Advertisement

மனசுக்கு பிடித்தது மதுரையும், தமிழும்இளம் தொழிலதிபரின் இனிய அனுபவம்

மதுரையில் பள்ளிப்படிப்பு, இங்கிலாந்து வார்விக் பல்கலையில் பொறியியல் மேலாண்மை படிப்பு... 27 வயதில் மதுரை தியாகராஜர் மில்ஸ் செயல் இயக்குனர்... விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் இயக்குனர்... தியாகராஜர் கல்லூரி செயலாளர்... என இளம் தொழில்முனைவோராக, மதுரை மண்ணின் மைந்தராக மிளிர்கிறார்கே.ஹரி தியாகராஜன்.வெளிநாட்டு வாசனை துளியும் இன்றி வார்த்தைக்கு வார்த்தை மதுரையும், தமிழும், மதுரை இளைஞர்களைப் பற்றியும் பற்றுதலுடன் பேசுகிறார்.


* வெளிநாட்டில் படிப்பு..மதுரையில் வாசம்... எப்படி ஒத்துப் போகிறது.


நான் பிறந்து வளர்ந்த மண் இது. மதுரையை விட்டு கொடுக்க முடியாது. எங்கே சென்றாலும் என்ன படித்தாலும் மனதில் முதலிடம் மதுரைக்கு தான்.


* தொழிலதிபராக உங்கள் பார்வையில்மதுரை...


திருச்சி பெல் நிறுவனத்தைச் சுற்றி ரூ.10 கோடி அதற்கு மேல் மதிப்பீட்டில் நிறைய சிறு தொழிற்சாலைகள் வந்தன. கோவையில் டெக்ஸ்டைல் நிறுவனங்களை மையப்படுத்தி நிறைய சிறு யூனிட்கள் பெருகியுள்ளன. தற்போது ஆட்டோமொபைல் துறை பக்கமும் கோவையின் கவனம் திரும்பியுள்ளது. ராஜபாளையத்தில் சிமென்ட், விருதுநகரில் நெசவு, அருப்புக்கோட்டையில் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உள்ளன. மதுரையில் உணவுப்பொருட்கள், தங்கம், வெள்ளி, ஜவுளி என வர்த்தக ரீதியான நிறுவனங்கள் நிறைய உள்ளன. உற்பத்தி தொழிற்சாலைகள் மிகவும் குறைவு.


* மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை


மதுரை நகர்ப்பகுதிகளில் இடமில்லை. மேலூர், கப்பலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு போதிய இடம் உள்ளது. போக்குவரத்தும் எளிதாகஉள்ளது. மனிதவளத்திற்கும் குறைவில்லை. இங்கிருந்து சென்றவர்கள் மதுரையில் தொழில் துவங்க முன்வந்தால் மதுரையும் முன்னேறும். தொழில் துவங்குவதற்கான சரியான நேரமும் இதுதான் என்பேன்.


* எத்தகைய தொழில்களுக்கு வாய்ப்புள்ளது.


கேரளாவில் ஆயுர்வேதமருத்துவத்தை சார்ந்துமருத்துவ சுற்றுலா பிரபல மடைந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதைச் சார்ந்து மருத்துவ சுற்றுலா கொண்டு வரலாம். கோயில் நகர் என்பதால் கட்டடக்கலையை, பாரம்பரியத்தை முறையாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால், வெளிநாட்டவர்கள் மறுபடியும் மதுரைக்கு வரவிரும்புவர். ஸ்பெயின் பார்சிலோனாவில் உள்ள சாக்ரடா பெமிலியா சர்ச்சுக்கு, அப்பா கருமுத்து கண்ணனுடன் சென்றிருந்தேன். அந்த சர்ச்சிலின் வரலாறு குறித்து 'ஹெட்போன்' மூலம் விரும்பிய மொழியில் தகவல்கள் பெறமுடிந்தது. மதுரையின் கட்டடக்கலை, பாரம்பரிய கலைகளை இதேபோல தொழில்நுட்பத்தில் வெளிநாட்டவர்களுக்கு தரவேண்டும்.


* இந்திய தொழில்கூட்டமைப்பின் 'யங் இந்தியன்ஸ்' தலைவராக உள்ளீர்கள். இளைஞர்களுக்கு நீங்கள் செய்ய விரும்புவது.


இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அமைப்பின் மூலம் தொழில் முனைவு கருத்தாக்க போட்டிகளை கடந்தாண்டு நடத்தியுள்ளோம். இந்தாண்டு மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தொழில் முனைவு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.


* தேவாரம் பற்றி எல்லாம் சொற்பொழிவு நிகழ்த்துகிறீர்கள். தமிழ் மீது ஆர்வம் ஏற்பட காரணம்.


தாத்தா கருமுத்து தியாகராஜ செட்டியார் தனித்தமிழ் இயக்க ஆதரவாளர். அப்பாவும் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். தமிழ் என் ரத்தத்தில் கலந்துள்ளது. அதனால் ஈடுபாடும் இயல்பாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பேச அழைக்கும் போது தேவாரம், திருவாசகம், திருமுறை பற்றி பேசுகிறேன். தமிழில் பேசுவது பிடித்தமான விஷயம், என்றார்.


* பிடித்த உணவு - சைனீஸ் உணவுகள்
* பிடித்த இடம் - லண்டன் மியூசியம், ஸ்விட்சர்லாந்தின் மவுண்ட் டிட்லஸ்,மதுரையில் மீனாட்சிஅம்மன் கோயில்.* பிடித்த எழுத்தாளர் - உ.வே.சா. (நினைவு மஞ்சரி)* மனதை பாதித்த புத்தகம் - சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்'* சாதிக்க நினைப்பது - இப்போதுள்ள டெக்ஸ்டைல் துறையிலோ அல்லது புதிய துறையிலோ சுயமாக தொழிற்சாலை நிறுவ வேண்டும்.
இவரிடம் பேச இமெயில் thiagarajantmills.com


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement