Advertisement

பாரதிதாசனும் தமிழிசையும்

பாரதிதாசன் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். பாரதியாருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் எளிய நடையில் பாடல்கள் எழுதவும். கவிதைகள் புனையவும் செய்தார். பாரதிதாசன் என்று பெயரும் வைத்துக்கொண்டார். தமிழ் மொழியும், தமிழனும், தமிழ்நாடும், சீர்பெற்று சிறக்கவே இவர் தம் பாடல் திறன் முழுவதையும் பயன்படுத்தினார். மறுமலர்ச்சி கருத்துக்களை இவர் கவிதைகள் கூறுவதால், புரட்சிக்கவிஞர் என போற்றப்பட்டார். இவருடைய சுப்பிரமணிய துதிஅமுது, சமய நுால் இலக்கியத்திற்கு ஒரு சொத்தாக அமைந்தது.
'தொண்டு செய்வாய் தமிழுக்கு, துறை தோறும் துறைதோறும், துடித்தெழுந்தே' என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர் பாவேந்தர். இசை அமுது: இசைக்கு தொண்டாற்ற இசை அமுது படைத்தவர். தமிழகத்தின் தொன்மையான, இசைத்தமிழ் வரலாற்றை நன்கு படித்து, பாரதியாரைப் போலவே தமிழிசை மரபு அடிப்படையில், பாடல்களை புனைந்துள்ளார். ஆண்
குழந்தைகளை தாலாட்டும் போது (ராகம் நீலாம்பரி)
''உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே'',
என்றும், பெண் குழந்தையை தாலாட்டும் போது (ராகம் நீலாம்பரி)
''வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
துாண்டா விளக்காய்த் துலங்கும்
பெருமாட்டி'', என்றும் பாடுகிறார்.
குழந்தைகள் சிறு வயது முதலே நல்லொழுக்கத்தை பேண வேண்டும் என்ற நோக்கத்தோடு, பொய் சொல்லக்கூடாது என்று குறிப்பிடுகின்றார். பெண் முன்னேற்றம் பற்றி பாடும் போது
''தலைவாரிப் பூச்சூடி உன்னைப்பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை''
என்று பெண் கல்வி அவசியம் பற்றி பாடியுள்ளார். இவருடைய பாடல்கள் இசைக்கல்விக்கு மட்டுமல்லாது, நாடகத் துறைக்கும் துணையாக உள்ளது. அதே பொல் கண்ணி, சிந்து, கும்மி, தெம்மாங்கு போன்ற நாட்டுப்புற மெட்டுக்களிலும் அவர் பாடல்கள் புனைந்துள்ளார்.
பாமரருக்கு புரியும்: ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'' என்று பாடிய பாரதிதாசன், மொழி புரியாமல் பாடுபவர்களையும், மொழி புரியாமல் ரசிப்பவர்களையும் சாடுகிறார். பாரதியைப் பின்பற்றி பாமரருக்கும் புரியக்கூடிய வகையில் எளிய இசைப்பாடல்களை பாடுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.
பாவேந்தரின் ஏற்றப்பாடல்...
''ஊர்க்குழைக்க வேண்டும் - நீ உண்மையுடன் தம்பி
பச்சை விளக்காகும் - உன் பகுத்தறிவு தம்பி
பச்சை விளக்காலே - நல்ல பாதை பிடி தம்பி''
சமுதாயச் சிந்தனைகளை புதிய
கற்பனை வளத்துடன், இசைநயம் சேர்த்து பாடித்தந்தவர் பாவேந்தர்.
'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா - எனக் கின்பம் சேர்க்க மாட்டாயா,அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா
கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா'
என்று பாடியுள்ளார். அதே போல் இரண்டு வரிகளால் கண்ணி என்ற யாப்பு வடிவங்களில் இசைப் பாடல்கள் புனைந்துள்ளார்.
''சோலை மலரே சுவர்ணத்தின் வார்படமே
காலை இளஞ்சூரியனை காட்டும் பளிங்குருவே''
பாரதிதாசனின் இசைப்புலமை என்பது செவ்வியல் இசைச் சார்ந்தும், நாட்டுப்புற இசை சார்ந்தும் இருந்தன. பாடல்கள் எந்த பண்ணிலே இயற்றப்பட்டுள்ளதோ, அந்த பண்ணிலே பாடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். உணர்வுகளை உணர்ந்து பாட, நெறிப்படுத்தியவர் பாரதிதாசன், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று நலம்பட சொல்லி இசைநலமும், தமிழ்நலமும், கருத்துநலமும் சிறக்குமாறு பாடிக் குவித்திருக்கின்றார்.
இயற்பெயர் முத்திரை :
''இனிமை தமிழ்மொழி எமது எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல்லமுது''
ராக, தாள பெயர்களை குறிப்பிட்டும், முன்னே புகழ்பெற்ற இசைப்பாடலின் மெட்டை குறிப்பிட்டும் பாடல்கள் நிறைய புனைந்திருக்கின்றார். தியாகராஜர் கீர்த்தனைகள் பதினொன்றை தமிழில் மொழி பெயர்த்தவர். அதனை இசை அரங்கில் பாட கலைஞர்களை வலியுறுத்தினார். பாரதிதாசன் தன்னுடைய பாடல்களில் சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை முத்திரையாக வைத்துள்ளார்.
தமிழிசை வரலாற்றை நன்கு பயின்ற பாரதிதாசன், கர்நாடக இசையும் தமிழர் கண்டதே என்று கூறியுள்ளார். அவருடைய தமிழுக்கும் இசைப் புலமைக்கும் உச்சகட்டமாக 'ஸ்ரீசுப்பிரமணியர் துதி அமுது' விளங்குகிறது. முத்தமிழுக்கும் இவருடைய படைப்புகள் இலக்கணமாக இருக்கின்றன.
பாரதிதாசன் இசைப்பாடல்கள் கருத்து கருவூலமாகவும், இசைப் பெட்டகமாகவும் இருக்கின்றன. 'அதோ பாரடி அவரே என் கணவர்' என்ற பாடல் புகழ்பெற்றது. நாட்டுப்புற பாடல் இசையை பின்பற்றி பலவிதமான பாடல்களை தமிழர் உணரவேண்டிய கருத்துக்களை பாடல்களாக பாடியுள்ளார். தாயின் மணிக்கொடி பாரீர் - ஆனந்த களிப்புமெட்டில் பாட வலியுறுத்தினார்.
கீர்த்தனை அமைப்பில் தாயின் மேல் ஆணை, தந்தை மேல் ஆணை, தமிழகம் மேல் ஆணை, துாய என் தமிழ் மேல் ஆணையிட்டு நான் உரைக்கின்றேன். பகுத்தறிவு கொள்கைகளை உடைய புரட்சிக்கவிஞர், இறைவழிபாட்டில் நாள்தோறும் இருந்து திளைத்து வழிபாடு நிகழ்த்துவோர் போல சுப்பிரமணிய துதியை பல்வேறு செய்யுள் வடிவங்களில் தந்துள்ளார். இவற்றில் விநாயகர் துதியில் தொடங்கி தேசிகதோடி, ஆனந்த பைரவி, செஞ்சுருட்டி, சஹானா, பைரவி, போன்ற ராகங்களிலும் புகழ்பெற்ற தியாகராஜர் மெட்டு நன்னபியராம என்ற வடிவிலும் இத்துதி செல்கிறது.
பொன்னடியைத் தந்தருளப்பா இப்போதெப்பாய்நான்
உன்னடிமை யல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய்
சின்னமங்கையர்செய் மனப்பேதிப்பாலிப்பால் நான்
செய்வதறி யேன்மனக்கொ திப்பால் அப்பால்
(சஹானா ராகம்)
பாரதிதாசன் பாடல்கள் இசைத்தமிழுக்கு ஏற்ற கருவியாக அமைந்திருக்கின்றன. பல இசை அறிஞர்கள் இவர் பாடல்களை இசைக்குறியீடுகளால் அமைத்து பாடிவருகின்றனர். தமிழிசையை உலக மக்கள் கேட்டு இன்புற வேண்டுமென்ற நோக்கத்தோடு பல செய்யுள் அமைப்பிலும், நாட்டுப்புற மெட்டிலும், இசைப் பாடல்களை தந்து, தமிழர் இசைக்கே வளம்காண பாரதிதாசன் முயல்வதாக கருதலாம்.
இருபதாம் நுாற்றாண்டில் பாடல்கள் அமைப்பு பற்றி அறிய பாரதிதாசன் இசை அமுது நன்கு உதவும். இவருடைய பாடல்கள் பல திரைப்படங்களிலும் மெட்டமைக்கப்பட்டு நாம் நாள்தோறும் கேட்டுவருகின்ற பாடல்களாக விளங்குகின்றன.
- 'கலைமாமணி'
முனைவர் தி.சுரேஷ் சிவன்,
இசைத்தமிழ் ஆய்வாளர்.
94439 30540.


பாரதிதாசன் பாடல்கள் இசைத்தமிழுக்கு ஏற்ற கருவியாக அமைந்திருக்கின்றன.
பல இசை அறிஞர்கள் இவர் பாடல்களை இசைக்குறியீடுகளால் அமைத்து பாடி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement