Advertisement

மக்கள் நல திட்டங்களும், முட்டுக்கட்டைகளும்

மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. காலதாமதமின்றி அவற்றை நிறைவேற்ற ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால், சகட்டு மேனிக்கு மத்திய அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதே, தங்கள் கொள்கை என்னும் பாணியில் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

இதில் நகைப்புக்குரிய விஷயம், கடந்த, 65 ஆண்டுகளாக தான் செய்யத் தவறிய கடமைகளை, தற்போதைய பா.ஜ., அரசு ஓராண்டிற்குள் செய்து முடிக்கத் தவறிவிட்டது என்று, மனசாட்சியை அடகு வைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவது தான்.இந்தியப் பொருளாதார சீரழிவுக்கு முக்கிய காரணம், முந்தைய காங்கிரஸ் அரசால், கிராமங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது தான். இந்த உண்மையை புரிந்து கொண்ட, பா.ஜ., அரசு நகரங்களையும், கிராமங்களையும் ஒரு சேர முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. ரயில் தடங்களை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்துதல், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு உதவும், 'முத்ரா வங்கித் திட்டம்' கிராமங்களை ஒருங்கிணைத்து, குழுமங்களாக அமைத்து, நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தல் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை, குறிப்பிட்ட கால அளவுக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இம்மூன்று திட்டங்களின் நோக்கம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில்லாமல் போனதால், கோடிக்கணக்கில் கிராமப்புற மக்கள், வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதை தடுப்பது தான்.

இந்தியாவின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தற்போதுள்ள ரயில் தடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கும், பெருகி வரும் மக்கள் கூட்டத்திற்கும், வேலை வாய்ப்பை வழங்குவதற்கும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது.ஆனால், பா.ஜ., அரசின் இம்முயற்சிக்கு, அ.தி.மு.க., போன்ற ஒரு சில கட்சிகள் தவிர்த்து, தேசிய கட்சியான காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும், மாநிலக் கட்சிகளில் சிலவும், கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.பெரிய தொழில் நிறுவனங்களாயினும், சிறிய தொழில் நிறுவனங்களாயினும் தொழிற்சாலைகள் நிறுவவும், உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தரவும் நிலம் தேவைப்படுகிறது. அதற்கு அரசுக்குச் சொந்தமான நிலங்கள் இல்லாத இடங்களில், தனியார் நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கி, பொது நலனுக்காக அந்நிலங்களை கையகப்படுத்துவதை தவிர, மத்திய, மாநில அரசுகளுக்கு வேறு வழியில்லை.
ஆனால், பா.ஜ., அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் காட்டி வரும் கடுமையான எதிர்ப்பு, உண்மையிலேயே அக்கட்சிகள் விவசாயிகள் நலனில் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடா அல்லது அக்கட்சிகளின் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலமா என்பது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பின்றி இருக்கும், பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதத்தில், அண்மையில், 'முத்ரா வங்கி திட்டம்' என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்திட்டத்தையும் கண்ணை மூடிக் கொண்டு, தகுந்த காரணமின்றி எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றன. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதால் மாத்திரமே, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் துவங்கும். இதை மனதில் கொண்டே பிரதமர் மோடி, 'முத்ரா வங்கி' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் தான், திட்டத்தின் பலன்கள் பயனாளிகளுக்கு சென்றடையும். விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்களை இனம் கண்டு, அவற்றைப் பட்டியலிட்டு, ஊரக தொழில் வளர்ச்சி துறையுடன் இணைந்து முத்ரா வங்கி செயல்பட்டால், இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அமோக வெற்றி பெறும்.

தொழில் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பவை மின்சாரமும், தண்ணீரும். இவ்விரண்டும் தடையின்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெற தேவைப்படும் உபகரணங்களை அரசு, இத்தொழில் நிறுவனங்களுக்கு அமைத்துத் தர வேண்டும்.இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை அரசுத் துறைகள் அனைத்தும், பணக்காரர்களுக்கு பெரிய அளவில் உதவும் விதத்திலும், ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு அவ்வளவாக உதவாத விதத்திலும் செயல்பட்டு வருவதைத் தான் காண முடிகிறது.

இந்நிலைக்கு, முழுக்க முழுக்கக் காரணம், நம்மை இதுவரை ஆண்டு வரும் அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகள் தான்.இந்நிலைக்கு, மற்றொரு முக்கிய காரணம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனில் உணர்வுப்பூர்வமான, உண்மையான அக்கறை கொண்டவர்கள், இப்பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக பார்லிமென்ட்டிற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இல்லாதிருப்பது தான். ஜாதி மேலாதிக்கம், பண பலம், ஆள் பலம், நம் தேர்தல் விதிமுறைகளில் உள்ள குறைகள் சமூக விரோதிகளும், சுயநலக் கும்பலும் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்குச் சாதகமாக இருக்கின்றன. தற்போது பா.ஜ., அரசு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்ற கொண்டு வர இருக்கும் வளர்ச்சித் திட்டங்களை, எதிர்க்கட்சிகளின் கண்மூடித்தனமான எதிர்ப்புகளைச் சட்டை செய்யாமல், அத்திட்டங்களைப் படிப்படியாக லஞ்ச, ஊழல்களுக்கு இடம் தராமல் நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக இருக்கும்.
இ-மெயில்: krishna--_samy2010yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி -
கூடுதல் காவல் துறை
கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
எழுத்தாளர், சிந்தனையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement