Advertisement

தலைமுறைகளுக்கு தாறைவார்க்கும் பூச்சிக்கொல்லி விஷம்

இந்தியாவில் 1950களில் விவசாயத்திற்காக பயன்படுத்தியது 2000 டன் பூச்சிமருந்துகள். தற்போது ஆண்டொன்றுக்கு 80ஆயிரம் டன் பூச்சிமருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில், ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிமருந்துகளால் பாதிக்கப்படுகின்றனர்; 40ஆயிரம் பேர் இறக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதுவும் வளரும் நாடுகளில் தான்.
பயிரை சாப்பிடும் பூச்சிகள் இலையை சுருட்டிக் கொண்டோ அல்லது தண்டுகளை துளைத்து கொண்டோ உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றன. தட்டான், குளவி, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் பயிர்களுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும். இ்ாவை பயிர்களை தின்னும் பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளை வயலில் அடிக்கும் போது முதலில் கொல்லப்படுவது, நமக்கு நன்மை செய்யும் பூச்சியினங்கள் தான். தீமை செய்யும் பூச்சிகள் கொஞ்சமாவது இருந்தால் தான், நன்மை செய்யும் பூச்சிகள் வயல்களில் தங்கியிருக்கும். அதனால் அவையும் நமதுநண்பர்கள் தான்.கொல்லப்படும் உணவுச்சங்கிலி பூச்சிக்கொல்லிகளை வயல்வெளிகளில் தெளிக்கும் போது காற்று, மண், தண்ணீருடன் கலக்கிறது. அருகில் உள்ள வரப்புகளுக்கும் அதிலிருந்து ஓடைகளின் மூலம் ஆறு, குளம், கண்மாய்களில் கலக்கிறது. வயலில் நன்மை செய்யும் பூச்சிகளை அழிப்பதுடன், தண்ணீரில் கலப்பதன் மூலம் மீன், தவளை, நண்டு, இதர உயிரின சங்கிலியை கொன்று விடுகிறது.
மருந்து தெளித்த உணவுப்பயிர்களை சாப்பிடும் ஆடு, மாடுகளுக்கும், உணவுச்சங்கிலியில் மேலே உள்ள மனிதனுக்கும் இப்பூச்சிக்கொல்லி, உயிர்க்கொல்லியாக மாறுகிறது. மேலைநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. கொசுவை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஆர்கனோ குளோரின் டிடிடீ எனும் பூச்சிக்கொல்லி, உயிரினங்களை கொல்வதாக, முதன்முதலில் ரேச்சல் கார்சன் என்பவர் 1962ல் தனது மவுன வசந்தம் புத்தகத்தில் எழுதினார். இம்மருந்து ஏராளமான பறவைகளை கொன்று குவித்ததாக நுாலில் குறிப்பிட்டுள்ளார். 20ம் நுாற்றாண்டில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நுாலுக்கு பிறகே, ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் விதிமுறைகள் நெறிபடுத்தப்பட்டன.ஆர்கனோ பாஸ்பேட், கார்பமேட், சிந்தடிக் பைரித்ராய்டு பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தீமை செய்யும் பூச்சிகளை கொல்வதோடு, நம் நண்பர்களான தும்பி, குளவி, தேனீக்களை கொல்கிறது. உணவுப் பயிர்களில் மருந்தின் வீரியம் இருப்பதால் மனித உயிருக்கும் ஆபத்தாக உள்ளது.
நரம்பு மண்டலம் பாதிப்பு :மானோ குரோட்டோபாஸ், எண்டோசல்பான் மருந்துகள், பீகாரிலும் கேரளாவின் காசர்கோடிலும் செய்த மனித உயிர்வதைகளை மறந்துவிடமுடியாது. இம்மருந்துகள் உயிரினத்தின் நரம்புமண்டலத்தை உடனே பாதிக்கிறது. பயிரை சாப்பிடும் பூச்சிகள் விரைவிலேயே இதனை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று விடுகின்றன. ஆனால் மனித மரபணுக்களை மாற்றி குறைபாடு, நோயுடன் குழந்தைகளை பிறக்க வைக்கின்றன. இதனால் யாருக்கு லாபம். உடல் கவசம், முகக்கவசம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால், உடல் ரீதியாக நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. பூச்சிகள் உடனே சாகவேண்டும் என்ற பேராசையால், அளவுக்கு மீறி மருந்து தெளிப்பதால் அதுவே மனிதர்களுக்கு விஷமாகவும் மாறுகிறது.பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கும் போது, இந்த பூச்சிக்கொல்லிகள் தாய்ப்பால் மற்றும் பசும்பால் மூலம் குழந்தைகளுக்கும் செல்கிறது. நம்முடைய காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதுவே புற்றுநோய், மறதிநோய், பிற நோய்கள் வருவதற்கு மூலகாரணமாகிறது. விரும்பி சாப்பிடும் காய்கறிகள் மூலம் உடலில் செல்லும் நஞ்சு, கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல்படும் திறனை இழப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் தலைகாட்ட துவங்குகின்றன.
அலர்ஜி ஏற்படும் :நாம் அன்றாடம் பயன்படுத்தும் கொசுவிரட்டிகளில் சிந்தடிக் பைரித்ராய்டு பூச்சிக்கொல்லி உள்ளது. வீட்டுக்குள் ஜன்னலையும் சேர்த்து அடைத்து கொசுவிரட்டியை புகையவிட்டு துாங்குவதால் இதன் நச்சு, நுரையீரலுக்குள் சென்று அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுதிணறல் ஏற்படுகிறது.தினமும் நமது உடலிற்குள் உணவுடன் சேர்த்து பூச்சிக்கொல்லியை மறைமுகமாக சாப்பிடுகிறோம். நிறைய பறவைகளை வயல்வெளிகளில் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தட்டான், தேனீ, பருந்து, சிட்டுக்குருவிகள் என இயற்கை வளம் பேணும் பறவையினங்கள், 'காணவில்லை' பட்டியலில் சேர்ந்து விட்டன. இந்த வரிசையில் மனிதர்கள் இடம்பெறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.
இயற்கை பூச்சிக்கொல்லி, இயற்கை உரத்தை பயன்படுத்தி வேளாண் செய்வோம். நம் முன்னோர் கடைபிடித்த இயற்கை விவசாய முறையில் பயிர்செய்தால், வானமும், இந்த உலகமும் நம் வசப்படும். இல்லையெனில் பூச்சிக்கொல்லி எனும் மாயவலையில் சிக்கி, ஒவ்வொரு உயிரினமும் சின்னாபின்னமாகிவிடுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.-எம்.ராஜேஷ், உதவி பேராசிரியர், தாவரவியல் துறை, அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, 94433 94233.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement