்கும் பயன்படாமல் ஆவதை தடை செய்ய வேண்டும். மழைநீரை சேகரிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்புகிறோம். 'மழைநீர் உயிர்நீர்' என அதன் சேமிப்பை வலியுறுத்துகிறோம். ஆனால் இயற்கை வளங்களை பாதுகாக்க இரண்டாம் நுாற்றாண்டிலே குரல் எழுப்பிய தெய்வப் புலவர் உண்மையில் ஒரு உரத்த சிந்தனையாளர் தான்.'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்நற்ற வானினும் நனிசிறந்தனவே' என பாடினார் பாரதி. இந்த நாடுதானே நம்மைப் பெற்றது.
வீட்டுக்குப்பை எல்லாம் வீதியில் போட்டால் வீதிக் குப்பையை என்ன செய்வார்கள். அரசின் திட்டங்கள் சிறப்பாய் நிறைவேறுவது, பொறுப்புள்ள குடிமக்கள் கையில் தான் இருக்கிறது.- அ.லட்சுமி,தமிழாசிரியை, சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளி, போடி. 99767 72768.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement