Advertisement

புதிய கல்வி ஆண்டே வருக!

புதிய கல்வி ஆண்டு பிறக்கிறது. மாணவர்களே! இதில் ஒரு லட்சிய விடியலை நோக்கி உங்கள் பயணம் தொடரட்டும்.
சிறகடித்துப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய் பறந்து வரும் குழந்தைகளும், தாயன்போடு அரவணத்துக் கொள்கிற காட்சிகளும் கண்ணில் பிரதிபலிக்கிற ஜூன் எத்தனை இனிமையானது.இந்த இனிய சூழல் எப்போதும் நிலைத்திருக்க என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டால், பள்ளி என்னும் நந்தவனத்தில் சந்தோஷ பறவைகளின் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
"மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருவதே கல்வி" என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதாவது மனிதனிடம் அறிவு இயற்கையாக இருக்கிறது. அதை யாரும் யாரிடமும் திணிக்கவோ கற்றுக்கொடுக்கவோ முடியாது. ஏற்கனவே மாணவனுக்குள் இருக்கும் அறிவை அவனுக்கு உணர்த்துவதே கல்வி.'அமெரிக்காவை வெஸ்புகி கண்டுபிடித்தார்' என்று படிக்கிறோம். உண்மையில் அமெரிக்கா அதுவரையில் இல்லையா? ஏற்கனவே இருந்த ஒன்றை அறிய செய்திருக்கிறோம், அவ்வளவுதான். அறிவாற்றலும் அப்படித்தான்; ஏற்கனவே இருப்பதை அறியச் செய்வது தான்.
ஆசிரியர் பணி :மாணவர்களுக்கான அறிவு அனைத்தும் அவர்களிடமே இருக்கிறது. அது விதைக்குள் உறைந்திருக்கும் செடியாக மறைந்து கிடக்கிறது. அதை உயிர்பிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.ஒரு மிகச்சிறிய விதைக்குள் எவ்வளவு பெரிய மரம் ஒளிந்து கிடக்கிறது. அந்த சிறிய விதை எப்படி முளைத்து கிளை விட்டு ஆலாய் தழைக்கிறது? அதுபோலத்தான் பெரிய அளப்பரிய ஆற்றல் மாணவரிடம் புதைந்து கிடக்கிறது. ஆசிரியர் பணி, அந்த மரத்தை வெளிக்கொண்டு வருவது மட்டுமே. அதுவும் கூட அந்த விதையில் என்ன மரம் இருக்கிறதோ, அந்த மரத்தை தான் வெளிக்கொண்டு வர முடியும்.
ஒரு மாணவனை அவனது இயல்பை தாண்டி வேறு பாதையில் பயணிக்க வைத்து விட முடியாது. உங்கள் எண்ணங்களையும் ஆசைகளையும் திணித்து ஒரு மாணவனின் திசையை திருப்பிவிட முடியாது. அப்படி ஒரு முயற்சி ஆபத்தாகவே முடியும்.அதாவது, ஒரு தக்காளிச் செடியை நட்டு வைத்து எவ்வளவு தான் தண்ணீர் ஊற்றினாலும் அது அவரைச் செடி ஆகாது. அது தக்காளி செடியாகவே தழைக்கும். வேண்டுமானால், அந்த செடி நன்றாக தழைக்க நல்ல உரம், எரு இடலாம்; களைகளை பிடுங்கி எறியலாம்.
ஒரு மாணவன் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 'இவனை திருத்துகிறேன்; இவனுக்கு கற்றுக்கொடுத்து பெரிய ஆள் ஆக்குகிறேன்' என்று நினைக்கும் ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு பெரிய தீங்கு இழைக்கிறார்கள். அவர்கள் கழுதையை குதிரையாக்க நினைத்து தொடர்ந்து கழுதையை அடித்துகொண்டே இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இதுமட்டும் அல்லாமல் பெற்றோர் தங்கள் குழந்தைகள் விருப்பத்தில் பெரிதும் தலையிட்டு தங்களின் நிறைவேறாத எண்ணங்களைத் திணிப்பதால் குழந்தைகள் சுய சிந்தனையை இழந்து சுருங்கி போய் விடுகின்றனர். ஆனால் அதே குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு, கொஞ்சம் சுதந்திரம் கொடுத்துப் பாருங்கள், சிந்தனைச் சிங்கங்களாக சீறுவர்.
வழிகாட்டுங்கள் :மாணவர்களுக்கு நேர்மறையாக கற்றுக் கொடுப்பதும், அவர்களிடம் நேர்மறையாக பேசுவதும் மிகவும் அவசியம். எதிர்மறையாகப் பேசி அவர்களிடம் குற்றம் குறைகளை சொல்லிக்கொண்டே இருந்தால் அவர்கள் கூனிக் குறுகி, தங்கள் வளர்ச்சியில் தடைப்பட்டு போய் விடுவார்கள்.'குற்றங்களை காட்டமாக சொன்னால் தான் இவனை திருத்த முடியும். இந்த வழியில் சென்று தான் இவனை திருத்த முடியும்' என்று சொன்னால் நிச்சயமாக அது அறியாமை. ஏனெனில் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கிற மாற்றத்தை மாணவரிடத்தில் ஏற்படுத்த முடியாது. மாறாக அவனுடைய பிரச்னையை அவனே தீர்த்துக்கொள்கிற வழிமுறைகளை நீங்கள் ஏற்படுத்தித் தரலாம். 'உட்காட்சி வழியே தீர்வு காணுதல்' என்று இதனை உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மெமரி கார்டுகளா :வெளிநாட்டவர்களின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் தாய் மொழியில் மொழி பெயர்த்து அதை மனப்பாடம் செய்ய வைப்பது தான் சிறந்த கல்வி என்று எண்ணி நாம் செயல்படுகிறோம். நினைத்து பாருங்கள் அது எத்தனை பெரிய தவறு!அதிகமான சம்பவங்கள், தகவல்களை மூளையில் திணித்துக்கொள்ள செய்வதுதான் சிறந்த படிப்பு முறை என்று நாம் நம்புகிறோம். இந்த வேலையை இன்று ஒரு 'மெமரி கார்டு' செய்து விடுகிறது. 'மெமரி கார்டு' செய்ய வேண்டிய வேலைகளை நம் மாணவர்கள் ஏன் செய்ய வேண்டும்.
ஒழுக்கத்தை உருவாக்குவதும், மன வலிமையை உருவாக்குவதும் அல்லவா கல்வி. சிறப்பாக வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான ஆற்றலையும், திறமையையும் தருவது தானே கல்வியாக இருக்க முடியும். இதுபோன்ற கல்வியை வழங்க வேண்டுமானால் ஆசிரியர்களிடம் ஒழுக்கமும், துாய எண்ணமும் இருக்க வேண்டியது அவசியம். 'இழுக்கல் உடையூழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்க முடையார் வாய்ச்சொல்' என்கிறார் வள்ளுவர்.முழுமையான இதயப்பூர்வமான துாய்மையுடன் இருக்கும் ஆசிரியர்களின் வார்த்தைகள் தான் மாணவர்களிடம் நிலைக்கும்.
புரிதல் அவசியம்:இன்று ஆசிரியர்கள் பலரும் குடும்ப சிக்கல்களையும், பொருளாதார சிக்கல்களையும் உருவாக்கி கொண்டு அதிலேயே சிக்கி சுழலுகிறார்கள். மாணவர்களோ வெறும் வினா விடையை தெரிந்துகொள்வதற்காக பள்ளிக் கூடம் வருகிறார்கள். பள்ளி நேரம் முடிந்தவுடன் அவரவர் பாதையில் திரும்பி விடுகிறார்கள். இதயப்பூர்வமான உறவு இல்லாமல் போய் விடுகிறது. இந்நிலை மாறவேண்டும். ஆசிரியர்- மாணவர்களிடையே நல்ல புரிதல் உருவாக வேண்டும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் மக்கள் பெற்றிருக்கும் கல்வியை பொறுத்தே இருக்கிறது. எனவே ஆசிரியர்களே... தேசத்தை வளமாக்கும் கல்வியை மாணவர்களுக்கு வழங்குங்கள். மாணவர்களே... ஆற்றல் மிக்க கல்வியை பெறுங்கள். பெற்றோர்களே... மேற்கண்ட லட்சியத்தை நிறைவேற இருவருக்கும் துணையாக நில்லுங்கள்.
- முனைவர். ஆதலையூர் சூரியகுமார், ஆசிரியர் மற்றும் மாணவர் வள மேம்பாட்டு பயிற்றுனர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலுார். 98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement