Advertisement

வறுமை ஒழிய விவசாயம் வளர வேண்டும்

முன்னொரு காலத்தில் யானை கட்டி போரடித்த நம்நாட்டில் இன்று விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த பயிருக்கு பல்வேறு பிரச்னை என்று கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.உலகம் முழுவதும் தினமும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 100 கோடி இருக்கும் என ஐ.நா.,அறிக்கை கூறுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை இந்தியாவில் உள்ளது. அதாவது 35 கோடிப்பேர் இந்தியாவில் தினமும் பசியால் வாடுகின்றனர். உலகில் தினமும் 17 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறக்கிறது.

பிரச்னை எங்கே உள்ளது:ஒரு பக்கம் செல்வத்தில் செழித்தோங்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர். மறுபக்கம் ஏழைக்குழந்தைகள் பசிக்கு உண்ண முடியாமல் இறக்கின்றனர். திட்டமிட்ட பகிர்வு இல்லாமையே இதற்கு முக்கிய காரணம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 35 கோடிப்பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான அளவு உணவை சேமிக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு கோடியே 64 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் அறிவித்துள்ளது. "நாடு முன்னேறுகிறது, நாடு முன்னேறுகிறது” என திரும்ப, திரும்ப விளம்பரம் செய்யப்படுகிறது. ஒரு பக்கம் முன்னேற்றம் இருந்தாலும், பெரும்பான்மை மக்களின் உண்மை நிலை அதற்கு எதிர்மாறாக உள்ளது. நம் நாட்டில் 45 கோடி மக்கள் தினமும் 447 ரூபாயில் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என ஒரு ஆய்வு கூறுகிறது.

அழியும் விவசாயம்:அரசின் புதிய பொருளாதார கொள்கை காரணமாக நாட்டின் அடிப்படை கட்டமைப்பான விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. விவசாயம் செய்பவர்கள் அந்த தொழிலில் நம்பிக்கையிழந்து புலம் பெயர்ந்து வருகின்றனர். கடன் வாங்கிய விவசாயிகளின் எண்ணிக்கை பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

வறுமை ஒழிப்பு திட்டம்:நேரு காலத்தில் "சமுதாய வளர்ச்சி திட்டம்” என்ற பெயரில் துவக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திரா காலத்திலும் "ஏழ்மையை ஒழிப்போம்” என்ற லட்சியத்திற்கு முன் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளில் அத்தகைய திட்டங்கள் அனைத்தும் கை விடப்பட்டன. ஆயினும் அதே சமயத்தில் 2009 ல் பல்வேறு தொழிலதிபர்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இந்தியாவில் கிராமப் புற வேலை வாய்ப்பிற்கு வரப்பிரசாதமாக புதிய அத்தியாயம் படைக்கும் என்று கருதப்பட்ட "மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்” முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியே.

பணக்காரர்களிடம் உலகம்:உலகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் ஒரு நாள் வருமானம் 1.25 டாலர் (சுமார் 80 ரூபாய்). உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த செல்வ வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றி உள்ளனர். மீதமுள்ள மக்களுக்கு கிடைப்பது 14 சதவீதம் மட்டுமே. ஆட்சியாளர்களோ இந்தியாவில் 20 சதவீதம் மக்களின் நலன் பற்றி கவலைப்படும் அளவிற்கு 80 சதவீதம் மக்களின் நலம் பற்றியும் அவர்களின் ஏழ்மையை போக்குவது பற்றியும் கவலைப்படுவதில்லை. எனவே 60 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலங்களை கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாய பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும். நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், கிராம இணைப்பு சாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் கடன் மற்றும் இதை பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். சிறு, சிறு இடங்களில் எவ்வாறு பயிர் செய்யலாம் என்பதற்கான ஆராய்ச்சியை மேம்படுத்தப்படவேண்டும். பொதுவிநியோக திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். உணவுப்பொருள் பதுக்கலை தடை செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிகையை பொறுத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு விபரங்கள் சரியாக கணக்கிடப்பட வேண்டும். உணவுப்பொருட்களை விற்பனை செய்ய நேரடி சந்தைகள் அமைக்கப்பட வேண்டும். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்கவேண்டும். ஊழல் பேர்வழிகளையும் பதுக்கல்காரர்களையும் கடுமையான சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும். விவசாயபொருட்களை மாற்றம் செய்யப்பட்ட மதிப்புக்கூட்டிய நிலையில், விற்பனை செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வேண்டும். இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். குளம், கால்வாய், கண்மாய்கள், அனைத்து நீர் நிலைகளும் நன்கு காலத்தே பராமரிக்கப்பட வேண்டும். இந்த பணிகள் செய்தால் இந்திய விவசாயத்தில் வளர்ச்சியடைவது மட்டுமல்ல விவசாயத்தை நம்பியிருக்கும் 75 சதவீத மக்களின் வறுமையும், பசியும் தீரும்.


- கீதா கணேசன், உதவி பேராசிரியர், டாக்டர் உமையாள் ராமனாதன் பெண்கள் கல்லூரி, காரைக்குடி. 94443 68371.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement