Advertisement

உங்கள் பற்கள் சுத்தமானதா

ஒருவரின் முகஅழகு, சிரிப்பில் இருக்கிறது. அதிலும் பற்கள் தெரிய சிரிக்கும்போது அதன் அழகே தனிதான். அதுவே அரைகுறையான பற்கள் இருந்து, சிரித்தால் அதுவே 'காமெடியாகி' விடும். உடலை பாதுகாப்பதுபோல் பற்களை நம்மில் பலர் காப்பதில்லை. அதுகுறித்த விழிப்புணர்வும் அவர்களிடமும் இல்லை.குழந்தைகளுக்கு பல் முளைப்பதில் இருந்து, பெரியவர்கள் வரை உடலை எப்படி கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார்களோ, அதுபோல் பற்களின் பாதுகாப்பும் முக்கியம். உடல் சூட்டை தணிக்க எலுமிச்சை, அன்னாசி, ஆரஞ்சு போன்ற பழச்சாறுகள், குளிர்பானங்களை பருகுவோம். பின், தண்ணீர் குடிக்க வேண்டும். பலர் அப்படி செய்வதில்லை.ஏனெனில் இந்த பழச்சாறுகள் சற்றே அமிலத்தன்மை உண்டு. இவை பற்களின் மேல் அதிக நேரம் இருந்தால் எனாமலை அரிக்கக்கூடும். அது சொத்தைக்கு வழிவகுக்கும். தண்ணீர் குடித்து விட்டால் இந்த திரவங்கள் பற்களின் மேல் அதிக நேரம் படாமல் இருக்கும். பற்களும் பாதுகாப்பாக இருக்கும்.
சாப்பிட சிரமம் :பெரும்பாலானோருக்கு உள்ள பிரச்னை வாய் உலர்ந்து போகுதல் மற்றும் வாய் எரிச்சல். வாய் உலர்ந்து போய் நாக்கு ஒட்டிக் கொள்வதுபோல் இருக்கும். உதடுகள் உலர்ந்து போய் வெள்ளையாக தெரியும். இந்த நிலைக்கு சீரோஸ்டோமியா (Xerostomia) என்று பெயர். உமிழ்நீர் சுரப்பது குறையும்போது இதன் அறிகுறிகள் தென்படும். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உணவு உண்பதற்கும், விழுங்குவதற்கும் கடினமாகிவிடும். இந்நிலை அடிக்கடி இருந்தால் பற்களில் சொத்தை ஏற்படும். ஏனெனில் வாயில் ஈரப்பதம் இல்லாத போது நாம் உண்ணும் உணவு பற்களில் எளிதாக ஒட்டிக் கொள்ளும்.
பற்களுக்கும் முதலுதவி உண்டு :குழந்தைகள் விளையாடும் போது பற்கள் அடிபடுவது தவிர்க்க முடியாத ஒன்று. பற்கள் உடைவது அல்லது பற்கள் முழுவதுமாக வெளியே வருவதும்தான் பொதுவாக அடிபடும் போது நடக்கும். பல் முழுவதுமாக வெளியே வருவதற்கு அவல்ஷன்(avulsion) என்று பெயர். இந்த பல்லை மிக கவனமாகக் கையாள வேண்டும்.முதலில் அந்த பல்லை எச்சில் அல்லது குழாய் நீரில் கழுவ வேண்டும். அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. பின்னர் பல் வெளியே வந்த இடத்திற்குள் வைத்து உள்ளே தள்ளி பற்களை கடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே வைக்க முடியவில்லையென்றால் பல்லை நாக்கின் அடியிலோ கன்னத்தை ஒட்டியோ வைத்து விட வேண்டும். 30 -- 60 நிமிடத்திற்குள் பல் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டும். ஒரு வேளை விழுந்தவர் நினைவிழந்து இருந்தால், பல்லை சிறிதளவு பாலில் அல்லது உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்து செல்ல வேண்டும். 30 - - 60 நிமிடத்திற்குள் பல்லை மீண்டும் பொருத்தினால் எலும்புடன் சேர வாய்ப்பு அதிகம். பின்னாளில் அப்பல்லுக்கு ஏற்ற சிகிச்சை செய்து பாதுகாத்து விடலாம்.
பல் சீரமைப்பு எளிது :சிகிச்சை முறைகளை பொருத்தவரை, பற்களுக்கு கம்பி போடும் சிகிச்சை விடுமுறை காலத்திற்கேற்றது. ஏனென்றால் கம்பி போடும் சிகிச்சை தொடங்கியதும் அதற்கேற்றவாறு சாப்பிட பழக வேண்டும். அதே போல் கம்பி போடும் சிகிச்சை மேற்கொள்ளும்போது பற்களை தேய்ப்பதும் சுத்தம் செய்வதும் சற்று வேறுபடும். பல் சீரமைப்பிற்காக பற்களில் கம்பி போடுவது வழக்கமான சிகிச்சை முறைகளுள் ஒன்று. ஆனால் கம்பி போட்டிருப்பவர்கள் பற்களை அதிக அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும்.
23 முறை பல் துலக்க வேண்டும் :இவர்கள் பல் துலக்கும் முறை முதல் உணவுப்பழக்கம் வரை மாற்றிக்கொள்ள வேண்டும். கம்பி போட்டுள்ளவர்களுக்கென பிரத்தியேக பிரஷ்கள் உள்ளன. பல் இடுக்குகளிலும் கம்பியின் இடையிலும் சுத்தம் செய்ய அவை உதவும். சாப்பிட்டவுடன் தண்ணீரால் வாயை நன்றாக கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு 2-3 முறை பல் துலக்க வேண்டும். ப்ளுரைடு கலந்த 'மவுத் வாஷ்' என்னும் திரவத்தால் தினமும் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.கடினமான அல்லது பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உள்ள சாக்லேட் போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்துவதை நிறுத்த வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் 2-3 வாரங்களுக்குள் பழகி விடும். இதனை விடுமுறை காலத்தில் செய்தால் பழகுவதற்கு எளிதாக இருக்கும். மாதம் ஒரு முறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடலின் சந்தோஷம் :குழந்தைகள் சாக்லேட்கள், நொறுக்கு தீனி வகைகள், குளிர் பானங்கள் பருகுவர். இதனை சாப்பிட்ட பின்னர் சரியாக சுத்தம் செய்ய பழக்கப்படுத்த வேண்டும். பல் தேய்க்கும் முறையை சரியாக சொல்லிக் கொடுத்து இரண்டு முறை பல் தேக்க வைக்க வேண்டும். பொதுவாக அனைவருமே உடலுக்கு குளிர்ச்சியான அதே சமயம் ஆரோக்கியமான காய் கனிகளை உண்டால் வாழ்நாள் முழுவதும் சிரிக்கலாம். - டாக்டர் ஜெ . கண்ணபெருமான் மதுரை 94441 54551.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement