Advertisement

பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'

தமிழ்த் திரை உலகில் அழுத்தமான -ஆழமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும், இந்த குறுகத் தரித்த வாழ்வில் திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்த 'பாட்டுக்கோட்டை' அவர். பட்டப் படிப்புக் கூடப் பயிலாத அவர், வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்துள்ளார். பஞ்ச சீலக் கொள்கைகள் பட்டுக்கோட்டையார் திரைப்படப் பாடல்களில் பெரிதும் வலியுறுத்திப் எழுதியிருக்கும் கொள்கைகள் ஐந்து. அவை:1. அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்2. உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும்3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு4. தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்திடல் வேண்டும்5. நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திடல் வேண்டும்பட்டுக்கோட்டையார் திரைப்பாடல்களில் அறிவுக்கு முதன்மையான ஓர் இடத்தினைத் தந்துள்ளார். 'பாதை தெரியுது பார்' என்ற படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் அவர்,“ அறிவுக் கதவைச் சரியாகத் திறந்தால்பிறவிக் குருடனும் கண்பெறுவான்”எனக் கூறியுள்ளார்;. அவரைப் பொறுத்த வரையில் 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதான் உண்மையான வளர்ச்சி!' பாப்பாவுக்குப் பாடினாலும் சரி, சின்னப் பயலுக்குப் பாடினாலும் சரி, பட்டுக்கோட்டையார் அறிவின் இன்றியமையாமையை வலியுறுத்தத் தவறுவதே இல்லை. இளைய தலைமுறையினர் துன்பத்தை வெல்லும் கல்வி கற்று, சோம்பலைக் கொல்லும் திறன் பெற்று,“அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்தொட்டிட வேணும்!”என வழிகாட்டுகிறார். உழைப்பின் அவசியம் பட்டுக்கோட்டை திரையுலகில் உழைப்பின் பெருமையை, - உயர்வை- ஓயாமல் பேசியவர். அவரது கருத்தில் மக்கள் முன்னேறக் காரணம் இரண்டு. ஒன்று, படிப்பு; இன்னொன்று, உழைப்பு. படிப்பாலே உண்மை தெரியும், உலகம் தெரியும். உழைப்பாலே உடலும் வளரும், தொழிலும் வளரும். உலகில் பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள் பலப்பல உண்டு; தொழிலாளர்களாகப் பிறந்து கடுமையாக உழைத்துச் சிகரத்தில் ஏறிய தலைவர்கள், மேதைகள் மிகப் பலர் உண்டு. எனவே,“உழைத்தால்தான் பற்றாக்குறையைஒழிக்க முடியும் - மக்கள்ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமைமோசமாக முடியும்”என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டாகெடுக்கிற நோக்கம் வளராது - மனம்கீழும் மேலும் புரளாது!” என்றார்.ஒருவர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளுவதால் எந்தப் பயனும் ஏற்படாது; விதியை எண்ணி விழுந்து கிடப்பதாலும் எந்த நன்மையும் விளையாது. வாழ்க்கையில் ஏற்றம் காண்பதற்கு - முன்னேற்றம் அடைவதற்கு - பட்டுக்கோட்டையார் காட்டும் வழி:“எறும்பு போல வரிசையாகஎதிலும் சேர்ந்து உழைக்கணும்…உடும்பு போல உறுதி வேணும்ஓணான் நிலைமை திருந்தணும்ஒடஞ்சி போன நமது இனம்ஒண்ணா வந்து பொருந்தணும்.”'வேலை செய்தால் உயர்வோம்' என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபட்டால், இந்த உலகம் உறுதியாக, இன்பம் விளையும் தோட்டமாக மாறும்.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் கல்வெட்டாய்ப் பொறித்து வைத்துக்கொள்ள வேண்டிய, என்றென்றும் பின்பற்ற வேண்டிய - பட்டுக்கோட்டையாரின் அற்புதமான வரிகள் இதோ:“ செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்திறமைதான் நமது செல்வம்;கையும் காலும்தான் உதவி - கொண்டகடமை தான் நமக்குப் பதவி!” ஒற்றுமையின் அவசியத்திற்கு அவர் பாடியது... நல்லவர்கள் இணைந்திடல் “ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,ஒழுங்காக் குருத்துவிட்டுகெளை கெளையா வெடிச்சிருக்கு,ஒட்டாம ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா? - எதிலும்ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”“ உச்சி மலையிலே ஊறும் அருவிகள்ஒரே வழியில் கலக்குது;ஒற்றுமையில்லா மனித குலம்உயர்வும் தாழ்வும் வளர்க்குது.”பட்டுக்கோட்டையாரின் பாடல்களை ஊன்றி நோக்கினால் அவர் இன்றைய சமுதாயத்திற்கு வழங்கி இருக்கும் இன்றியமையாத செய்தி ஒன்று புலனாகும். “நல்லோரை எல்லாரும் கொண்டாட வேண்டும்” என்பதுதான் அது. “நாளை உலகம் நல்லோரின் கையில், நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்” என்று ஆழமாக நம்பினார் அவர். அதே நேரத்தில் அவர், நல்லவர்களை நோக்கியும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
நல்லவர்கள் உலகத்தோடு ஒட்டாமல் ஒதுங்கி நிற்பதால் தம் வாழ்வில் உயர முடியாது; அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் விளையாது. மாறாக, அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கினால் - வல்லவர்களாக மாறினால் - வகையாக இந்த நாட்டில் மாற்றங்கள் உண்டாகும்; வாழ்வில் ஏற்றங்கள் உருவாகும். 'நாடோடி மன்னன்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் பட்டுக்கோட்டையார் இக்கருத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்:
காதலி : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால், மீதிஉள்ளவரின் நிலை என்ன மச்சான்?காதலன் : நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்நாழிக்கு நாழி தெளிவாராடி!”தாய்ப் பால் போல் சீக்கிரம் ஜீரணிக்கத் தகுந்த எத்தனையோ அருமையான கற்பனைகளையும், அற்புதமான சிந்தனைகளையும் ஊட்டச் சத்து மிகுந்த தம் திரைப்பாடல்களின் வாயிலாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாரி வாரி வழங்கியவர் பட்டுக்கோட்டையார். ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல், “இத்தகைய மனிதர்களுக்கு 'மறைவு' தான் உண்டே ஒழிய 'இறப்பு' இல்லை. மரணம் இத்தகையோரை வென்று விடுவதில்லை. அவர்களது ஆளுமைக்கு உயிர்ப்புள்ள ஓர் ஆயுள் உண்டு”.-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், பேச்சாளர்94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement