Advertisement

யாருக்கும் அஞ்சாத வாஞ்சி:இன்று பிறந்த நாள்

''என் தாய் திரு நாடே! உன்னை என்றும் நினைத்திருப்பேன். ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்,'' என்ற கூற்றுக்கு ஏற்ப தேசப்பற்றின் நாற்றாக இருந்தபோதே அவர் மனதில் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. யார் அவர்? அவர் தான் 25 வயதிலேயே தன் அங்கத்தை தன் தங்கமான நாட்டிற்கு பங்கிட்ட பாலகன் வாஞ்சிநாதன்.'புகழோடு தோன்றுக' என்ற ஒரு புலவனின் ஏக்கத்தை புவியில் பூர்த்தி செய்ய புண்ணிய பூமியில் பூத்த வாஞ்சி நாதன், செங்கோட்டையில் வாழ்ந்த ரகுபதி ஐயருக்கும், குப்பச்சி அம்மாளுக்கும் குலவிளக்காய் அவதரித்தார். தாய் நாட்டை தெய்வமாக மதித்தார்.
இளமைப் பருவம் :ரகுபதி ஐயருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். வாஞ்சி மூத்த பிள்ளை... முத்துப்பிள்ளை... ஆம்! பாரதத்தாய் தத்தெடுத்தத் தங்கப்பிள்ளை. இந்த தங்கப்பிள்ளை 1886 ஜூன் 17 ல் தரணியில் பிறப்பெடுத்தது. அவரது இயற்பெயர் சங்கரன்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்த வாஞ்சி, 'மகராஜா கல்லுாரியில் பி.ஏ., பட்டப்படிப்பு முடித்தார். வாஞ்சிக்கு 23 வயது ஆகும்போதே பொன்னம்மா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். வாஞ்சி பரோடா சென்று மரவேலை சம்பந்தமான தொழில் படிப்பை முடித்தார். புனலுாரில் அரசு வேலையில் வன அதிகாரியாக பணியாற்றினார். பின் அதை உதறி விட்டு தாய் திருநாட்டை காக்க ஆயத்தமானார்.
வாஞ்சியின் வாசகம் :அழகுபிள்ளை என்பவர் நடத்தி வந்த வாசக சாலையை பற்றி கேள்விப்பட்ட வாஞ்சி, பாரத மாதா சிலையுடன் அவரை சந்தித்து தனது அன்பு பரிசாக அதை கொடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கான திட்டங்கள் தீட்ட இந்த நுாலகம் தகுந்த இடம் என வாஞ்சி கூறினார். இதை கேட்ட அழகுப்பிள்ளை அகம் மகிழ்ந்தார். இளம் வயதிலேயே தேசப்பற்று வாஞ்சி உள்ளத்தில் ஊற்றெடுத்திருப்பதை கண்டு மெய்சிலிர்த்தார்.
ஒரு நாள் அழகுப்பிள்ளை வீட்டில் திருமலை முத்துப்பிள்ளை போன்ற தேசிய இயக்க இளைஞர்கள் கூடியிருந்தனர். பாரத மாதா பற்றிய எழுச்சிப் பாடல்களை உணர்ச்சி கொட்டப்பாடினர். திடீரென்று வாஞ்சி எழுந்து ஒரு அறைக்கு சென்று, கதவை அடைத்து கொண்டு கத்தியால் கட்டை விரலை வெட்டினார். இதை பார்த்த திருமலை முத்துப்பிள்ளை மயங்கி விழுந்தார். பாரத தாய்க்கு வாஞ்சி கொட்டிய முதல் ரத்தம் அது. பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடலால் பாரத மக்கள் உணர்ச்சி அடைந்தது போல், வாஞ்சிக்கும் தேசஉணர்வு தேகமெல்லாம் மின்னோட்டம் போல ஓடிய விளைவே இந்நிகழ்வுக்கு காரணம்.
சுயதீட்சை :''தன் சோறு தன் பிள்ளை, தனது பொண்ணு என வாழ்ந்த காலத்தில் பாரத தாய்க்கு ஊறு செய்வோரை கூறு போடுவேன் என்று குதித்தெழுந்து கொதித்தெழுந்தவர் வாஞ்சி. அவருக்கு பெண் குழந்தை பிறந்து இறக்க, அதற்கு ஈமக்காரியம் செய்ய வாஞ்சியின் தந்தை அழைத்தபோது வர மறுத்தார். ''அப்பா நம் பாரத தேசம், சுதந்திரம் அடைய வளர்த்த 'சுய தீட்சை' இது. அந்த காரியம் நிறைவேறும் வரை என் பிள்ளைக்கு எந்த காரியமும் செய்யப்போவதில்லை. இது சத்தியம்'' என்றார். ''நம்மை அடிமையாக்கியவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதே எனது குறிக்கோள்'' என்று இறுதியாக கூறினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யை செக்கிழுக்க வைத்ததாலும், சுப்பிரமணிய சிவாவை, சுண்ணாம்பு காரத்தில் ஊறப்போட்ட ஆட்டு ரோமங்களை கையால் சுத்தம் செய்ய வைத்ததையும் கேள்வியுற்ற வாஞ்சி, நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ் மீது கொலைவெறி கொண்டார்.கடைசி குட் மார்னிங் 1911 ஜூன் 17 ல் கோடைகால விடுமுறையை கழிக்க கலெக்டர் ஆஷ், மனைவியுடன் கொடைக்கானல் போவதற்கு ரயிலில் மணியாச்சி சந்திப்பை தாண்டி செல்கிறார் என்பதை அறிந்த வாஞ்சி, ஆ ைஷ 'சுழிக்க' ஆயத்தமானார். முதல் வகுப்பில் பயணம் செய்த ஆஷை சந்தித்து, ''குட்மார்னிங் மிஸ்டர் ஆஷ்,'' என்றார். வாஞ்சி - ஆஷ் சொன்ன கடைசி குட்மார்னிங் இது தான். மாறு வேடத்தில் இருந்த வாஞ்சி தன் துப்பாக்கியால் ஆஷின் ஆன்மாவை முடித்தார்.
சுதந்திர போராட்ட வீரர்களை நித்தம் சிதைத்து கொடுமைகள் கொடுத்த கொடுங்கோலனை வீழ்த்தி விட்டு, குளியல் அறைக்கு சென்று தன்னையே அழித்து வீர மரணம் அடைந்தார் வாஞ்சி.பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும், நனி சிறந்ததென்று நாட்டுக்கு தன்னையே தந்த தாரகைகளை தரணி மறக்குமா?மறையவில்லை... செங்கோட்டை கரையாளர் பூங்காவில் உள்ள நினைவு மண்டபத்தில் உறைகிறார் வாஞ்சி. நம் நெஞ்சில் நிறைகிறார் யாருக்கும் அஞ்சாத வாஞ்சி. ஜெய்ஹிந்த்!- கவிஞர் மு.ராமபாண்டியன்,துணைச் செயலாளர், உலகத் தமிழ் ஆய்வு கழகம்,மதுரை.97906 95517.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement