Advertisement

கவிராஜாவும்..! காவியராஜாவும்..!

இந்தியா உலகிற்கே வழிகாட்டி. ஆனால் இந்தியாவின் பெருமையை, உன்னதத்தை உலகிற்கு உணர்த்தியவர் 'காவித்துறவி' விவேகானந்தர். அதுபோல் தமிழின், தமிழ்நாட்டின் பெருமையை இந்தியா முழுக்க பரப்பிய 'தேசியக்கவி' என்ற பட்டம் பெற்றவர் மகாகவி பாரதியார் என்றால் அது மிகையாகாது.
அத்தி பூத்தாற்போல் வரலாற்றில் சில சம்பவங்கள் இணைந்து நடப்பதுண்டு, காந்தி பிறந்த (அக்டோபர் 2) நாளே, காமராஜரின் நினைவு நாளாக இருப்பது போல், இந்த இருவரின் வாழ்நாளில் நடந்த ஒற்றுமையான நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தோமேயானால் அவை அதிசயம் கலந்த ஆச்சர்யமாக இருக்கும்.
விவேகானந்தர் இம்மண்ணில் இருந்த ஆண்டுகள் 39. பாரதியார் வாழ்ந்த ஆண்டுகளும் 39. விவேகானந்தர் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து பாரதியார் பிறக்கின்றார். விவேகானந்தர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து பாரதியார் மறைகின்றார். விவேகானந்தரின் காலம் (12.01.1863--04.07.1902). பாரதியாரின் காலம் (11.12.1882-11.09.1921). காவிராஜின் பெற்றோர் விசுவநாத தத்தர், புவனேஸ்வரி. கவிராஜனின் பெற்றோர் சின்னசாமி அய்யர், லட்சுமி. நரேந்திரன் என்ற பெயரை மாற்றி விவேகானந்தர் என்று பெயர் சூட்டியவர் கேத்ரி மகராஜா. அதுபோல் சுப்பையா என்ற பெயரை மாற்றி பாரதியார் என்று பெயர் சூட்டியவர் எட்டயபுரம் மன்னர். இருவருமே புனை பெயரால் தான் புகழ் பெற்றவர்கள்.
சிந்தனையில் ஒற்றுமை :இந்த இருவருமே இந்தியாவை வணங்கியவர்கள். ''உலகத்தை ஒரு வீடாக கட்டினால், இந்தியாவை அங்கு பூஜையறையாகத்தான் வைக்க வேண்டும்,'' என்றார் விவேகானந்தர்.''பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம். நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்,'' என்றார் பாரதி.
இருவரும் இறப்பை கண்டு கிஞ்சிற்றும் அஞ்சாதவர்கள். ''இறப்பை கண்டு நீங்கள் அஞ்சாதீர்கள். நீங்கள் இருக்கும் வரை இறப்பு உங்களிடம் வராது. அது வந்து விட்டால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். எனவே பயம் வேண்டாம்,'' என்றார் விவேகானந்தர்.
''காலா, வாடா உன்னைக்கால்கொண்டு மிதிக்கிறேன் வாடாஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,'' என காலனையே அச்சப்படுத்தி அச்சுறுத்தியவர் பாரதியார்.''பயமே மரணம், தைரியமே வாழ்வு,'' என்ற விவேகானந்தரின் கருத்தை பாரதியார் பல இடங்களில் பதிவு செய்கிறார்.
வறுமையிலும் ஒற்றுமை :1893ம் ஆண்டு செப்.,11ல் சிகாகோவில் நடந்த சமய மாநாட்டிற்காக விவேகானந்தர் சென்றார். அதில் கலந்து கொள்வதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. பணத்தை திரட்டி, கப்பலில் சென்று, தங்குவதற்கு இடமில்லாமல் சிரமப்பட்டு சென்று இந்து மதத்தின் பெருமையை தனது பேச்சாற்றல் மூலம் நிலை நாட்டினார்.
அதுபோல் பாரதியாரும் நிலையான வருமானமின்றி ராஜபாளையம், மதுரை, காசி போன்ற இடங்களுக்கு அலைந்து திரிந்து உண்ண உணவு கூட இன்றி வறுமையின் பிடியில் சிக்கினார்.காசியில் ஒருமுறை குரங்குகள் விவேகானந்தரை துரத்தின. பயந்து ஓடினார் விவேகானந்தர். சிறிது துாரம் ஓடியவுடன் ''நாம் ஏன் ஓட வேண்டும்,'' என்று எண்ணி எதிர்த்து தைரியமாக நின்றார். துரத்திய குரங்குகள் பயந்து ஓடி விட்டன.
அதுபோல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து சாலையில் ஓடிவந்தது. மக்கள் சிதறி ஓடினர். ''நாம் ஏன் ஓட வேண்டும். நாம் தான் கவிராஜனே,'' என்ற எண்ணத்தில் அஞ்சாமல் நின்றார் பாரதியார். பாவம் பாரதியார். விதி விளையாடியது.பாரதியார் எதைக் கண்டும் அஞ்சியதில்லை. ஒருமுறை அவர் மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தை பார்த்து ''ஏய் காட்டுராஜனே..! நான் கவிராஜன் வந்திருக்கிறேன். எழுந்திரு..!,'' என்று சொன்னதாக கூட செய்திகள் உண்டு.
பாரதியார் விடுதலை வாங்குவதற்கு முன்னரே ''ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று,'' என்று ஆடிப்பாடி கூத்தாடினார்.இருவரின் சிந்தனைகளும் நாட்டுக்கு ஏதோ நல்லது நடக்கவுள்ளது என்பதை பிரதிபலிப்பதாகவே உள்ளன. விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தான், பாரதியாரின் குருவாக விளங்கினார்.
குரு பக்தி :இருவரினுடைய இறை பக்தியையும், குரு பக்தியையும் அளவிட முடியாது. ஒருவர் உயர்ந்த இடத்திலிருந்து ஆன்மிகத்தை உலகம் முழுவதும் பரப்பினார். மற்றொருவர் அரச சபையில் இருந்து பாடலை, பாமரருக்கும் புரியும்படி பாடினார். இவர்களுடைய சிந்தனைகள் பொதுமக்களைப் பற்றியும் நாட்டைப்பற்றியுமாகவே இருந்திருக்கிறது. அவர்களை முன்னேற்றும் விதமாக இருந்திருக்கிறது.
விவேகானந்தரும், பாரதியாரும் பெண்களை கடவுளாகவே, தாயாகவே பார்த்து மிகழ்ந்திருக்கின்றனர். பெண்ணடிமை என்பதே அங்கு கிடையாது. பெண் விடுதலை தான் உண்டு.இருவருக்குமே பல மொழிகள் தெரியும். இருவருமே உடலினை உறுதி செய்யச் சொன்னார்கள். இதற்கெல்லாம் மேலாக இருவரும் பத்திரிகை துறையிலும் பணியாற்றியவர்கள்.
இவர்களுடைய வரலாறை நுணுகி நுணுகி ஆராய்ந்தோமேயானால் பல விஷயங்கள் ஒத்துப்போகும். விவேகானந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷன் இன்று தழைத்து அகிலமெல்லாம் நற்பணியாற்றி கொண்டு வருகிறது. அதுபோல் பாரதியாரின் வழித்தோன்றல்களாக பல கவிஞர்கள் உருவாகி தமிழ் தாய்க்கு மகுடம் சூட்டிக்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இருக்கும்போது இவர்களை யாரும் கொண்டாடவில்லை. இல்லாதபோது கொண்டாடி வருகிறோம். இவர்கள் விதைகளை போட்டு சென்றிருக்கிறார்கள். அதை மரமாக்க வேண்டிய பொறுப்பு நம்மை சார்ந்தது. விவேகானந்தர், பாரதியார் போன்றவர்களெல்லாம் உதாரண புருஷர்கள். உண்மையான நாயகர்கள். ஆனால் திரையில் தோன்றி வசனம் பேசுபவர்களை தான் நல்ல நாயகர்கள் என்று இளைஞர்களும், ஏன் இந்தியாவே நம்பி கொண்டிருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
வன்முறையை நாடுவோர், நம்பிக்கையற்றோர், வாழ்க்கையில் பயப்படுவோர் மற்றும் பிரச்னைகளுக்குரிய நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஒருமுறையாவது விவேகானந்தர், பாரதியாரைப் படிக்க வேண்டும். படித்தால் அவர்களின் வாழ்வே மாற்றமடையும்.கவிராஜாவிற்கும், காவிராஜாவிற்கும் இடையே ஒரு துணையெழுத்து தான் வித்தியாசம். இவர்கள் இருந்த இடத்தில் இந்தியாவில், நாமும் இருக்கிறோம் என்பதை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.
-கடமலை சீனிவாசன்,தலைவர், திருவள்ளுவர் வாசகர் வட்டம்,கடமலைக்குண்டு.94424 34413

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement