Advertisement

தலைவர்களும், தொண்டர்களும், மக்களும்- எல்.வி.வாசுதேவன்,சமூக ஆர்வலர்

ராஜாக்கள் இந்த நாட்டை ஆண்டு வந்த காலத்தில், அரச சபைக்கு அவர் வரும்போது, 'ராஜாதி ராஜ வீரமார்த்தாண்டர் வருகிறார் பராக்... பராக்...' என்று அவர் வருகையை அறிவிப்பர்.இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, 'வீர' என்ற சொல்லை. 'ராஜா' என்றாலே அவர் வீரம் செறிந்திருப்பவர் என்று நம்பப்பட்டது; அது உண்மையும் கூட.

இதே ரீதியில் காளை மாட்டை அடக்குவது, பெரிய கல்லை ஒத்தையாக தோள் வரை துாக்குவது என்று தன் உடல் வலிமையை காட்டி சமுதாயத்தில் அங்கீகாரம் பெற வேண்டியிருந்தது. அவுரங்கசீப்பை எதிர்த்து போராடி வெற்றி பெற்று, முடிசூட்டிக் கொண்ட, 'வீர' சிவாஜியை யாராவது மறக்க முடியுமா? அவர் பெயரை வரலாற்றில் இருந்து நீக்க முடியுமா?பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஆண்டு வந்தபோது, பெரிய செல்வந்தரான கப்பலோட்டிய தமிழன் பிரிட்டீஷாருக்கு அடிபணியாது செக்கு இழுத்து உடல் வலியைத் தாங்கிக் கொண்ட வீரத்தை எப்படி வர்ணிப்பது?அவரைத்தானே, 'தலைவர்' என்று சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்தனர்.அந்த மாதிரி தலைவர்கள் இப்போது இருக்கின்றனரா?

சிறை வாழ்க்கையில் சில நாட்களாவது, தன் சுய துன்பங்கள், உடல் நோய்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, கஷ்டப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். காலம் தவறிய உணவு, நெடுந்துாரப் பயணம், சரியான துாக்கமின்மை ஆகியவற்றை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். அப்படிப்பட்ட தலைவர்களுக்கு இப்போது என்ன ஆயிற்று?

ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் பிழை செய்கின்றனரா இல்லையா என்பதைக் கண்டறிய விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளை பின்பற்றாதபோது, அவர்கள் வேலையில் சேரும்போது எடுத்த உறுதிமொழிக்கு எதிராக, விதிமுறைகளை புறந்தள்ளி விட்டு செயல்பட்டதாக கருதப்படுவர்.மக்களின் சேவகன் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றனவா?

சென்னையில் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.மனு தாக்கல் ஜூன் 3ம் தேதி என்பது முதல், ஓட்டு எண்ணிக்கை ஜூன் 30 என்பது வரையிலான கால அட்டவணையை தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டது.ஆனால், தேர்வுக்கு தயாராகும் மாணவனைப் போன்று ஒரு பதற்ற மோ, ஆர்வமோ மற்ற எந்தக் கட்சியி லும் இதுவரை காணப்படவில்லை.சில கட்சிகள், தாங்கள் போட்டி யிடவில்லை என்று அறிவித்து விட்டன; அதற்கான காரணங்களை யும் தெரிவித்து விட்டன.அரசாங்க விதிகளுக்கு, நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறிவிக்கப்பட்ட தேர்தலை கட்சிகள் புறக்கணிப்பது எந்த அளவிற்கு நியாயம் என்பது ஊன்றி கவனிக்கப்பட வேண்டிய கேள்வி.கட்சிகளின் செயல்பாடுகள் அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டதே. இவ்விதிகளை பின்பற்றாத கட்சிகளை தடை செய்ய அரசுக்கு கடமையும் இருக்கிறது; உரிமையும் இருக்கிறது.

சமீப காலமாக நடக்கும் நிகழ்வு கள், மக்களையும், கட்சித் தொண்டர்களையும் திருப்திப்படுத்தும் விதமாக அமையவில்லை.நம் நாட்டில் பார்லிமென்டும், சட்டசபையும், 'புனிதமான இடம்' என்று சொல்லத் தேவையில்லை. உரிய காலங்களில் அங்கு சென்று அமர்ந்து, மக்கள் நலனை, தேசத்தின் பாதுகாப்பை வலியுறுத்தி, தங்கள் கருத்தை சொல்ல வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கடமை. ஆளுங்கட்சி தவறு செய்கிறது என்று கருதினால், மற்ற கட்சிகள் அதைச் சுட்டிக் காட்ட சரியானஇடம் இது. சமீப காலமாக சில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டசபைக்கும், பார்லிமென்டுக்கும் செல்வதில்லை. சிலர் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்து விடுகின்றனர்! மக்கள் நலனைக் காப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்யாமல், அரசு கொடுக்கும் சலுகைகளை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்?

டிப்படையில் இந்தியா ஜனநாயக நாடு. இங்கு, உங்களுக்கு உங்கள் கருத்தை சொல்ல பூரண சுதந்திரம், சில வரைமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறது. தேர்தலில் ஒரு கட்சி, 'தில்லு முல்லு' செய்கிறது என்று தெரிந்தால், அதை மக்களிடம் சொல்லி அந்த நெறி தவறிய கட்சியை தேர்தலில் தோற்கடிப்பதற்கு மற்ற கட்சிகளுக்கு நிறைய வாய்ப்பு கள் உள்ளன.இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது தங்கள் பொறுப்பிலிருந்து, கடமையிலிருந்து அந்தக் கட்சிகள் தவறி விட்டதாகவே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு மாணவன் தேர்வு எழுத வேண்டுமென்றால், குறிப்பிட்ட நாட்களுக்கு வகுப்புகளுக்கு சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டான். தேர்வு எழுதவில்லையென்றால், அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் அவன் எதிர்காலமே பாழாகிவிடும்.ஆனால், அரசியலில் இதெல்லாம் செல்லுபடியாகாததைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேள்வி கேட்க வும் நமக்கு சரியான அமைப்பு இல்லை. சரியான அமைப்பு இருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதல்லவா? அதாவது பதவியை தக்க வைத்துக் கொள்வது; ஆனால், அப்படி கொள்வதற்கான கடமைகளை செய்யாமல் இருப்பது. இது ஒரு அனுமதிக்க
முடியாத முரண்பாடு தானே?'மக்கள் நலனுக்காகவே நாங்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறோம், கட்சி நடத்துகிறோம்' என்று சொல்வோர், அந்த நலனுக்கு ஒரு கட்சி ஊறுவிளைவிக்கப் போகிறது என்று தெரிந்தால், அந்தக் கட்சியை தேர்தலில் வீரத்துடன் சந்திப்பது தானே அழகு. ஜனநாயக நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படுவது அதற்காகத் தானே!

இது ஒருபுறமிருக்க, இப்படி தேர்தலில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தால் அந்தக் கட்சியில் தொண்டர்கள் நிலை என்னாகும்?
இதையெல்லாம் இந்தக் கட்சியினர் யோசிக்காமல் இருப்பரா? இல்லவே இல்லை. நிச்சயம் யோசித்திருப்பர். பின் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்.
முதல் காரணம், மக்கள் எதையும் சுலபத்தில் மறந்து விடுவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
இரண்டாவது காரணம், இப்பொழுது ஏறக்குறைய எல்லா கட்சிகளும் பண பலத்திலும், மக்களுடனான உறவிலும் ஒரு பாதுகாப்பான இடத்தை எட்டி விட்டன. 'நமக்கு எல்லாம் தெரியும்' என்று நினைக்கின்றன. அதனால் தாங்கள் செய்வது சரி என்று நம்புகின்றன. அப்படியே மக்கள் ஒதுக்கினாலும், சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் எழுந்து நிற்க அவர்கள் கையில் இருக்கும் ஆஸ்தியும், விசுவாசமான(!) தொண்டர்களும், பல அப்பாவி மக்களும் உதவி செய்வர் என்று நம்புகின்றன.இதுவே இன்றைய தலைவர்கள், தொண்டர்கள், மக்களுடைய நிலைமை.
இ-மெயில்: lvvasudevgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement