Advertisement

ஜோதிராவ் ஃபுலே

சையது அகமது கான் முஸ்லிம்களை நவீனமயமாக்குவதற்காகப் பாடுபட்டதற்குப் பின்னால் இந்துக்களுடனான ஒருவகையான போட்டி மனப்பான்மை காரணமாக இருந்தது. இந்துக்கள் பெருமளவில் மேலைநாட்டுக் கல்வியைப் பயின்று பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களில் நல்ல வேலைகளில் சேர்ந்திருந்தனர். நாம் அடுத்ததாக பார்க்கப்போகும் சிற்பியோ, பிரிட்டிஷ் காலகட்டத்தில் பொதுவாக இந்துக்கள் பெற்ற மேலாதிக்கத்தை அல்லாமல், இந்துக்களில் மேல் சாதியினரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் அதிக கவனம் செலுத்தினார்.ஜோதிராவ் ஃபுலே 1827ல் அவருடைய சொந்த ஊரான மஹாராஷ்டிரத்தில் கிழக்கிந்திய கம்பெனி கால் பதித்துச் சில ஆண்டுகள் கழித்துப் பிறந்தார். பரம்பரை பரம்பரையாக பழங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டுவந்த 'மாலி' சாதியில் பிறந்தார். அன்றைய பேஷ்வாக்கள் இவருடைய முன்னோர்களுக்கு மான்யமாகக் கொடுத்திருந்த முப்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் அரசவைக்குத் தேவையான பூக்களை உற்பத்தி செய்து கொடுத்துவந்தனர். அப்படியாக ஃபுலே குடும்பத்தினரை ஏழைகள் எனச் சொல்லமுடியாது. அதேசமயம் அவர்கள் பணக்காரர்களுமல்ல.ஜோதிராவ் (இன்று பூனே என்றழைக்கப்படும்) பூனாவில் ஸ்காட் கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்திய பள்ளியில் படித்தார். அங்கு தீண்டத்தகாதவர்கள் உட்பட அனைத்து சாதியினருடனும் ஒன்றாகப் படித்தார். அகமது நகரில் அமெரிக்க மிஷனரிகள் பெண்களுக்காக நடத்தி வந்த ஒரு பள்ளிக்கூடத்தை இளம் வயதில் சென்று பார்த்தார். இது அவர் மனத்தில் ஓர் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தாழ்ந்த சாதிப் பெண்களுக்காக தானே ஒரு பள்ளியைத் தொடங்க இந்த அனுபவங்கள் அவரைத் தூண்டின. அவருக்கு அப்போது வெறும் இருபது வயதுதான் ஆகியிருந்தது. பின்னர் வேறு சில பள்ளிகளையும் தொடங்கினார். அந்தப் பள்ளிகளில் 'மாங்சூ, 'மகர்' என்ற இரு தீண்டத்தகாத சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். சுய கல்வி பெற்ற ஜோதிராவ், இளம் வயதிலேயே அமெரிக்கச் சிந்தனையாளர் தாமஸ் பெய்னின் எண்ணங்களால் கவரப்பட்டதாகத் தெரிகிறது. சாதியின் பெயரால் மக்களிடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி 1855ல் ஒரு நாடகம் எழுதினார் (அன்று புத்தகப் பதிப்பு, வெளியீட்டுத் தொழில் ஆகியவை பெரிதும் பிராமண ஆதிக்கத்திலேயே இருந்ததால் இந்த நாடகம் ஜோதிராவின் மரணத்துக்கு பின்தான் வெளிவந்தது).இதனிடையில் இந்தியாவின் கீழ்ச்சாதிக்காரர்களுடைய அடிமைத்தளையை அறுத்தெறியவும் பிராமணர்களின் ஆதிக்கத்தைத் தகர்க்கவும் பகுத்தறிவு அணுகுமுறைகொண்ட மேலைநாட்டுக் கல்வி முக்கிய பங்காற்ற முடியுமென்று ஃபுலே உறுதியாக நம்பினார். ஃபுலேயின் ஆசிரியர்கள் அவரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சி செய்தாலும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ராம்மோகன் ராயைப்போலவே மிஷனரிகளுடனான நெருங்கிய தொடர்பு இவரையும் பழைமைவாத இந்து மதக் கொள்கைகளை விமர்சனபூர்வமாக அணுகவைத்தது. மேலும் ராம்மோகன் ராயைப்போலவே இவரும் 'தெய்வம் ஒன்றே, அவர்தான் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வாழும் நீதியைக் கற்றுக் கொடுக்கிறார்' என்ற கொள்கையை உடையவராக இருந்தார்.1860களிலிருந்து ஃபுலே பள்ளிகள் நடத்துவதிலிருந்து விலகி விதவை மறுமணம் போன்ற சமூகச் சீர்திருத்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதே சமயம் பூனாவைச் சுற்றிலும் இருந்த தொழிற்சாலைகளுக்கு கனரகப் பொருட்களை விற்றுவந்தார். சாலைகள், பாலங்கள் அமைக்கும் கான்டிராக்டராகவும் இருந்தார். இவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தை சமூக சேவைக்காகச் செலவழித்தார். 1870 அளவில், ஃபுலே மகாராஷ்டிராவில் முக்கியப் பிரமுகராக மாறிவிட்டிருந்தார். இந்தியாவின் மேற்குப்பகுதியில் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மிக விஷயங்களில் பிராமணர்களுக்கு இருந்த ஆதிக்கத்தை எதிர்த்துப் பல படைப்புகளை வெளியிட்டார். இது அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. இந்தப் படைப்புகளில் சில ஒரு சமூகச் சீர்திருத்தவாதிக்கும் அவருடைய எதிராளிக்குமிடையில் நடந்த உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளன. இந்து புராண, இதிகாசங்களை புதிய கோணத்தில் மறு வாசிப்பு செய்து எழுதினார். பிராமணர்கள் எப்போதும் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் ஏமாற்றிப் பிழைப்பவர்கள், அவர்களை அடக்கி ஆள்பவர்கள் என்றெல்லாம் வர்ணித்தார். அதைப்போலவே, ஃபுலே சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றையும் புதிய கோணத்தில் எழுதினார். வரலாற்றறிஞர்கள் சொல்வதுபோல சிவாஜியின் வெற்றிக்கு பிராமண அமைச்சர்களும் ஆலோசகர்களும் காரணமல்ல; மாறாக விவசாயத் தொழிலாளிகள அடங்கிய ராணுவமே காரணம் என்று எழுதினார். 1873ல் ஃபுலே 'சத்ய சோதக் சமாஜ்' (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) என்ற அமைப்பை நிறுவினார். இதில் உறுப்பினராக விரும்பும் ஒருவருக்கு வேறு ஐம்பது பேரின் சாட்சியும் ஆதரவும் இருக்கவேண்டும். பொதுவாக அன்றைய காலகட்டத்து சீர்திருத்தவாதிகள் சொன்னதுபோலவே, மது அருந்தக்கூடாது என்பதுபோன்ற விதிகளும் உண்டு. வேறு சில நிபந்தனைகள் மிகவும் முற்போக்கானவையாக இருந்தன. உதாரணமாக, இந்த சமாஜத்தின் உறுப்பினர்கள் பெண்களிடையேயும் தாழ்ந்த சாதிக்காரர்களிடையேயும் கல்வியறிவைப் பரப்பவேண்டும் என்று ஒரு விதி இடம்பெற்றிருந்தது. பிராமண புரோகிதர்கள் இல்லாமலேயே நடத்தப்பட்ட திருமணங்களை இந்த சமாஜம் ஊக்குவித்தது. ஃபுலேவின் சாதனைகளையும் அந்தஸ்தையும் அங்கீகரிக்கும் வகையில் பூனா நகராட்சியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்குப் பிரதிபலனாக ஃபுலே, இந்தியாவின் பல்வேறு அதிகார மையங்களிடையே ஒருவித சமநிலையைக்கொண்டுவர முயன்ற பிரிட்டிஷ் அரசை நேச சக்தியாகப் பார்த்தார். விவசாயத்தில் ஈடுபட்ட சாதிகள்தான் இந்தியச் சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகள், அவர்கள்தான் இந்திய வரலாற்றின் அச்சாணிகள். பிராமணர்களுக்கு இதில் ஒரு பங்குமில்லை என்ற உண்மைகளை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொள்ளச் செய்துவிட முடியும் என்று ஃபுலே நம்பினார்.ஃபுலேவின் யோசனைக்கிணங்க சத்ய சோதக் சமாஜ் சூத்திரர்கள் என்றழைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை விளைவிக்கக்கூடிய கொள்கைகளை அரசு ஊக்குவிக்கவேண்டுமென்று பிரசாரம் நடத்தியது. அந்த சமாஜத்தின் முதல் ஆண்டறிக்கை குறிப்பிடுவதுபோல் 'பிராமணர்கள், பட்கள், ஜோஷிகள், புரோகிதர்கள் மற்றும் அதுபோன்ற பிரிவினரின் பிடியிலிருந்து சூத்திரர்களை விடுவிக்கும் நோக்கத்துடனே இந்த சமாஜம் தொடங்கப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக இந்த பிராமணர்கள் தந்திரமாக எழுதப்பட்ட புத்தகங்களை வைத்து சூத்திரர்களை ஏமாற்றிவந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி சூத்திரர்கள் நல்ல கல்வியையும் அறிவுரைகளையும் பெற்றுத் தங்களுடைய உரிமைகளைப்பற்றி முழுவதாக அறிந்துகொள்ளவேண்டும். மதத்தில் இருந்தும் சுய லாபத்தை மனத்தில் வைத்து பிராமணர்கள் உருவாக்கியுள்ள பொய்யான புத்தகங்களில் இருந்தும் விடுபடவேண்டும் என்ற நோக்கங்களுடன்தான் இந்த சமாஜம் தொடங்கப்பட்டது.' தந்திரசாலிகளான ஆரியர்களிடமிருந்து (மேல் சாதியினர்) ஒன்றும் அறியாத சூத்திரர்களை விடுவிக்கும் தலையாய பொறுப்பு பிரிட்டிஷாருக்கு உண்டு என்று ஃபுலே நம்பினார். ஜோதிராவ் ஃபுலே ஒரு சிறந்த சமூகப் போராளியாகவும் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். 1890ல் இறப்பதற்கு முன்பாக ஏராளமான கட்டுரைகள், பாடல்கள், நாடோடிப் பாட்டுக்கள், நாடகங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். அதில் முதலாவது ஆட்சியாளர்களின் மொழியிலும் இரண்டாவது அவரது தாய்மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டுரையின் தொகுப்பாசிரியரான ஜி.பி.தேஷ்பாண்டே, சூஜோதிராவின் மராத்திய உரைநடையின் வலிமையையும் கனத்தையும் மொழிபெயர்ப்பது சாத்தியமே இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மிகவும் தன்னடக்கமான கூற்றே. தேஷ் பண்டே மற்றும் சக ஆசிரியர்களின் மூலம் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் ஜோதிராவின் உரைநடையின் வலிமையும் அடர்த்தியும் அப்படியொன்றும் கை நழுவிப் போயிருக்கவில்லை. =========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement