Advertisement

எளிமையும், இனிமையும் அழகு!

"அதிகமாக வெளியில் தெரியாமல் அசத்திக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று உலகளாவிய கனடா உதயன் விருதைப் பெறுவதற்காக அண்மையில் நான் கனடா போய்த் திரும்பியபோது என் நண்பர் ஒருவர் பாராட்டியது பெருமையாக இருந்தது. "எதற்காக நான் தெரிய வேண்டும்... என் படைப்புகள் படிக்கப்படுகிற போது இயல்பாகவே நான் வெளிப்பட்டுவிட மாட்டேனா...? அதிகமாக எனக்கெதற்கு விளம்பரம்?" என்றேன்.
லண்டனில் முக்கியமான வீதிகளில் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அங்கு வசிக்கும் மக்களில் யார் மிகுந்த கோபத்துக்கு இலக்காகி இருக்கிறார்கள், எரிச்சலுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இந்த ஏற்பாடு. நகரத்தில் யாரைப் பிடிக்கவில்லையோ, யார்மீது கோபமோ அவருடைய பெயரை அந்தப் பெட்டியில் எழுதிப் போட்டுவிட வேண்டும். அவ்வப்போது அந்தப் பகுதியின் தலைவர் அவற்றைத் தொகுத்துப் பார்த்து அதிகமான எரிச்சலுக்கு உட்பட்டிருப்பவரை அழைத்து எச்சரித்து இதமாக, எளிமையாக நடந்து கொள்ள அறிவுறுத்தி அனுப்புவார்.

பெர்னாட் ஷாவின் புகழ்:ஒருநாள் பெர்னாட் ஷா சாலை வழியே நடந்து வருகிறபோது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர் காகிதத்தையும் பேனாவையும் கொடுத்துத் தான் கூறும் பெயரை எழுதக் கேட்டதோடு "பெர்னாட் ஷா" என்றதும் பெர்னாட் ஷாவுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. "பெர்னாட் ஷாவைப் பார்த்திருக்கிறீர்களா? பழகியிருக்கிறீர்களா? அவர் உங்களுக்கு ஏதேனும் தீமை செய்திருக்கிறாரா...? ஏன் இந்தக் கோபம்?'' என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே வினவியபோது... "அப்படியெல்லாம் கோபம் ஒன்றுமில்லை. ஆனால் அவரைப் பற்றி எல்லோரும் பேசுவதும் புகழ்வதும் பெரிதாகப் பாராட்டி எழுதுவதும் எனக்கு எரிச்சலூட்டுகிறது. அதெப்படி ஒரு தனிமனிதனை இந்த அளவுக்குத் தலையில் தூக்கி வைத்து ஆடுவது?" என்று அந்தப் பெரியவர் பெருமூச்செறிந்தபோது தான் பெர்னாட் ஷாவுக்குப் புரிகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நமது பாராட்டுகள் முழுமையானவை, ஆத்மார்த்தமாக நிகழ்பவை என்று. ஆனால் அது எத்தனை பேருக்கு எரிச்சலூட்டும் என்பது யாருக்கும் தெரியாது.

மேடைகளில் காமராஜரை யாராவது பாராட்டிப் பேசிவிட்டால் நிறுத்தக் கூறிக் கோபித்த வரலாறுண்டு. கக்கன், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்களுக்கெல்லாம் ஏது விளம்பரம்? யார் வைத்தார் சுவரொட்டிகள்! சர்வோதய இயக்கத் தலைவர் வினோபாவேவிற்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதுகிறார் காந்தி. கடிதத்தைப் படித்து முடிந்ததும் கிழித்தெறிந்து விடுகிறார் அவர். நண்பர்கள் வியப்போடு வினவுகிறார்கள். "பாராட்டுக் கடிதத்தை ஏன் கிழித்தெறிந்தீர்கள்?" என்றபோது "இக்கடிதம் என்னிடம் இருந்தால் எனக்கு அகந்தை ஏற்பட்டுவிடும்" என்றார் வினோபாவே.

பிரச்னைகளுக்கு காரணம்:எளிமையாக இருப்பவர்களுக்கு அகந்தை இராது. பேராசை கிடையாது. ஆத்திரம் வராது. எவரிடத்தும் எதிர்பார்ப்பு வளராது. ஏமாற்றமும் நிகழாது. எளிமை ஓர் அழகு. ஒப்பனை இல்லாமலேயே ஒவ்வொருவரையும் உளம் கவரச் செய்வது. வாழ்க்கை வசதிகள் இருந்தாலும், இல்லையென்றாலும் எளிமை எல்லோரையும் சமமாகக் காட்டும். மதங்களை மீறி, ஜாதிகளைத் தாண்டி, வசதிகளுக்கு அப்பால் மானுடத்தை ஒரு குடைநிழலில் கொண்டுவருவது எளிமைதான். இன்றைய சமுதாயச் சீரழிவுகளுக்கெல்லாம் அடிப்படையான காரணம் நம்மிடத்தில் எளிமை இல்லாததுதான். எல்லாத் தீமைகளுக்கும், குற்றங்களுக்கும், குழப்பங்களும், கலவரங்களுக்கும் ஆடம்பரமே பெரிதும் காரணம். எளிமையான நல்லவர்களைப் பார்த்து இப்படி இருக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டாகக் கொள்வதை விடுத்து, ஆடம்பரமாக இருக்கிற அயோக்கியர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகப் பார்த்து ஆசைப்படுவதால்தான் நாட்டில் இத்தனை ஊழல்களும் விதி மீறல்களும் கொலைகளும் களவுகளும் நிகழ்கின்றன. எளிமையாக, அடக்கமாக இருக்கிறவர்கள்தான் எப்போதும் நம் இதயங்களில் இருப்பார்கள். எளிமையானவர்கள் எந்தத் துயரினுக்கும் இலக்காக மாட்டார்கள்.


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை


ஆரிருள் உய்த்து விடும்(குறள்)

இனிமையின் சுகம்:எளிமை எவரையும் ஈர்ப்பதைப் போல இனிமையும் நம்மை எவரது நெஞ்சத்திலும் இடம்பெறச் செய்யும். வாழ்க்கையில் இனிமை என்பதில்தான் சுவையும், சுகமும் இருக்கின்றன. இதமாகப் பேசுவதென்பது வாழ்க்கையை இனிமையாக்குகிறது. அன்பை வெளிப்படுத்தவும் ஆறுதல் வழங்கவும் ஆட்படுத்தவும் அக்கறை காட்டவும் ஆணைகள் உதவுவதில்லை. அழகான இனிய சொற்களே உதவுகின்றன. பேசுவதற்குத் தேர்கிற இனிய சொற்கள் கனியைப் போன்றவை. இனிய சொற்களை மறுப்பதென்பது கனி இருக்கும்போது காயை உண்பது போன்றது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.


இனிய உளவாக இன்னாத கூறல்


கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

ஆத்திரமூட்டும் சொற்களும், ஆணவம் பொதிந்த பேச்சும் எவர் மீதும், எவருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தும். இதமாகப் பேசுகிற எவரையும் எதிர்க்க யாருக்கும் தோன்றாது. சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பிருக்கும், மரியாதை இருக்கும். இவர் நம்மை மதிப்பார் என்கிற உணர்வே பலரை அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளச் செய்யும். பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பதவிகளில் நான் நாற்பதாண்டுக் காலம் பணியாற்றியிருக்கிறேன். என் பணிகளை செவ்வனே செய்தது ஒருபுறமிருக்க, எனக்கு வாய்த்த உயர்அதிகாரிகள் அத்துணை பேரும் அற்புதமான மனிதர்கள். இதைப் பணி ஓய்வு பெறுகிற சமயத்தில் பெருமையாக என் உயர்அதிகாரி ஒருவரிடம் கூறிய போது. "உங்களுக்கு நாங்கள் வேறு மாதிரி அமைவதற்கு வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் பணிகளிலும் சரி பண்பு நலன்களிலும் சரி சரியாக இருக்கிறீர்கள். உங்கள் உயர்அதிகாரிகளில் சிலர் கடுமையான கோபக்காரர்கள். பலர் அவர்களிடம் படாத பாடு பட்டிருக்கிறார்கள். நீங்கள் இதமானவர். எனவே எல்லோரும் இதமாயிருந்திருக்கிறார்கள்" என்றதும் இனிமையாக, இதமாக, இயல்பாக இருத்தலுக்கும் நாட்டில் அங்கீகாரம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். கனிவாக இருப்பவர்களிடம் கண்டிப்பு இராதென்கிற கணிப்பு சிலருக்குண்டு. இதில் ஓரளவு உண்மை இல்லாமலில்லை. ஆனால் கண்டிப்பாக இருப்பதைக் கூடக் கனிவாகச் செய்ய இயலும்.

சுகமான நட்பு:கனிவாக, இனிமையாக பேசுவதால் நல்ல நட்பை பெறலாம். சுற்றியிருக்கிற நட்பு சுகமானது. உறவைப் போலவும், நட்பைப் போலவும் உறுதியான பலம் வேறெங்கும் இல்லை. வாள் பலத்தை விடவும் ஆள்பலமே வலுவானது, வலிமையானது. அழைத்த குரலுக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அன்பான நண்பர்கள் வந்துவிடுவார்கள். பணத்தைக் கொடுத்துச் சாதிப்பதைப் பாசம் மிகுந்த நண்பர்களால் சாதித்துக் கொள்ளலாம். எனவே இனிமையாகப் பேசவேண்டும். இதமாக நடந்து கொள்ள வேண்டும். சொல்லாலும் பிறரைத் துன்புறுத்துவது சாத்தியமென்பதால் அத்தகைய சொற்களைத் தேடிப்பிடித்து ஊருக்கு வெளியே கொட்டிவிட்டு வர வேண்டும். இதமான பேச்சும், இனிமையான நடத்தையும் நல்லனவற்றை நாளும் நமக்குத் தரும். வாழ்க்கையையும் நமக்கு வசமாக்கும்.

- 'கலைமாமணி' ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் 94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement