Advertisement

உணவு பரிமாற்றத்தின் பரிணாம வளர்ச்சி

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்று முன்னோர் சொன்ன வாக்கு உண்மை. இந்த உணவு மனிதனுக்கு எப்படியெல்லாம் கிடைக்க பெற்றது; பரிமாறப்பட்டது; எவ்வாறு எல்லாம் சாப்பிட பெற்றது என்பதை எண்ணி பார்த்தால் அதன் பரிணாம வளர்ச்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
அன்றைய உணவு பழக்கத்திற்கும், இன்றைய பழக்கத்திற்கும், உணவு வகைக்கும் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.கற்கால மனிதன் இலை தழைகளையும், முயல், மான்களை வேட்டையாடியும் வாழ்ந்தான். பச்சையாக சாப்பிட்டவன், சுட்டு சாப்பிட துவங்கினான். அதன் சுவையை ருசி கண்டான். இதன் விளைவாக மண்பாண்டம் செய்ய தெரிந்த பின் சமைக்க கற்றுக்கொண்டான். பின், படிப்படியாக, 'எது சாப்பிட்டால் நல்லது; எந்த உணவு பலன் தருவது' என அனுபவத்தில் கற்றுக்கொண்டான். பலரோடு சேர்ந்து விருந்துண்ணல் சிறப்பையும் புரிந்து கொண்டான். அறுசுவை படைப்பில் மன்னனான்.
சிறுதானியங்கள் 20ம் நுாற்றாண்டில், குறிப்பாக 1950-60 களில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் காலையில் 'நீராகாரம்' குடிப்பர். விவசாயிகள் அதை குடித்துவிட்டே உழவுக்கு செல்வர். அந்த நீராகாரம் என்பது முந்தைய நாள் வடித்து வைத்த கம்மஞ்சோறில் அல்லது அரிசி சோற்றில் நீரும், மோரும் ஊற்றி கலந்து பருகினர். கடித்துக்கொள்ள வெங்காயம். இவர்கள் இட்லி, தோசை சாப்பிடுவது அபூர்வம். அதேசமயம் தங்கள் உணவில் சிறுதானியங்களை சேர்த்து சமைத்தனர்.இன்றும் கிராமங்களிலும், நகர் வாழ்க்கையில் ஒன்றிபோன கிராமத்து பெரியவர்கள் பலரும் உளுந்தம் களி, கேப்பை களி, கம்பங்களியை மாற்றி மாற்றி சாப்பிடுகின்றனர்.
கூழ் வகைகளுக்கும் இப்போது 'மவுசு' அதிகரித்துவிட்டது. உடலுக்கு நல்ல பயன்களை தரும் கூழ் வகைகள் இப்போது பார்க்கும் இடங்களில் எல்லாம் மண்பானைகளில் விற்கப்படுகின்றன. ஒரு சொம்பு கூழ் குடித்தால் அந்த வேளை உணவுக்கு ஈடாகிவிடும்.
ஓட்டல்கள் :தமிழகத்தில் அந்த காலத்தில் சத்திரம், வீடுகளில் உணவு வழங்கப்பட்டது. கர்நாடகாவின் உடுப்பி எனும் ஊரில் இருந்து வந்தவர்களால் தமிழகத்தில் 'உடுப்பி ஓட்டல்' ஆரம்பிக்கப்பட்டது. பின் உணவகம், 'கபே' என்ற பெயர்களில் சிறு சிறு ஓட்டல்கள் உருவாகின. இன்று தங்கும் விடுதிகள், விளையாட்டு சாதனங்கள், தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த காலத்தில் ஓட்டல்களுக்கு மக்கள் விரும்பி செல்லக் காரணம், வீட்டில் சமைக்க வேண்டுமே என்ற சோம்பேறித்தனம் இல்லை. சுவையான டிகிரி காபி, உளுந்து வடை, கேசரி, ஜாங்கிரி போன்றவை அவர்களை வரவழைத்தன. தொடர்ந்து சுவை மாறாமல் மக்களுக்கு வழங்க, நாளடைவில் ஓட்டல்கள் பிரபலமாயின. அவர்கள் தயாரித்த வெண் பொங்கலும், பூரிக்கிழங்கும், ரவாதோசையும் பிரசித்தி பெற்றன.
1970 - 80க்குள் இந்த ஓட்டல்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் காரணமாக ஓட்டல் பெயருடன் 'பவன்' என வார்த்தை சேர்த்து நடத்தப்பட்டன. 1950, 60களில் பல உணவு விடுதிகளில் 'மெஸ்' என்ற பெயரில் தரையில் மூங்கில் பாயும், ஜமுக்காளமும் விரித்து சாப்பிட வருபவர்களை அதில் அமரச்செய்து, தலை வாழை போட்டு, தண்ணீர் ெதளித்து மரியாதையுடன் உணவு பரிமாறினர். சாப்பிட வருபவர்களுக்கு பனை ஓலையில், தென்னம் ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளை கொடுத்து சவுகரியமாக அமரவைத்தனர்.
கையேந்தி பவன் :இப்பழக்கம் 1975களில் மாறின. மேஜை, மின்விசிறி, நாற்காலிகள் ஓட்டல்களை ஆக்கிரமித்தன. மறுபுறம் 'கையேந்தி பவன்' பரவலானது. அதற்கு பின் இன்று வரை உணவக வருகைகளில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. பல மாநிலங்களில் இருந்தும், பல தேசங்களில் இருந்தும் உணவுகள் நம்மை தேடி வந்து கொண்டிருக்கின்றன.வெளிநாடு உணவு வகைகளில் இன்று நமக்கு பசியை தீர்த்தாலும், அவற்றால் உடல் நலனுக்கு நல்லதா என்றால் பதில் இல்லை. அதேசமயம், இன்றைய சூழலில் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. சென்ற நுாற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்களை மக்கள் இன்று தேடிப்பிடித்து வாங்குவது அதிகரித்துவிட்டது. இயற்கையில் விளைந்த காய்கறிகளை விற்கும் அங்காடிகளுக்கு மவுசு கூடிவிட்டது.
ஓட்டல்களும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு, சத்தான சிறுதானிய உணவுகளை தயாரித்து கொடுக்கின்றன. 'பழையன நீங்கி புதியன பிறக்கும்' என்பது உணவை பொறுத்தவரை மாறிவருகிறது. இப்போது புதியவை நீங்கி பழையன வரும் என்பது நிதர்சனமாகிவிட்டது. சிறுதானியங்களிலும், கேழ்வரகிலும், சோளம், கம்பு போன்ற உணவு வகைகளில் இல்லாத சத்துகளா? அதனால்தான் வைட்டமின் மாத்திரைகளும், இரும்புச்சத்து 'டானிக்'களும் மறைகின்றன.நோயின்றி நலமுடன் நீண்டநாள் வாழ சரியான உணவை தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வான் என்பதில் சந்தேகமில்லை.
- கே.எல். குமார்,தலைவர், மதுரை ஓட்டல் உரிமையாளர் சங்கம்.98942 33332

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement