Advertisement

சையது அகமது கான்

சையது அகமது கான் தனது இளம் வயதில் ராம்மோகன் ராயை மொகலாய அரசரின் தர்பாரில் பலமுறை சந்தித்திருக்கிறார் என்று அகமது கானின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிட்டுள்ளார். இது நடந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் கானின் குடும்பமும் தில்லி மொகலாயச் சக்கரவர்த்தியின் குடும்பமும் மிக நெருக்கமாக இருந்தன. அதே சக்கரவர்த்தியின் கீழேதான் ராம்மோகன் ராயும் பணிபுரிந்து வந்தார். இந்தச் சந்திப்புகள் 1828லோ 1829லோ நடந்திருக்கலாம். அதாவது, சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க ராய் லண்டன் போகும்முன் அவரைச் சந்திக்க வந்தபோது ராயை கான் சந்தித்திருக்கலாம். இந்து சீர்திருத்தவாதியான ராம்மோகன் ராயுடனான இத்தகைய (மேலோட்டமான) சந்திப்புகள் இந்திய இஸ்லாமின் முதல் சீர்திருத்தவாதியான சையது கான்மீது செல்வாக்குச் செலுத்தியிருக்குமா? சுவாரசியமான யூகம்தான்.சையது அகமது கான் 1817ல் தில்லியில் பிறந்தார். அவருடைய தாத்தா ஒரு மொகலாயச் சக்கரவர்த்தியின் அமைச்சராகக் குறுகிய காலத்துக்குப் பணியாற்றியவர். இவருடைய குடும்பம் பழைமைவாதத்தில் ஊறியது அல்ல. இசைக் கலைஞர்களுக்கும் சூஃபிகளுக்கும் புரவலராக இருந்தது. ஒருவேளை மது அருந்துவதையும்கூட அவர்கள் அனுமதித்திருக்கலாம். கானின் முன்னோர்களில் சிலர் சிறந்த கணிதமேதைகளாகத் திகழ்ந்தனர்.ஆரம்பத்தில் தன் தாயிடமிருந்து கற்ற சையது அகமது பின்னர் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அந்தக் காலத்தில் அரசவையிலும் நகரத்திலும் பேசப்பட்டு வந்த உருது மொழியில் கற்றார். அரபு, பாரசீக மொழிகளும் கற்றார். தனது இருபதாம் வயதில், குடும்ப வழக்கத்துக்கு மாறாக சையது அகமது கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மொகலாய அரசர்களின் விசுவாசிகளாக இருந்த இவருடைய குடும்பத்தினருக்கு இவர் இப்படிச் செய்தது பிடிக்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் யார் கைக்கு அதிகாரம் சென்று சேரும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்ததால் சையது அகமது கிழக்கு இந்திய கம்பெனியில் வேலை தேடிக்கொண்டார். முதலில் குமாஸ்தாவாகவும், பின்னர் நீதிபதியாகவும் அவர் வட இந்தியாவில் பல இடங்களில் பணிபுரிந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரப் படிகளில் நிதானமாக மேலேறினார். ராம்மோகன் ராயைப்போலவே சையது கானும் ஆங்கிலலேயர்களுடன் வைத்திருந்த நட்புறவின் மூலமாக ஆங்கில மொழியில் புலமை பெற்றார். ராயைப்போலவே பல மொழிகளில் கட்டுரைகளை எழுதினார். அவர் முதலில் எழுதிய புத்தகம் தில்லியின் அகழாய்வு வரலாற்றைப்பற்றியதாக இருந்தது. அடுத்தாற்போல, ஆரம்பகட்ட இஸ்லாமின் கருத்துகளில் இருந்த முரண்பாடுகளைப்பற்றிய ஆய்வாக இருந்தது. மொகலாய மன்னர் அக்பரின் ஆட்சியைப்பற்றி அபுல் ஃபஸல் எழுதிய அற்புதப் படைப்பான 'அயினி அக்பரி' நூலை வெளியிட்டார். 1857ம் ஆண்டு சிப்பாய்ப் புரட்சியின்போது சையது அகமது அன்றைய உ.பி.யிலிருந்த பிஜ்னோரில் பணிபுரிந்து வந்தார். அமைதியான ஆனால் அழுத்தமான முறையில் எஜமானர்களின் பக்கம் சேர்ந்து செயல்பட்டார். பல வெள்ளையரின் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல உதவினார். இந்தப் புரட்சி அவருக்குக் கவலையை அளித்தது. முக்கியமாக, சக முஸ்லிம்கள் மீது இந்தப் புரட்சியின் தாக்கம் என்னவாக இருக்குமென்பதை எண்ணிக் கவலைப்பட்டார். அவர் எழுதி வெளியிட்ட ஒரு புத்தகத்தில் இந்தப் புரட்சியை பிரிட்டிஷாருக்கு எதிராக இருந்த முஸ்லிம்கள்தான் திட்டமிட்டு வழிநடத்திச் சென்றனர் என்ற கருத்தை மறுத்தார். முஸ்லிம்களைப்போலவே இந்துக்களும் பெருமளவில் இந்தப் புரட்சியில் பங்கெடுத்ததையும், இந்துக்களைவிட அதிக அளவில் முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்ததையும் சுட்டிக்காட்டினார். அதைப்போலவே புரட்சியாளர்களை ரஷ்யா அல்லது பாரசீகம்தான் தூண்டிவிட்டதென்று சொல்லப்பட்டதையும் மறுத்தார். இந்தியர்களின் இந்த எதிர்ப்பு ஒரு கலகமோ பிரிட்டிஷ் அரசை ஒழிக்கவேண்டுமென்ற முடிவுடன் நடத்தப்பட்ட போராட்டமோ அல்ல என்று அவர் கருதினார். மாறாக, கிறிஸ்துவ பாதிரிகளின் அகம்பாவ மனோபாவம், சட்டமன்றத்தில் இந்தியர்களுக்கு இடம்தரப்படாத நிலை ஆகியவற்றை எதிர்த்து நடத்தப்பட்டதுதான் இந்தப் புரட்சி என்பதுதான் சையது அகமதின் வாதமாக இருந்தது.1857 புரட்சியைப்பற்றிய புத்தகத்தைத் தொடர்ந்து சையது அகமது மற்றுமொரு நூலையும் எழுதி வெளியிட்டார். 'இந்தியாவின் விசுவாசமுள்ள முகமதியர்கள்' (லாயல் மொகமதன்ஸ் ஆஃப் இந்தியா) என்ற தலைப்பே அந்தப் புத்தகத்தின் உள்ளடகத்தைத் தெளிவாகக் காட்டியது. புரட்சி காலத்தில் முஸ்லிம் அதிகாரிகளும் சாதாரண முஸ்லிம்களும் எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்கள் என்பதைப் பட்டியலிட்டது இந்த நூல். சையது அகமதின் அபிப்பிராயத்தில் முஸ்லிம்கள் தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நவீனக் கல்விதான் உதவும். முஸ்லிம்கள் பழைமை விரும்பிகள். அரசுக்கு எதிரானவர்கள் என்ற தவறான எண்ணங்களைப்போக்க இந்தக் கல்வி உதவும். அதுவே பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இந்துக்கள் முன்னேறிய மாதிரியே முஸ்லிம்களும் முன்னேற உதவும் என்று எடுத்துச் சொன்னார். 1864ம் ஆண்டில் சையது அகமது, சயிண்டிஃபிக் சொசைட்டி ஃபார் முஸ்லிம்ஸ் என்பதை நிறுவினார். இதன் உறுப்பினர்கள் அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய விஷயங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தும் படித்தனர். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்த சொஸைட்டி ஒரு பத்திரிகையையும் தொடங்கியது. சையது அகமதுதான் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அதிலிருந்த பெரும்பாலான கட்டுரைகளையும் அவரேதான் எழுதினார். கானின் மேற்சொன்ன செயல்பாடுகள் அனைத்தும் ராம்மோகன் ராயின் செயல்பாடுகளை அப்படியே ஒத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு எதேச்சையான சம்பவம் எனச் சொல்லிவிடமுடியாது. தன்னுடைய சிறு வயதில் ராயைச் சந்தித்திருக்கிறார் என்று அகமதுதின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அல்டாஃப் ஹுஸைன் ஹாலி சொல்கிறார்: '1857 புரட்சிக்குப் பிறகு முஸ்லிம்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று மேல்நாட்டு கல்வி; இரண்டாவது பிரிட்டிஷாருடன் நெருங்கிப் பழகி அவர்களை நன்கு புரிந்துகொள்ளும் திறமை. இவையிரண்டும் இல்லையேல் முஸ்லிம்கள் முன்னேறுவதும் மரியாதையைத் தக்கவைத்துக்கொள்வதும் கடினம். இந்தியாவில் அவர்களுக்கு உரிய மரியாதையும் மதிப்பும் கிடைக்காது.' 1925ம் ஆண்டு டிசம்பரில் ராம்மோகன் ராயும் இதே கருத்தைத்தான் வெளிப்படுத்தினார். 'நாம் எவ்வளவுக்கெவ்வளவு ஐரோப்பியர்களுடன் நெருங்கிப் பழகுகிறேமோ அவ்வளவுக்கவ்வளவு இலக்கிய, சமூக, அரசியல்ரீதியாக நம்மால் முன்னேற முடியும். மேற்சொன்னபடிச் செய்து தற்போது நல்ல நிலைமையிலிருப்பவர்களுடன் துரதிஷ்டவசமாக அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்காதவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் சொல்வது தெளிவாக விளங்கும்...”0தங்கள் வாரிசுகளை அங்கு படிக்க அனுப்பவேண்டுமென முஸ்லிம் குடும்பங்களிடம் சையது அகமது வேண்டுகோள் விடுத்தார். 1893ம் ஆண்டில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தில் கல்வியறிவைப் பொறுத்தவரை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறதென எச்சரித்தார். உதாரணமாக வங்காளத்தின் மக்கள் தொகையில் 45 சதவிகிதம் பேர் முஸ்லிம்களாக இருந்தாலும் முப்பது பட்டதாரிகளில் ஒருவர்தான் முஸ்லீமாக இருந்தார். அதேபோல மதராஸ் மாகாணத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 7 சதவிகிதமாக இருந்தாலும் அவர்களுள் ஒரு சதவிகிதம் பேர்தான் பட்டதாரிகளாக இருந்தனர். சையது அகமதின் முயற்சிகளின் பலனாக அவருடைய சொந்த உ.பி. மாகாணத்தில் நிலைமை வித்தியாசமாக இருந்தது. அங்கு மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 11.2 சதவிகிதமாக இருந்தாலும் மொத்தம் பட்டதாரிகளில் 17.25 சதவிகிதம் பேர் முஸ்லிம்களாக இருந்தனர். விக்டோரியா மகாராணியின் 75வது ஆண்டு கொண்டாட்டம் நடந்த 1897ல் சையது கான் காலமானார். 1920ல் அவர் நிறுவிய கல்லூரியின் பெயர் 'அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்' என மாற்றப்பட்டது. 90 வருடங்களுக்கு மேலாக ஆன நிலையிலும் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களின் விருப்பத்துக்குரிய பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இப்போது அதில் மருத்துவம், சட்டம், பொறியியல் எனப் பலதுறைகள் உள்ளன. அதன் வரலாற்றுத்துறை அறிஞர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுவிட்டது.
=========நவீன இந்தியாவின் சிற்பிகள்தொகுப்பாசிரியர் : ராமச்சந்திர குஹாதமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 528 விலை ரூ 400இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/9789351351818.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement