Advertisement

ரயில் பயணங்கள் முடிவதில்லை:ஜூன் 9 வரை பயணிகள் வசதி மேம்பாடு வாரம்

ரயில் பயணத்தை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. குடும்பத்தினர், குழந்தைகளுடன் செல்ல ரயில்கள் வசதியாக இருப்பதால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினமும் இரண்டரை கோடி பேர் ரயில்களில் பயணிக்கின்றனர்.
இதற்காக ஆயிரக்கணக்கான ரயில்களை நிர்வாகம் இயக்குகிறது. ஆனால் பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்களை இயக்க முடியவில்லை. அதற்கு பல காரணங்கள். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஒருவழி ரயில் பாதை இன்னும் உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பாதை பணிகள் முழுமை பெறவில்லை. ரயில்வே துறை முன்னேற்றமடைய இருவழிப்பாதை அமைவது அவசியம்.

நவீன தொலைத்தொடர்பு முறை தென்னிந்தியாவை விட வடமாநிலங்களில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல் அடிக்கடி நடக்கிறது. இதற்கு சிக்னல் மற்றும் மனித தவறுகள் காரணமாகி விடுகின்றன. தற்போதுள்ள ரயில்வே சிக்னல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம். அதி நவீன சிக்னல் சிஸ்டம் முறையை நாட்டில் ஒரே மாதிரி அமல்படுத்திட வேண்டும். இதனால் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும்.அதிக திறன் கொண்ட இன்ஜின்களை ெவளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதிக வேக ரயில்களை இயக்க தண்டவாளங்கள் முக்கியம். அனைத்து பாதைகளையும் அகல பாதைகளாக மாற்ற வேண்டும்.

தற்போது மீட்டர் கேஜ், பிராட்கேஜ், நேரோகேஜ் என மூன்று பிரிவுகள் உள்ளன. கோல்கட்டா-சிம்லா உட்பட பல பாதைகள் நேரோகேஜ் ஆக உள்ளன. நியூசெல்பைகுரியிலிருந்து டார்ஜிலிங், நாக்பூர்-ஹோண்டா நேரோகேஜ் பாதைகள் உள்ளன. மீட்டர் கேஜ் பாதைகள் ராஜஸ்தான், உத்தரகண்ட், பீகார், தமிழகத்தில் உள்ளன. தற்போது மீட்டர்கேஜ், பிராட்கேஜ் ஆகிய இரு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பெட்டிகளையும் பிராட்கேஜ் வழித்தடத்திற்கு ஏற்ப, அதிக வேகத்தில் செல்லுமளவுக்கு தரமாக தயாரிக்க ரயில் பெட்டி தொழிற்சாலைகள் முன்வர வேண்டும்.

இந்தியாவில் 64,460 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதைகள் உள்ளன. இதில் 31,846 லெவல் கிராசிங்குகள் உள்ளன. ஆளில்லாதவை 13,530. ஆளில்லாத கேட்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். அதற்கு மாற்று திட்டம் கொண்டு வர வேண்டும். ஐம்பது ஆண்டுகளில் இதில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்பது வருந்ததக்கது.

ஸ்மார்ட் ஸ்டேஷன்கள் :நாட்டில் 8000 ஸ்டேஷன்கள் உள்ளன. ஏ, பி, சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து ஸ்டேஷன்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். பெரிய ஸ்டேஷன்களுக்கு அருகில் ஸ்மார்ட் ஸ்டேஷன் அமைக்கப்போவதாக ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லி, ஹவுரா, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, மதுரை போன்ற ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் அதிகம். எனவே அருகிலுள்ள ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்களில் நடக்கும் வழிப்பறி கொள்ளைகளை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு ஏற்ப அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ப ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மோடியின் கனவு :சமீபகாலமாக ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்து பயணிகளிடம் அதிருப்தி நிலவுகிறது. பெட்டிகளில் எலி, கரப்பான் தொந்தரவும் உள்ளது. நாடு முழுவதும் துாய்மை பாரதம் இயக்கத்தை பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் ரயில் பெட்டிகள், கழிப்பறைகள் மோசமாக உள்ளன.

புதிய ரயில்வே திட்டங்களுக்கும், பயணிகளின் தேவைகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதிவேக புல்லட் ரயில்களை பத்து இடங்களில் இயக்க பத்து லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. அதிவேக புல்லட் ரயில்கள் சீனா, ஜப்பானில் இயக்கப்படுகின்றன. சீனாவில் மட்டும் ஆயிரத்து 500 இணை புல்லட் ரயில்கள் இயங்குகின்றன. அங்கு மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றின் இயக்கம் அட்வான்ஸ்டு டெக்னாலஜி கம்யூனிகேஷன் சிஸ்டம் முறையில் இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்களை பாதுகாப்பாக, விபத்தின்றி இயக்க முடியும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி மற்ற பயணிகள் ஏற முடியாது. பயணிகள் தங்களிடமுள்ள கார்டை ஸ்வைப் செய்தால் மட்டுமே ரயில் பெட்டிகளின் கதவு திறக்கும். சீனாவின் ரயில்வே துறை 50 ஆயிரம் கி.மீ., ரயில் பாதையை, 2020க்குள் அதிவேக பாதையாக மாற்றவுள்ளது.

துாசி, பனிக்காற்று, ெவளியில் இருந்து வரும் துர்நாற்றம் போன்றவைகளிலிருந்து தப்ப அதிவேக ரயில்கள் உதவும். இந்த ரயில்கள் மூலம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஒரு சில மணி நேரங்களில் சென்று விடலாம். பிரதமர் மோடி ஜப்பான், சீனாவுடன் அதிக வேக புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து பேசியுள்ளார். இது அவரது கனவு திட்டம்
சிறந்த வல்லுனர்களை கொண்டு திட்டமிட்டு மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியல் பார்க்காமல் ஏறி வரும் எரிபொருள் செலவிற்கு ஏற்ப ரயில் கட்டணங்களை படிப்படியாக மாற்றம் செய்திட வேண்டும். ரயில்வேக்கு வரும் வருமானங்களை பல வகைகளில் அதிகரிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

எதிர்கால திட்டமிடல் இன்றி வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பழைய கட்டடங்களை பராமரித்து முறையாக பயன்படுத்திட வேண்டும். ஒரு ரயில்வே ஸ்டேஷனை கட்டும் போது எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் தொலை நோக்குடன் அமைக்க வேண்டும். ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து நவீன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பயணிகள் நெருக்கடி மிகுந்த வழித்தடங்களை கண்டறிந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்.

இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரே மாதிரியான ரயில் பெட்டி டிசைன், இன்ஜின், சிக்னல் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி முன்னேற்றம் கொண்டு வந்தால் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். மக்களுக்கும் ரயில் பயணம் வசதியாக அமையும்.-கே.பத்மநாதன்,பொதுச் செயலாளர், தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்கம், மதுரை.94434 86323.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement