Advertisement

தேவையற்ற ஜாதி, மதச் சர்ச்சைகள்

ஜாதி, மதங்களால் வேறுபட்டாலும், இந்தியர் எனும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் நம் மக்கள். இந்தியாவிற்குள் நுழைந்த, பல வெளிநாட்டாரின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த காரணத்தால், இந்தியர் இத்தகைய பன்முகத் தன்மை கொண்டவர்களாக மாற நேரிட்டது; ஒரு வரலாற்று நிகழ்வு.ஜாதி, மதங்களின் அடிப்படையிலான சமுதாய அமைப்பிற்கும், இந்திய அரசியல் சாசனம் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் ஜாதிகளையோ, மதங்களையோ விமர்சிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. சமூக சீர்திருத்தங்களில் அக்கறை உள்ளவராக, தங்களை காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள், ஜாதி அமைப்புகளையும், மத நம்பிக்கைகளையும் எதிர்த்து, கண்டித்து, பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றனரா?

ஜாதிகளற்ற, மதங்களற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே, தங்கள் கட்சியின் கொள்கை என்று, தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க முன் வருவரா?அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அரங்கேறி வரும் ஜாதி, மதங்கள் தொடர்பான கசப்பான நிகழ்வுகள், கண்டனத்திற்குரியவை என்பதில், இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அச்சம்பவங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதும் அவசியமாகிறது. இத்தகைய சம்பவங்களைக் கண்டிக்கும் அரசியல்வாதிகளே, அச்சம்பவங்களுக்கு வித்திடுபவர்களாக இருப்பது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.இந்தியா, ஒரு மதச் சார்பற்ற நாடு என்று விளக்கம் தரப்பட்டாலும், இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்கள் தாம் விரும்பும் மதங்களைப் பின்பற்றும் உரிமையை வழங்கியிருக்கிறது. இந்தியர்களுக்கு பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும் அதே வேளையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வண்ணம் அச்சுதந்திரம் இருக்கலாகாது என்றும் அது கூறுகிறது.

மத நம்பிக்கைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. உலகின் அனைத்து மதங்களுமே, மனித இனத்தை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டவையே. பல பெயர்களில் வணங்கப்பட்டாலும், இறைவன் ஒருவனே என்பதை அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
இந்திய சமுதாய அமைப்பு பல ஜாதி, மதங்களால் பின்னப்பட்டது. 3000-4000 ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும், ஓர் அம்சமாக இது இருந்து வருகிறது.ஜாதிப் பிரிவினை பற்றிய இரு வேறு முரண்பட்ட கருத்துக்கள் தொன்று தொட்டு இருந்து வரும் நிலையில், இந்தியாவை ஜாதிகளற்ற சமுதாயம் என கருதி, புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்துவதாகக் கூறி ஜாதிகளைப் பற்றி விமர்சனம் செய்வது, சமுதாயத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்கும் செயலாகத் தான் இருக்குமே தவிர, அது சமுதாய நலனுக்கு உரம் ஊட்டுவதாக இருக்காது.

நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர் கடைபிடித்த பல பழக்க, வழக்கங்களை, இன்று, நாம் கை விட்டு, புதிய பாதையில் பயணிக்கிறோம். மாற்றம் என்பது மாறாத ஒன்று. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்தே தீரும். ஜாதியத் தலைவர்களும், ஜாதியக் கட்சிகளுமே புற்றீசல்கள் போல் பெருகி வரும் இன்றைய சூழலில், ஜாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், எழுதுவதும் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.
நம் அரசியல் சாசனம் எதுநாள் வரை ஜாதிகளையும், மதங்களையும் அங்கீகரிக்கிறதோ அது நாள் வரை இந்தியாவில் ஜாதிகளும், மதங்களும் இருந்தே தீரும். எனவே, ஜாதி, மதங்களுக்கு எதிரான பிரசாரம் என்பது, நம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த உண்மையை முதலில் சமூக மாற்றத்தை விரும்புவோரும், முற்போக்காளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணராது, வெறுமனே ஜாதி ஒழிப்பு பற்றிப் பேசுவது பொருளற்றது. ஜாதி ஒழிப்பு என்பது நடைமுறை சாத்தியமற்றது.

தமிழகத்தில், இன்று சில ஜாதி சங்கங்களின் தலைவர்கள், மக்கள் தொகையின் அடிப்படையில், தங்கள் ஜாதியினர் தான் தமிழகத்தை ஆளும் தகுதி படைத்தோர் என்றும், பிற ஜாதியினர் தங்களுக்குக் கட்டுப்பட்டு இரண்டாம் தர மக்களாக வாழ வேண்டும் என்றும், வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இத்தலைவர்களுக்கு தமிழ் மொழியோ, தமிழ் இனமோ முக்கியமல்ல. சுயநலம் தான் முக்கியம். ஆனால், அதேவேளையில், அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மொழியையும், தமிழினத்தையும் வானளவாகப் புகழ்ந்து தள்ளுவதில் அசகாய சூரர்கள்.கடந்த, 1967ல் தமிழக மாணவர்கள் மனதில் இன துவேஷத்தையும், மொழி வெறியையும் புகுத்தியும், ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்படும் என்ற வாக்குறுதியளித்து, அந்த வாக்குறுதியில் தமிழ் மக்களை மயங்கச் செய்தும், தி.மு.க., ஆட்சி பீடம் ஏறியது. அன்றிலிருந்து அக்கட்சியின் தலைவர்கள் ஆரியம், திராவிடம் பற்றியே பேசி வருகின்றனரே தவிர, தமிழகத்திற்கோ, தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ உருப்படியான எந்த பொருளாதாரத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இலவசங்களை வழங்கியும், மதுப் பழக்கத்தை தமிழ் மக்களிடையே வேரூன்றச் செய்ததும் தான் அவர்கள் செய்த மிகப் பெரிய சாதனைகள்.

சமூக நீதி என்பது, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், சரி சமமான உரிமைகள் வழங்கப்படும் நியதியில் தான் இருக்கிறதே தவிர, பெருவாரி மக்கள் தொகையைக் கொண்டவர்களுக்கு ஒரு நீதியும், சிறுபான்மையினருக்கு ஒரு நீதியும் வழங்கப்படுவதில்லை. ஜாதி, மத மோதல்களுக்கும், இனக் கலவரங்களுக்கும் இடமளிக்கும் தேவையற்ற வாதப் பிரதிவாதங்களை நிறுத்தி, சமூக நல்லிணக்கத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய நற்செயல்களில் ஈடுபடும் போது தான், தமிழகம் வளர்ச்சி பெறும்.நல்ல கருத்துக்களை, யதார்த்தங்களை எடுத்துரைப்போரை பிற்போக்காளர் என்றும், தமிழ் துரோகிகள் என்றும் முத்திரை குத்தி, தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக செயல்பட்டு வரும், சுயநலக் கும்பலின் தமிழர் விரோதப் போக்கு நீடிக்குமானால், தமிழகம் எதிர்காலத்தில் ஜாதி, சமய, மோதல்களின் போர்க்களமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இமெயில்: krishna_samy 2010 yahoo.com


ஜி.கிருஷ்ணசாமி -
கூடுதல் காவல் துறை
கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement