Advertisement

திருக்குறளில் தமிழ் இசைக்கருவிகள்


உலகப் பொதுமறை திருக்குறள். தமிழர்கள்அனைவரும் செய்த தவத்தின் பயனாக 'திருவள்ளுவர்'தமிழராகப் பிறந்தார். உலகச் செம்மொழியில் சிறந்து விளங்கி என்றும் சீரிளமை திறத்துடன் இருக்கும் தமிழ்மொழியில் திருக்குறளைப்பாடியுள்ளார் திருவள்ளுவர். தம் உள்ளத்தில்எழுந்த கருத்துக்களைக் குறள் வெண்பாவின் துணை கொண்டு வெளிப்படுத்தி உள்ளார்.
திருக்குறள், அறத்தை உரைப்பார்க்கு ஒரு பேரற நூல், கவிச்சுவை விரும்புவோருக்கு காவியம், ஞானத்தை விரும்புவோருக்கு ஞானநூல், காமச்சுவை விரும்புவோருக்கு காமநூல், வாழ்க்கை நெறி முறைகளை அறிய விரும்புவோருக்கு வாழ்க்கை வழிகாட்டு நூல் என இந்நூலின் அறிவுரைப்படி
வாழ்பவரே உலகில் 'வாழ்பவராக கருதப்படுகிறார்'.இத்தகைய சிறப்புப்பெற்ற திருக்குறள் அதுஎழுதப்பட்ட காலத்தின் கண்ணாடியாக விளங்குவதையும் நாம் காண்கிறோம்.
தமிழகத்தின் கலை, இலக்கியம் என்பது திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தே மிகப் பொலிவுடன் விளங்கி உள்ளதை அவரது குறட்பாக்கள் தெரிவிக்கின்றன. முத்தமிழில் ஒன்றான இசைக்கலை தமிழர்களிடம் எங்ஙனம் பரவியிருந்தது என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்ந்தாலும், அதற்கு
முன்னரே இசையும். இசைக்கருவிகளும் தமிழ் மண்ணில் இருந்துள்ளன என்பது திருக்குறளில் அணிநயங்களோடு திருவள்ளுவர் புனைந்துள்ளார்.
முதல் கருவி
'இசை தோன்றும் முன்னரே இசைக்கருவிகள் தோன்றிவிட்டன' என்பார் இசை அறிஞர். இவ்விசை கருவிகளுள் முதலில் தோன்றியது காற்றுக் கருவியான குழல் மற்றும் தோல் கருவியான பறையும் ஆகும். மனிதனுடைய இசை அறிவு வளர தோன்றியது யாழ் எனும் நரம்பிசைக் கருவி.
வில்லும் யாழும் தோற்றத்தில் ஒத்து இருக்கும். ஆனால், யாழ் இனிய இசையை தருகிறது. வில் கொலைத் தொழிலை செய்கிறது. தவஞ்செய்வோரை அவரது தோற்றம் கண்டு மயங்காமல், அவர் செய்கின்ற செயலைக் கொண்டு தேற வேண்டும் என்பதை'கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கன்னவினைபடு பாலாற் கொளல்' -(துறவு)என்று இயம்புகிறார்.
இனி, குழல் எனும் கருவியோடு யாழ் வாசிக்கப்பட்டு வந்துள்ளதை சங்க இலக்கியப் பாடல்கள் காட்டுகின்றன. திருவள்ளுவர், 'குழந்தையின் மழலை மொழியை கேளாதவர்கள் குழல் இசையையும்,
யாழிசையையும் இனிதென்பர்' என்கிறார்.குழலினிது யாழினிது என்ப தம் மக்கள்மழலைச் சொல் கேளாதவர்.
குழல் ஆயர் வாசிக்கும் ஓர் உன்னத இசைக்கருவி. கண்ணனும், ஆனாய நாயனாரும் குழல் வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தவர்கள். தலைவனை பிரிந்திருந்த தலைவிக்கு மாலை நேரம் வரும் போது அங்கு ஆயர்களால் வாசிக்கப் பெறும் குழல் துன்பம் தருவதாக அமைந்திருப்பதாக,
அழகான சித்திரம் தீட்டுகிறார் வள்ளுவர்.அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல் போலும் கொல்லும் படை.-தோல் கருவியான பறை பழங்காலத்தில் செய்திகளைச் சொல்ல பயன்பட்டு வந்தது. மலையாள மொழியில் 'பற' என்றால் 'சொல்லு' என்ற பொருளில் வழங்கப்பட்டு வருவது தற்போதும் காணலாம்.கயமை அதிகாரத்தில் கயவர்களின் இயல்பு பற்றி தெரிவிக்கும்போது,'அறைபறை அன்ன கயவர் தாம் கேட்டமறை பிறர்க்குய்துரைக்க லான்' என்கிறார்.தாம் கேட்ட சொற்களை இடம் தோறும் தாங்கிக் கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான் கயவர், அறையப்படும் பறையினை ஒப்பர். பிறரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன செய்தியை பலருக்கும் ஒருவன் தெரிவிப்பதை கயவன் என்று குறள் கூறுகிறது. பறை, ஒருவன் கையால் தன்னை அறிவித்த ஒன்றினை இடந்தோறும் கொண்டு சென்று அறிவிக்கும். ஆதலால் தொழில் உவமமாக வைத்துள்ளார்.
மிகை வர்ணிப்புஒரு அழகிய பெண்ணை அவளுடைய அழகை ஆடவன் வருணிக்கும் போது அதில் மிகையே
மிகுந்திருக்கும். இங்கும் அப்படியே ஒரு காட்சி.'அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்
நுசுப்பிற்கு நல்லபடா பறை'.அனிச்சப்பூவை இடையில் சூடினாள் நங்கை ஒருத்தி. அதன் பாரம் தாங்காமல் இடை முறிந்தால் அப்போது சாப்பறை ஒலிக்கப்படுமே என்று உரையில் கூறுகிறார் பரிமேலழகர். பறை எனும் தோல்கருவியில் கண் என்பது 'இம்' மென ஒலி தரும் பகுதியாகும்.
தலைவனுடைய இயல்பை மறைக்க வேண்டுமென்று தோழிக்கு ஒரு தலைவி கூறுவதாக அமைந்துள்ள குறள் இது.'மறைபெறல் ஊரார்க் கரிதன்றல் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து''எம்மை போலும் அறைபறையாகிய கண்ணினை உடையார் நெஞ்சில் கண் உள்ளதை, இவ்வூரினர் எளிதாக அறிவார்' என்று தலைவி கூறுவதாக உரை அமைக்கிறார் பரிமேலழகர்.பண்ணும் பாடலும்வள்ளுவர் காலத்தில் பண்ணும் பாடலும் சிறந்து விளங்கியது என்பது.'பண்ணென்னாம் பாடற்கியை பின்றேல் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்'
என்ற குறள் தெளிவு பட வைக்கிறது. இக்குறளில் பாடல் தொழிலோடு பொருத்தமில்லாத பண்ணால் பயனில்லை என்பதை கண் ஒளி இல்லாத கண்ணுக்கு உவமையாக கூறுகிறார்.பொதுவாக நூல் செய்தோர் ஒரு வகையினர் என்றும் உரை எழுதுபவரை அவருக்கு அடுத்த நிலையில் வைப்பர். ஆனால், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் வள்ளுவரோடு ஒப்ப வைத்து சிறப்பிக்கப்படுகிறார்.
''பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ளநூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ -நூலாற்பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன் தெரிந்தவுரையாமோ தெளி''என்ற உரை சிறப்புப்பாயிரத்தில் நன்கு விளங்குகிறது.வாழ்வியல் நெறியைச் சொல்ல வந்ததிருக்குறளில் இசை பற்றிய செய்திகள்உவமையாக பல இடங்களில் எடுத்தாளப்பட்டுஉள்ளது.
--'கலைமாமணி' முனைவர் தி.சுரேஷ்சிவன் 94439 30540
sureshsivan70gmail.com

வாசகர்கள் பார்வை

கண்களை விற்று ஓவியம்
என் பார்வையில் வெளியான 'இல்லம் என்னும் இனிய பள்ளி' கட்டுரை படித்தேன். என் பள்ளி காலத்திற்கு அழைத்து சென்றது. எதை சாதிப்பதற்காக குழந்தைகளின் உணர்வுகளை மதிக்காமல் இயந்திரமாய் மாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை. கண்களை விற்று அழகான ஓவியங்களை வாங்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை இக்கட்டுரை மூலம் தெளிவாக உணர முடிகிறது பாராட்டுக்கள்.
- சே. மணிகண்டன், பெரியகுளம்.
அண்டார்டிகா பயணம்
என் பார்வையில் வெளியான 'இது ஓர் ஐஸ் உலகம்' கட்டுரை கண்டேன். அண்டார்டிகா கண்டத்தில் நிலவும் சூழ்நிலை, கால நிலைகள், உயிரினங்கள் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. கப்பல் போக முடியாத அளவிற்கு பனிப் பிரதேசமாக அண்டார்டிகா விளங்குவதையும், அடிக்கடி பனிப்பாறைகளை உடைத்தால் தான் கப்பல் செல்ல முடியும் என்ற வினோதத்தையும் அறிய முடிந்தது. அண்டார்டிகா கண்டத்தில் ஏன் மனிதர்கள் வாழ முடியவில்லை என்பதை விளக்கியது இந்த பயணக் கடடுரை.
- த.கிருபாகரன், நிலக்கோட்டை.
விசித்திரமான அண்டார்டிகா
வாசகர்களை அண்டார்டிகா கண்டத்திற்கு அழைத்து சென்றது என் பார்வையில் வெளியான 'இது ஓர் ஐஸ் உலகம்' கட்டுரை. பனிக்கட்டிகளை உடைத்து கொண்டு செல்லும் கப்பலில் பயணிக்கிறோம். நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டியில் அமர்ந்து பனிப்பாறைகளை ரசிக்கிறோம். உடல் குளிர்ந்ததும் துாங்கும் பையில் புகுந்து துாங்குகிறோம். ஆஹா விசித்திரமான, வித்தியாசமான பயணத்திற்கு வழி காட்டிய தினமலர் என்
பார்வைக்கும், கட்டுரையாளருக்கும் பாராட்டுக்கள்.
- என்.எஸ்.முத்து, ராஜபாளையம்.
பட்டுக்கோட்டை நினைவுகள்
என் பார்வையில் வெளியான 'பட்டுக்கோட்டையின் பாட்டுக்கோட்டை' கட்டுரை படித்தேன். 'உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது' என்ற வரிகளை புரிந்து கொண்டால் சமூகம் முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அற்புதமான கட்டுரை படிக்க படிக்க பட்டுக்கோட்டையாரின் நினைவுகள் அனைத்தும் கண் முன் வந்து போகிறது. வாழ்த்துக்கள்.
- மு.ராமபாண்டியன், மதுரை.
நொறுங்கத் தின்ற முன்னோர்கள்
நம் முன்னோர்கள் பற்பொடியையோ பற்பசையையோ பயன்படுத்தியிருக்க முடியாது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி எனும் பழமொழி நம் அனைவருக்கும் தெரியும். அதிகாலையில் எழுந்து வயல்வெளிக்கு சென்று ஆலங்குச்சி அல்லது வேப்பமர குச்சியை ஒடித்து நன்றாக கடித்து 'பிரஷ்' போலாக்கி பற்களை சுத்தம் செய்வார்கள், நம் முன்னோர்கள். ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு கம்மங்கூழ், சோளச்சோறு, வரகஞ்சோற்றை மோரில் கரைத்து குடித்து வேலையை துவங்குவர். அன்றைய வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தே பயணம் செய்ததாக இருந்தது. அதனால் தான் நுாறு வயதைத் தாண்டியும் நொறுங்கத் தின்று திடகாத்திரமாக வாழ்ந்தார்கள். உடல்நலம் காக்க உறுதியான பற்கள் அவசியம் என்பதை 'உங்கள் பற்கள் சுத்தமானதா' கட்டுரை உணர்த்தியது.
-அன்புச்செல்வன், வீரபாண்டி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement