Advertisement

எளிமைக்கு இவரே அடையாளம் : இன்று கக்கன் பிறந்த தினம்

'தேடிச்சோறு நிதம் தின்று பலசின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்வாடித் துன்பம் மிக உழன்று- பிறர்வாடப் பலச் செயல்கள் செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் சில
வேடிக்கை மனிதர் போலவீழ்வேனென்று நினைத்தாயோ?"
இப்படி சாதாரண மனிதர்களாய் இல்லாமல், சாதனை மனிதர்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர்,
எளிமையின் அடையாளம், கக்கன்!மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே
ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909ல் கக்கன் பிறந்தார். தந்தை பூசாரிக் கக்கன். தாயார் குப்பி. இவர், நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்.
காந்தியத்தில் கலந்த கக்கன்

25.01.1934ல் மதுரை வந்த காந்தியடிகள், 'மதுரை காந்தி' என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர்., சுப்பு
ராமனின் வீட்டில் தங்கினார். அங்கு தான் சுப்பராமனால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன்பின் காந்தியோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இதன்மூலம் காந்தியம் மற்றும் சர்வோதய கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் வைத்தியநாத அய்யருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 8.7.1939ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த ஆலயப்பிரவேசத்தில் கக்கனும் பங்கேற்றார்.
செல்லுமிடமெல்லாம் 'வந்தே மாதரம்...' சொல்லி நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார். இதை கண்காணித்த ஆங்கில அரசு, அவரை கைது செய்தது.விடுதலை போராட்ட காலங்களில் இரவு நேரத்தில் கூடுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு எடுப்பதும் வழக்கம். சில நேரங்களில் போலீஸ் கண்காணிப்பில் இருந்து பெண் வேடமிட்டு தப்பிப்பார்.
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து அவரை கைது செய்தது.மேலூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் எதையும் அவர் சொல்ல மறுத்தார். இதனால் ஐந்து நாட்கள் தொடர்ந்து கசையடி கொடுத்தனர். அதை பார்க்க அவரது மனைவி அழைத்துவரப்பட்டார். இக்கொடுமையை பார்த்து கண்ணீர் சிந்தினார். தம்மை இழந்து பிறரை காப்பாற்றும் மன வலிமையும் எந்த சூழலிலும் எவரையும் காட்டிக்
கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன். நேரு அளித்த 'ஜி'
ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. தேசிய காங்கிரசின் 70வது ஆண்டு அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. அது 'திறன் மிக்க நிர்வாகி' என கக்கனை அடையாளம் காட்டியது. மாநாட்டுக்கு தலைமையேற்ற பிரதமர் நேரு, அவரை குறிப்பிடும் போதெல்லாம்
'கக்கன்ஜி..." என்றே அழைத்தார். அதன் பிறகு பிற தலைவர்கள் அனைவரும் அவரை அவ்வாறே அழைத்தனர்.
1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காமராஜரின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியை தொடங்கிட உத்தரவிட்டார். 'கல்வியே ஆன்மாவின் உணர்வு. அது இன்றேல் நம் ஆற்றல்கள் செயலற்று போகும்' என்பதை அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டு வசதி வாரியம் அமைத்து குடிசை வாழ் மக்களுக்கும் கிராம வாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார்.
பதவி மயக்கம் இல்லாதவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னறிவிப்பின்றி மதுரை வந்தார். எப்போதும் போல அரசு பயணியர் மாளிகைக்கு சென்றார். அப்போது இரவு 10 மணி. அங்கு யாரோ தங்கியிருந்தனர். "தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அதிகாரிகள் சமாளித்தனர். கண்காணிப்பாளரோ "அங்கு தங்கியிருப்பவரை காலி செய்ய சொல்கிறேன்" என்று விரைந்தார். ஆனால், "அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரும் நம்மை போல மனிதர்தானே" எனக் கூறி, ரயில்வே காலனியிலுள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிகப் பெரிய மரியாதையாக கருதினார்களோ அதை மிகச் சாதாரணமாக அன்று அவர் கருதினார்.
விளையாட்டு வீரரான தம்பி விஸ்வநாதனை பார்த்து அவரை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க செய்தார், அப்போதைய ஐ.ஜி., அருள். பணி நியமனத்திற்கான ஏற்பாடும் நடந்தது.
இதை கேள்விப்பட்டு, "விஸ்வநாதனின் வலது கை விரல்கள் சரியாக செயல்படாது. அவனால்
துப்பாக்கி சுட முடியாது. நாட்டின் பாதுகாவலர் பதவிக்கு எப்படி இவரை தேர்வு செய்யலாம்' என கேட்டு பணி நியமனத்தை நீக்க
உத்தரவிட்டார்.மக்களால் வழங்கப்பட்ட பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காகவும், பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டிய அந்த நேர்மை விளக்கு, 1981, டிச., 23ல் அணைந்தது.
'ஒருவர் பிரிவால் நம் மனதில் சோகம் சூழ்ந்து அவரை பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது பொருத்தமானது தான். - முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
98430 62817.


வாசகர்கள் பார்வை


என் பார்வை மழை

நேர்மறைச் செய்திகளை வழங்கும் என் பார்வை பகுதியை சனி, ஞாயிறு
கிழமைகளிலும் விரிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். நான் என் பார்வை பகுதியை விரும்பி படிக்கும் வாசகர்களில் ஒருவன். அந்த ஆர்வத்தில் தான்
இரு நாட்கள் கூடுதலாக என் பார்வை கட்டுரைகள் வெளிவர வேண்டும்
என வேண்டுகிறேன். அந்தளவுக்கு இப்பகுதியில் அறிவு மழையாக தகவல்கள் பொழிந்து கொண்டிருக்கின்றன. அறிவுக்கு விருந்தளிக்கும் என் பார்வை அனைத்து நாட்களும் வெளியாக வேண்டும்.-சே.மணிகண்டன், பெரியகுளம்.

பல் பாதுகாப்புஎன் பார்வையில் வெளியான

'உங்கள் பற்கள் சுத்தமானதா' கட்டுரை படித்தேன். ஒரு மனிதனுக்கு பற்கள் எவ்வளவு அவசியம் என்பதை கட்டுரை படித்து புரிந்து கொண்டோம். ஒரு பல் ஆடினாலும் உணவை ருசிக்க முடியாமல் தவித்து போவோம். பல் பிரச்னைகளை கையாளும் விதம் குறித்தும், சுத்தமாக பாதுகாக்கும் முறை குறித்தும் டாக்டர் நன்றாக விளக்கியிருந்தார். நவீன தொழில்நுட்ப முறையால் செயற்கை பற்கள் பொருத்திக் கொள்ளும் வசதி குறித்தும் தெரியப்படுத்தியது கட்டுரை.-ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

கருத்து மலர்கள்

கடந்த சில நாட்களாக என் பார்வையில் ரத்த தானம், பற்களின் பாதுகாப்பு குறித்து வெளியான கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தன. என் பார்வை பகுதி ஒவ்வொரு விஷயத்திலும் கால்பதித்து வாசகர்களுக்கு பல தகவல்களை அள்ளி கொண்டு வந்து படிக்க தருகிறது. தினம் மலரும் தினமலர் நாளிதழின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடரட்டும்
என் பார்வை பகுதி... மலரட்டும் பல கருத்து மலர்கள்... வாழ்த்துக்கள்.- எஸ். சரவணன், ராமேஸ்வரம்.

திருக்குறள் இசை

என் பார்வையில் வெளியான 'திருக்குறளில் தமிழ் இசைக் கருவிகள்' கட்டுரை படித்தேன். திருக்குறள் என்றாலே இன்பம் தரக் கூடியது, அதிலும் இசையின் இன்பத்தை அனுபவிப்பது
என்பது ஒரு சுகமான அனுபவம்.
ஆழ் கடலில் மூழ்கி முத்து எடுப்பது போல் திருக்குறள் எனும் தமிழக் கடலில் மூழ்கி இசை எனும் முத்துக்களை நமக்கு கொடுத்துள்ளார் கட்டுரையாளர். சங்கத் தமிழின் இசைக் கருவிகளை முழங்கவிட்டு திருக்குறளின் மகத்துவத்தை வெளிப்படுத்திய என் பார்வைக்கு வாழ்த்துக்கள்.- அன்புச் செல்வன், வீரபாண்டி.

ரத்த தானம் செய்வோம்

என் பார்வையில் வெளியான 'ஒவ்வொரு துளியும் 3 உயிரைக் காக்கும்' என்ற கட்டுரை படித்து ரத்த தானத்தின் அவசியத்தை தெரிந்து கொண்டோம். உதிரம் கிடைக்காமல் எத்தனையோ
பேர் உயிரிழக்கின்றனர். இதை கவனத்தில் கொண்டு ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். 18 வயது முதல் 55 வயது வரை ரத்தம் கொடுக்கலாம் என்றும் அப்படி கொடுக்கும் ரத்தம் மூன்று வாரத்தில் ஊறிவிடும் என்றும்
கட்டுரையாளர் கூறியிருப்பது பயனுள்ளதாக இருந்தது. தானத்தில் உயர்ந்த தானம் ரத்த தானம் என்பதை பதிவு செய்த
என் பார்வைக்கு நன்றி.- ஆல. தமிழ்ப்பித்தன், புனல்வேலி.


குறளின் அருமை பெருமை

என் பார்வையில் வந்த 'திருக்குறளில் தமிழ் இசைக் கருவிகள்' கட்டுரை அருமை. இறைவன், இறைவனுக்கு சொன்னது பகவத் கீதை. மனிதன், இறைவனுக்கு சொன்னது திருவாசகம். மனிதன், மனிதனுக்கு சொன்னது திருக்குறள். உலக மக்கள் அனைவருக்கும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி வாழ்நாள் முழுவதும் திருக்குறள் படித்து சிறப்பு பெறுவோம். இசையுடன் இணைந்து திருக்குறளின் அருமை, பெருமைகளை விளக்கிய கட்டுரையாளர்க்கு பாராட்டுக்கள்.
- சே.மணிகண்டன், பெரியகுளம்.

அற்புத பொக்கிஷம்

என் பார்வையில் வெளியாகும் ஒவ்வொரு கட்டுரைகளையும் ஆழ்ந்து படிக்கிறேன். அந்த வகையில் 'ஒவ்வொரு துளியும் 3 உயிரைக் காக்கும்' கட்டுரை ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ரத்த தானம் கொடுக்கும் விதம், அளவு, வயது பற்றியும் சொல்லப்பட்டிருப்பது பயனுள்ளதாக இருந்தது. காலம் காலமாக பாதுகாத்து, படிக்க வேண்டிய அற்புத பொக்கிஷமாய் கட்டுரை மலர்ந்திருந்தது. டாக்டர் கூறிய அறிவுரைகளை படித்த பின் இன்றே ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.
- கே.வி.சண்முகவல்லி, காரைக்குடி.இசையும் இனிமையும்
இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை, இசையால் வசமாகும் மனிதர்களுக்கு திருக்குறளில் இசையின் பங்கு இருக்கிறது என்பதை தெரியப்படுத்தியது என் பார்வையில் வெளியான 'திருக்குறளில் தமிழ் இசைக் கருவிகள்' கட்டுரை. இசையோடு, திருக்குறளையும் அராய்ச்சி செய்து அழகான கட்டுரையை கொடுத்துள்ளார் கட்டுரையாளர். திருக்குறளின் பொருளோடு இசையின் இனிமையும் படித்து பரவசமடைந்தோம். இது போன்ற வித்தியாசமான கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.
- அ. முகமது இஸ்மாயில், தேவகோட்டை.

அழுத்தமான எழுத்துக்கள்

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கருத்துக்களை தாங்கி வரும் என் பார்வை கட்டுரைகளை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. எழுத்தாளர்களின் அழுத்தமான எழுத்துக்களின் ஆழம், படிப்பவர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது. வாசகர்களுக்கு புதுமையான தகவல்களை அள்ளித் தருவதில் தினமலர் நாளிதழ் என்றுமே முதலிடம் என்பதை இப்பகுதியில் வெளியாகும் கட்டுரைகள் உணர்த்துகிறது.
- கா. கணபதி, ராமேஸ்வரம்.

தெளிவான அறிவுரை
என் பார்வையில் வெளியான 'ஒவ்வொரு துளியும் 3 உயிரைக் காக்கும்' கட்டுரை படித்தேன். பிறரின் துன்பத்தைக் கண்டு சில துளிகள் கண்ணீர் சிந்துவதை விட, ஒரு உயிரைக் காப்பாற்ற பல துளிகள் ரத்தம் கொடுப்பதே சிறந்த சேவை மனப்பான்மை என்பதை என் பார்வை கட்டுரை உணர்த்தியது. டாக்டர் குணசேகரன் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஒரு ஆசான் மாணவர்களுக்கு கூறியது போல தெளிவாக இருந்தது. இவர் கூறிய அறிவுரையை பின்பற்றி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்.
-எம்.வீ.மதுரைச்சாமி, மதுரை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement