Advertisement

இது ஓர் ஐஸ் உலகம்!

எத்தனை போட்டி அம்மா இவ்வுலகில்? சற்று நிம்மதியாக இருப்பதற்கு இடம் உண்டா? ஒரு பக்கம் கார்; மறுபக்கம் பஸ். இடையில் இருசக்கர வாகனம், அது மட்டுமா எதிரில் மூன்று சக்கர வாகனம். சற்று திரும்பினால் ஷேர் ஆட்டோ. எல்லாம் கடந்து ஒருவன் வீடு வருவது என்பது என்ன கஷ்டம் தெரியுமா? அதற்கும் மேலாக தேவையான அளவு சுத்தமான காற்றும் கிடைப்பதில்லை. இது தான் நம் உலகம். ஆனால் அங்கு மனிதர்கள் மிகவும் குறைவு, மாசு கிடையாது. இவ்வளவு மவுசும் கிடையாது, பனி உண்டு, குளிர் உண்டு, வெயிலும் உண்டு. எங்கே ஒரு வீடு வாங்கலாம் எனத் தானே பார்க்கிறீர்கள். எல்லாம் இருப்பது அண்டார்டிகாவில் தான். வாங்க நேரில் முடியாவிட்டாலும் பரவாயில்லை இக்கட்டுரை வழியாக பார்போம்.அண்டார்டிகா பனியினாலான உலகம்.
எங்கும் ஐஸ் கட்டிகள். கப்பல் கூட போக முடியாத அளவிற்கு பனிப்பிரதேசம். பல நேரங்களில் பனிபாறைகளை உடைத்துதான் கப்பல் போக முடியும். வருடத்தின் ஐந்து மாதங்கள் மட்டும் வெயில். மழை எப்போதாவது பெய்யும். உலகத்தில் உள்ள தண்ணீரில் 70 சதவீதம் அண்டார்டிகாவின் ஐஸ் கட்டியாகத்தான் உள்ளது. சில இடங்களில் 4 கி. மீ ஆழத்திற்கு ஐஸ் கட்டியாகவே இருக்கும். இங்கு எந்த நாடும் கிடையாது; நிரந்தரமாக குடியிருக்கும் மக்களும் கிடையாது. ஆராய்ச்சி செய்வதற்கு மட்டும் குளிர் காலத்தில் சிலர் வந்து போவர்கள். சில இடங்களில் 50 வருடங்களுக்கு முன்பு வந்து பனிபுயலில் சிக்கிஇறந்த ஆராய்ச்சியாளர்களின் உடல்கள் கிடக்கும். சிறிதும் அழுகாது அப்படியே இருக்கிறது.
பயங்கர பயணம் :அண்டார்டிகா பயணம் நாம் நினைப்பது போன்று எளிதானது இல்லை. ராக்கெட்டில் சந்திரனுக்கு கூட போய் விட்டு வந்து விடலாம் ஆனால் இது மிகவும் பயங்கரமானது. இங்கு குளிர் காலம் என்பது மிகவும் நீண்டது. செப்டம்பர், அக்டோபரில் மட்டும் தான் சூரியன் நன்றாக வரும். அதுவும் 24 மணி நேர பகல் மற்றும் இரவும் உண்டு.குளிர் காலத்தில் கடல் முழுவதும் உறைந்து உடைக்கமுடியாத பனியாக தான் இருக்கும். தவறான நேரத்தில் சென்றால் கப்பல், ஐஸ் கடலில் மாட்டிக்கொள்ளும். மனிதர்களை போல் பென்குயின் திரியும். திமிங்கலம், சீல்ஸ் நிறைய உண்டு. விளைநிலங்கள் எதுவும் கிடையாது. எல்லா உணவிற்கும் கடலை நம்பித்தான் இருக்க வேண்டும்.நாம் அண்டார்டிகாவில் 19 ம் நுாற்றாண்டில்தான் கால் பதித்தோம். அதற்கு முன்புவரை பூமியின் தெற்கு பகுதியில் நிலப்பரப்பு இருக்கலாம் என மட்டும் தெரியும். அதுவும் பறவைகளின் வருகையை வைத்துதான். 1895 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் வான் துள்செல்மான் தான் முதலில் அண்டார்டிகாவில் கால் பதித்தார்.
ஆய்வு செய்யும் இடம் :இது யாருக்குமே சொந்தம் இல்லாத ஒரு கண்டம். அணு ஆயுத சோதனை எதுவும் இங்கு செய்ய முடியாது. யாருடைய ராணுவத்திற்கும் இடம் இல்லை. அதே நேரத்தில் அறிவியல் சோதனைகளுக்கு இங்கு எல்லாருக்கும் இடம் உண்டு. இதுதான் உடன்படிக்கை. இந்தியாவும் தன் ஆய்வை செய்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் தங்குவதற்கு கூடாரங்களை அமைத்துகொள்வார்கள். அந்தகாலத்தில் எல்லாம் 'துாங்கும் பை ' பயன்படுத்தினார்கள். இது கம்பளி மற்றும் கடுங்குளிர் தாங்கும் சமாச்சாரங்களுடன் இருக்கும். இதில் மேல் பகுதில் இருக்கும் ஜிப்பை திறந்து உள்ளே போயி படுத்துக்கொண்டு ஜிப்பை மூடிவிடலாம். நல்லா கதகத என்று இருக்கும். 'ஸ்லெட்ஜ்' எனும் வாகனத்தை பயன்படுத்தி பனியில் பயணம் செய்தார்கள். இந்த வண்டிகளை குளிரை நன்கு தாங்கும் நாய்கள் இழுத்து செல்லும்.
அண்டார்டிகாவிற்கு பயணம் செய்பவர்கள் வெறும் ஆராய்ச்சியாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; சாகசக்காரர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் மிகவும் சவாலானது. குளிர் அதிகமானால் பற்களில் இருந்து ரத்தம் வரும். உடலில் வைட்டமின் குறைபாடு வரும், எல்லாம் தாண்டிதான் ஆராய்ச்சியும் பயணமும் தொடரப்பட வேண்டும்.1961ல் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு பிறகுதான் உலகநாடுகளின் பார்வை அண்டார்டிகா நோக்கி முழுவதும் திரும்பியது. மனிதன் இங்கும் தன்னுடைய விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டான். இதனால் பாதிப்பானது சீல் இனம் தான். அதன் ரோமத்திற்காக வேட்டை ஆரம்பித்து மிகவும் அதிகமாகி அந்த இனமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது தான் எல்லா நாடுகளும் விழித்து சீல் வேட்டைக்கான விதிமுறைகளை வகுத்தன. அதனால் தான் இன்றும் சீல்கள் அங்கு உள்ளன.
பயண அனுபவங்கள் :ஸ்காட், அமுத்சென் என்பவர்களின் அண்டார்டிகா பயண அனுபவங்கள் மிகவும் திகில் நிறைந்தது. இவை ஆராய்ச்சி மட்டுமல்ல; சாகசங்களும் நிறைந்தது. இவர்கள் அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வு வரலாற்று சிறப்புமிக்கது. ஒருவர் தென் துருவத்தை அடைந்து வெற்றிகரமாக திரும்பி வந்தார். மற்றவர் தென் துருவத்தை அடைந்து வரும் வழியில் இறந்து போனார்.இவர்களின் பயணம் பற்றி படிக்கும் போதுதான் ஒரு திட்டத்தை எப்படி எல்லாம் கையாள வேண்டும் என நாம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இவர்களது பயணம் உலகுக்கு நிறைய விஷயங்களை எடுத்ரைத்துள்ளது. ஆராய்ச்சி பயணமும், சாகச பயணமும் வேறு. ஆனால் அண்டார்டிகாவிற்கு செல்பவர்கள் இரண்டையும் சேர்த்து செய்யவேண்டும். இவர்களின் பயணம் ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல பாடமும்கூட.அண்டார்டிகாவில் செடி, கொடி, மரம் கிடையாது. கடல்வாழ் தாவரம் 'பிளாஸ்டன்' மட்டும் உள்ளது. இது ஒரு வகை கடற்பாசி. இதை உண்டு வாழும் நம் இறால் மாதிரி ஒரு உயிரினம் உண்டு.
அதன் பெயர் 'கிரில்'என்று சொல்வார்கள். இதைதவிர சீல்கள், பென்குயின், திமிங்கலங்கள் மற்றும் சில வகை மீன்களும் உண்டு.குளிர் பறவைகளும் உண்டு. இவை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு வாழும் சக்தி கொண்டது. 'அல்பெட்ராஸ்' என்ற பெரிய பறக்க கூடிய பறவை கூட்டமாக வாழும் இயல்புடையது. பெரும்பாலும் மீன்கள் தான் இவற்றின் உணவு.உணவிற்கு பஞ்சம் இல்லாததும், மனித நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளதாலும் திமிங்கலங்கள் நிறைய வாழ்கின்றன. குளிர் அதிகமான நேரங்களில் இவை இடம் பெயர்ந்து செல்கின்றன.நாம் எல்லோரும் அண்டார்டிகாவில் சுற்றுலா செல்லும் நேரம் வரும். காத்திருப்போம் அதுவரை! -எஸ்.ராஜசேகர், இயக்குனர், ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை. 90958 99955

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement