Advertisement

சட்டங்கள் ஏன் செயல்படுவதில்லை? எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் -பத்திரிகையாளர்

மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கவும், யாரும் குற்றச் செயலில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும், நாட்டில் பல்வேறு விதமான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தண்டனை அனுபவித்தாலாவது, குற்றம் செய்தவர் திருந்துவர் என்ற நம்பிக்கையில், காவல் துறையும், நீதிமன்றமும் செயல்படுகிறது.

இன்று நடைமுறையில் நாம் காண்பதென்ன! சட்டங்கள் போட்டது எல்லாம் சரி தான்; அது எந்த அளவுக்கு செயல்முறையில் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும்போது வேதனை தான் மிஞ்சுகிறது. மது அருந்தி வாகனம் ஓட்டுவது குற்றம் என்பதில், இரு வேறு கருத்து இருக்க முடியாது. போலீஸ் பிடித்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி உண்டு; டிரைவிங் லைசென்சை ரத்து பண்ணவும் முடியும். இது நடைமுறையில் உள்ள சட்டம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு ஊரில் இந்த சட்டத்தின் மூலம், எத்தனை பேரை போலீஸ் பிடித்தது என்பதை பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஏதோ பெயருக்கு, 10 அல்லது 20 என்றாலே அதிகம்.ஒவ்வொரு, 'டாஸ்மாக்' முன்பும், நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிற்கும். அந்த வாகனத்தில் வந்தவர்கள், பாருக்கு டிபன் சாப்பிடவா போகின்றனர்? அத்தனை பேரும் மது அருந்திய பின், ஜாலியாக மோட்டார் சைக்கிளில் பறக்கின்றனரே; இவர்களை ஏன் போலீஸ் கண்டுகொள்ளவில்லை? பார் வாசலில் பிடிக்க ஆரம்பித்தாலே, தினமும் ஆயிரக்கணக்கான வழக்கு தேறுமே!

'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு' என்று மது பாட்டில் மீது ஒட்டிவிட்டு, டாஸ்மாக் மூலம் அரசே விற்பது, எந்த வகையில் நியாயம்? 'உயிருக்கே கேடு' என்று அறிவித்த பின், பணம் வருகிறது என்பதற்காக மக்களை குடிக்க அனுமதிப்பது சரிதானா? இதை எதிர்த்து யாராவது கோர்ட்டிற்கு சென்றால், 'அரசு கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது' என்ற பதில் வருகிறது.
குடிப்பவர் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்ல. மாதம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் என்று அரசு கூறுகிறது; அந்த பணம் யாருடையது? சாதாரண நடுத்தர மக்கள், குடி ஆசையில் கொடுத்தது தானே! இந்த டாஸ்மாக், பார் என்ற கண்றாவி எல்லாம் இல்லாவிட்டால், இந்த கோடிக்கணக்கான பணம் அவரவர் குடும்பங்களுக்கு பயன்படும் அல்லவா!அடுத்ததாக, திருட்டு, 'சிடி' என்று பரபரப்பாக சென்று, அவர்களை பஜாரில் பிடித்து கைது செய்ய தனிப்படை அமைத்த அரசு, ஏன் சினிமா தியேட்டர் முறைகேடுகளை கண்டு கொள்வதில்லை? டிக்கெட்டுக்கு பதில், வெறும் டோக்கன் கொடுத்து வரி ஏய்ப்பு செய்வது, 'ஏசி' தியேட்டர் என்று கூடுதலாக கட்டணம் வாங்கி, 'ஏசி'யே போடாமல் விடுவது அல்லது துவக்கத்தில், 'ஏசி' போட்டு விட்டு படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், 'ஏசி'யை நிறுத்தி விடுவது.

சுத்தமான குடிநீர் வசதி இல்லாமை, புதுப்படம் என்றால் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது, சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதை யாராவது கேட்டால், அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இது தானே நடக்கிறது!இவைகளையெல்லாம் சரி செய்து நியாயமான கட்டணம் வாங்கினால், மக்கள் தானாக தியேட்டருக்கு வருவர்; திருட்டு, 'சிடி' பிரச்னை குறைந்துவிடும். இது நடக்காத வரை, மக்கள் தங்கள் வீட்டில், குறைந்த கட்டணத்தில் குடும்பத்துடன், 'சிடி' மூலம் படம் பார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது. சாலை போட ஒப்பந்தம் விடும்போது, குறைந்தது அது ஒரு ஆண்டாவது தாங்க வேண்டும். ஆனால், ஒரு சிறு மழைக்கே பழுதடைந்து, தார் பெயர்ந்து ஏற்பட்ட பள்ளத்தில் ஏறி இறங்கி அவஸ்தைப்படுவது, சர்வ சாதாரணமாகி விட்டது. புகார் கொடுத்தாலும், அந்த சாலையை செப்பனிட மாதக் கணக்கில் ஆவதும் உண்டு. சில நேரங்களில், கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுவர்.

ஒப்பந்தம் எடுத்தவர், தான் போட்ட சாலையில் பழுது ஏற்பட்டால், ஒரு வாரத்திற்குள் அவரது செலவிலேயே புதுப்பிக்க வேண்டும். நகரில் சாலைகள் புதிதாக போடும்போது ஒப்பந்ததாரர் பெயர், பட்ஜெட் தொகை, தேதி ஆகிய விவரங்களை கட்டாயம் போர்டில் எழுதி, மக்கள் அறிய வைக்க வேண்டும்; அது தானே ஜனநாயகம்! நடப்பதற்காக தானே பிளாட்பாரம்; ஆனால், பிளாட்பாரம் முழுவதும் கடைகள் வைத்து நாம் நடக்க இடமின்றி, சாலையில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. இந்த மாதிரி பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்வோரை அகற்ற சட்டம் இருந்தும், அதை ஏன் செயல்படுத்துவதில்லை? இன்னொரு முக்கியமான விஷயம், சாலை மறியல் பற்றியது. எந்த ஒரு சின்ன பிரச்னை என்றாலும் கட்சியினர், பொதுமக்கள், மாணவர் கள் என சொல்லி வைத்தாற்போல் முதலில் கையில் எடுக்கும் ஆயுதம், சாலை மறியல் தான்.

உங்கள் குறையை தீர்க்க, அதற்குப் பொறுப்பானவர்களான கவுன்சிலர், மேயர், கமிஷனர் வீடுகளுக்கு சென்று மறியல் நடத்தலாமே! அதை விடுத்து, எவ்வளவோ அவசர வேலை காரணமாக பஸ், டூவீலரில் செல்வோரையும், வேலைக்குச் செல்வோரையும் தடுத்து நிறுத்தி மிரட்டுவது, எந்த வகையில் நியாயம்?மற்றொன்று, சிலைகள் பற்றியது. நகருக்கு நடுவில், ஒவ்வொரு கட்சி அல்லது ஜாதி தலைவருக்கும் அரசு அனுமதியுடன் சிலை வைக்கின்றனர். ஆனால், அந்த சிலைக்கு ஏதாவது ஒரு சிறு சேதம் ஏற்பட்டு விட்டால் போதும்; நகரே நடுங்கும் அளவுக்கு, ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விடுவர். மாற்று கருத்து உள்ள கட்சியினரோ அல்லது வேறு யாரோ ஒருவர் இந்த தகாத செயலை செய்திருப்பர். அதற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்?கட்சித் தலைமை மறியல் போராட்டம் அறிவித்து விட்டால், ஆயிரக்கணக்கில் கூடிவிடுவர். அந்தக் கூட்டத்தை தங்கள் கட்சி, 'டிவி'யில் பிரம்மாண்டமாக காட்டி பெருமை அடித்துக் கொள்வர். இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி வருவதே ஒரு கேலிக்கூத்து தான்.

ஏனெனில், போராட்டக்காரர்களை, பகல், 12:00 மணி அளவில் கைது செய்தால், பஸ்களில் ஏற்றி ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைப்பர். மதிய உணவு தயிர் சாதம், சாம்பார் சாதம் என்று ஏதோ வந்து விடும்; பசியும் தீர்ந்தது. மாலை, 5:00 மணி அளவில் அனைவரையும் வீட்டிற்கு போகச் சொல்லி விட்டு விடுவர். ஏதோ செலவில்லாமல் ஒரு நாள் சுற்றுலா போன்று ஆகிவிடுகிறது. ஆகையால், ஆயிரக்கணக்கில் கூடி கலைகின்றனர்.மறியலில் கைது செய்தால் கட்டாயம், 15 நாள், 'ரிமாண்ட்' என்று இரண்டு தடவை உள்ளே போடட்டும்; அதன்பின், மறியல் என்றால் எத்தனை பேர் வருவர் என்று பார்க்கலாம். கட்சி யினர் காணாமற் போய்விடுவது உறுதி. ஆகையால், கடுமையான தண்டனை சட்டம் தான் இதற்கு வழி. அரசியல் குறுக்கீடுகளை நீதிபதிகள் கண்டிக்க வேண்டும்.மக்கள் மவுனமாக வேடிக்கை பார்க்காமல் சுதாரித்துக் கொண்டு, தவறான காரியங்களுக்கு ஆதரவு தராதது மட்டுமல்ல; சரியான முறையில் எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டும். சட்டங்கள் செயல்படட்டும்...
இ-மெயில்: ssrmaduraiymail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

Advertisement