Advertisement

ஃபுலே பார்வையில் கல்வி

பம்பாய் மாகாணத்திலுள்ள சொற்ப அரசுப் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் கல்வியின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உபயோகமுள்ள கல்வி போதிக்கப்படவில்லை. இந்தக் கல்வி முறையை மேம்படுத்தினால், சமூகத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே இப்போதுள்ள ஆசிரிய நியமன முறையையும் பாடத்திட்டத்தையும் முழுவதாகத் திருத்தியமைக்கவேண்டும்.(அ) இப்போது ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் வேலைபார்க்கும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்கள்தான். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளவர்கள். மற்றவர்களுக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. அவர்களுடைய மாதச் சம்பளம் பத்து ரூபாய்க்குமேல் இல்லை. இலக்குகள் எதையும் அவர்கள் பூர்த்தி செய்வதுமில்லை. அவர்களுக்குத் தற்போதைய நாட்டு நடப்பைப்பற்றி ஒன்றும் தெரியாது. இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்கள் தேவையில்லாத பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்கிறார்கள். தமது முன்னோர்களின் குலத்தொழிலில் இருந்து அல்லது வேறு கடினமான சுதந்தரமான பணிகளில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அவர்கள் அரசு பணியைப் பெற முனைகிறார்கள். ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை விவசாயக் குடும்பங்களிலிருந்தே தேர்ந்தெடுத்துப் பயிற்சியளிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் மாணவர்களுடன் தயக்கமின்றிப் பழகுவார்கள். மாணவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள்வார்கள். மத ஆசார எண்ணங்களினால் பீடிக்கப்பட்ட பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தால், அவர்கள் மாணவர்களிடமிருந்துத் தள்ளியே நிற்பார்கள். பிராமணரல்லாத ஆசிரியர்களை நியமிப்பதில் வேறொரு நன்மையுண்டு. பாமர மக்கள் இவர்கள் சொல்வதைக்கேட்டு நடப்பார்கள். தேவைப்பட்டால் அவர்கள் கலப்பையை எடுத்து உழுவதற்கோ உளியைப் பிடித்து தச்சுவேலை செய்வதற்கோ தயங்கமாட்டார்கள். சமூகத்தின் அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். இந்த ஆசிரியர்களுக்கு வழக்கமான விஷயங்களைத் தவிர விவசாயம், சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைப்பற்றியும் கற்பிக்கவேண்டும். கற்பிப்பதில் மோசமாக இருக்கும் பயிற்சிபெறாத ஆசிரியர்களுக்குப் பதிலாக திறமையுள்ள, பயிற்சிபெற்ற ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். திறமையுள்ள ஆசிரியர்கள் கிடைப்பதற்கும் அவர்களுடைய நிலைமையை மேம்படுத்துவதற்கும், அவர்களுடைய சம்பளம் பன்னிரண்டு ரூபாய்க்குக் குறையாமல் இருக்கவேண்டும். பெரிய கிராமங்களில் அது பதினைந்து முதல் இருபது ரூபாயாக இருக்கவேண்டும். ஆசிரியர் வேலையைத் தவிர அவர்களைக் கிராமக் கணக்கு வழக்குகளைப் பார்க்கவோ ஆவணப் பதிவாளர்களாகவோ கிராம அஞ்சல் அதிகாரிகளாகவோ பத்திர விற்பனையாளர்களாகவோ நியமித்தால் அந்தக் கிராமத்தில் அவர்களுடைய அந்தஸ்து உயரும். கிராம மக்களும் தங்களுடைய தேவைகளுக்கு அவர்களை நாடிச் செல்வார்கள். அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம்.(ஆ) மாணவர்களுடைய பாடத்திட்டத்தில் எழுதுவது, வாசிப்பது, கணிதம் ஆகிய விஷயங்களையும் பொதுவரலாறு, பூகோளம், இலக்கணம், விவசாயம், சுத்தம், சுகாதாரம் நன்னடத்தை ஆகியவற்றையும் உட்படுத்தவேண்டும். கிராமப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களைவிடக் குறைவாக இருக்கலாம்; ஆனால், அவை மாணவர்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கவேண்டும். விவசாயத்தைக் கற்பிக்கும்போது மாணவர்களை ஒரு மாதிரிப் பண்ணைக்கு (Mணிஞீஞுடூ ஊச்ணூட்) கூட்டிச் சென்று நேரடியாகப் பாடம் கற்பிப்பது பயனுள்ளதாக இருக்கும். இப்போது உபயோகிக்கப்படும் பாடப்புத்தகங்கள் பழைய விஷயங்களையே கற்பிப்பதால் அவற்றைத் திருத்தி எழுதவேண்டும். தொழில்நுட்பமும் உபயோகமுள்ள வேறு சில விஷயங்களும் கற்பிக்கப்படவேண்டும்.(இ) ஆரம்பக் கல்விக்கூடங்களை மேற்பார்வை செய்வதிலும் குறைபாடுகளிருக்கின்றன. உதவி ஆய்வாளர்கள் வருடத்துக்கொரு முறை மட்டும் பள்ளிக்குச் சென்று சோதனை செய்வதால் ஒரு பலனும் இல்லை. அனைத்துப் பள்ளிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது முன்னறிவிப்பில்லாமல் சென்று சோதனை செய்யவேண்டும். இந்தச் சோதனைகளைச் செய்ய கிராம அல்லது மாவட்ட அதிகாரிகளை மட்டும் நம்பியிருக்கமுடியாது. ஏனெனில், அவர்களுக்கு ஏற்கெனவே தலைக்குமேல் வேலையிருக்கிறது. ஆகவே, இந்த ஆய்வுக்கு நேரம் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அவர்களுடைய பரிசோதனை மேலேழுந்தவாரியாகவும் அரைகுறையாகவும்தான் இருக்கும். ஆகவே, அவ்வப்போது ஒரு ஐரோப்பிய ஆய்வாளர் இந்தப் பள்ளிகளுக்குச் சென்று வருவது நல்லது. இதன்மூலம் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.(ஈ) ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும். அதற்காகக் கீழ்க்கண்டவற்றைச் செய்யவேண்டும்.(1) பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் அல்லது பயிற்சி பெற்றவர்களை நியமித்து இப்போதைய பாரம்பரியப் பள்ளிகளுக்குக் கூடுதல் உதவித் தொகையைக் கொடுக்கவேண்டும்.(2) அந்தந்த இடங்களில் வசூலிக்கப்படும் உள்ளூர் வரிகளிலிருந்து பாதித் தொகையை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கலாம்.(3) நகராட்சிகள் தங்களுடைய அதிகாரவரம்பிலுள்ள ஆரம்பப் பள்ளிகளை தாங்களே நடத்தவேண்டுமென்று ஒரு சட்டம் இயற்றவேண்டும்.(4) மத்திய, மாநில அரசுகள் தாரளமாக உதவித் தொகையை ஒதுக்கவேண்டும்.உயர்கல்வி: உயர்கல்விக்குப் பெருமளவில் தொகை ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் பாமர மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்ற புகார் பல நாட்களையே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஓரளவுக்கு இது உண்மைதான்.ஆனால் உயர்கல்வி பெற்ற யாரும் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இருப்பினும் உயர்கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் தொகைநிறுத்தப்படவேண்டுமென மக்கள் நலவிரும்பிகள் யாருமே சொல்லமாட்டார்கள். சமூகத்தின் ஒரு பகுதி மக்கள் பின்தங்கியிருப்பதால், அவர்களுடைய முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடவேண்டுமென்பதே மக்களுடைய வேண்டுகோள். இந்தியாவில் கல்வி இன்னமும் ஆரம்பநிலையில் தானிருக்கிறது. ஆகவே, அரசு உயர் கல்விக்காக ஒதுக்கும் தொகையை நிறுத்திவிட்டால் அது மக்களிடையே கல்வியறிவு பரவுவதைக் கடுமையாக பாதிக்கும். மேல்தட்டைச் சேர்ந்த பிராமணர்கள், செல்வந்தர்கள் ஆகியோரிடையே கல்வி மீது ஆர்வம் உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே இவர்களுடைய கல்விக்கு அரசு தரும் உதவிகளைப் படிப்படியாக விலக்கிக்கொண்டுவிடலாம். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்களிடையே உயர் கல்வியறிவு இனியும் முழுவதாகப் பரவவில்லை. எனவே அவர்களுக்காகச் செலவிடப்படும் தொகையை நிறுத்தினால் அந்த மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். அந்த சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கெதிராக உபயோகமற்ற பள்ளிகளுக்குச் செல்வார்கள். இதனால் கல்வி முறையே பாதிக்கப்படும். அதேசமயம் கல்வியைத் தனியார்களிடம் ஒப்படைக்கவும்முடியாது. இனிவரும் பல ஆண்டுகளுக்கு அது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பில்தான் இருக்கவேண்டும். உயர் கல்வியும் ஆரம்பக் கல்வியும் அரசின் கவனிப்பிலேயே இருப்பதுதான் மக்களுக்கு நல்லது.கல்வித் துறையிலிருந்து அரசு பின்வாங்கினால் மக்களிடையே கல்வியறிவை எளிதில் பரப்பமுடியாது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் அவர்கள் பெறும் கல்வி நடுநிலைமையோடு இருக்கவேண்டும். கல்வியைத் தனியார்களுக்கு விட்டுக்கொடுத்தால் அது தனது நடுநிலைமையை இழந்துவிடும். மேலும், கல்விக்கான பண ஒதுக்கீட்டை நிறுத்தினால் செல்வந்தர்களின் குடும்பங்கள் தன்னம்பிக்கையுடன் ஓரளவுக்குத் தங்கள் சொந்தக் காலிலேயே நிற்க முன்வருவார்கள் என்பது உண்மைதான். அதேசமயம், கல்விமுறை சீரழிந்துபோகும். மேல் தட்டு மக்களின் தன்னம்பிக்கை இந்தப் பின்னடைவைச் சரிசெய்யப் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இனி, படிப்பறிவு பெற்ற இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளைப்பற்றிப் பேசுவோம். இப்போதும் கல்வியறிவு பெற்றவர்கள் பெரும்பாலும் பிராமண மற்றறும் உயர் சாதிக்காரர்கள் அரசு வேலைக்குப் போகத்தான் விரும்புகிறார்கள். ஆனால் படிப்பறிவு பெற்ற அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது. அவர்கள் பெற்ற கல்வி தொழில் நுட்பம் சார்ந்ததாகவோ, நடைமுறைக்குப் பயன்படும்படியாகவோ இல்லை என்பதால் அவர்கள் வேறு வேலைக்குப் போகவும்முடியாது. இதன் காரணமாகத்தான் கல்வியறிவு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்ற புகார் எழுந்திருக்கிறது. ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்தப் புகார் சரியெனத் தோன்றும். ஆனால், கல்வியறிவு பெற்றவர்களுக்காக வேறு பல வேலை வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்தியாவின் மாபெரும் பரப்பை ஒப்பிடும்போது, கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவுதான். ஆனால், கூடிய விரைவிலேயே வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை நூறு மடங்கு அதிகரிக்கலாம். ஆகவே படித்தவர்கள் அரசு வேலையை மட்டும் நம்பியிராமல் வேறு பல வேலைகளுக்கும் செல்லலாம். முடிவாக, பெண்களின் ஆரம்பக் கல்விக்குக் கூடுதல் தொகையை ஒதுக்கவேண்டுமெனக் கல்வி கமிஷனைக் கேட்டுக் கொள்கிறேன்.=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement