Advertisement

முன்னேற்ற பாதையில் தொழிலாளர்கள்: இன்று தொழிலாளர் தினம்

உலகத்தொழிலாளர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது முதல், நமது நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துகொண்டே தான் வருகிறது. ஆரம்பத்தில்
தொழிற்சாலைகளில் நவீன உற்பத்தி முறைக்குள் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டபோது ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் வரை வேலைசெய்யும் சூழல் இருந்தது. இந்தநிலை படிப்படியாக
மாறி முன்னேற்ற பாதையில் செல்கிறது.
உலக அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், தொழிலாளர்கள், சிறுவர்கள், பெண்களை ஆட்டுமந்தை போல நடத்தினர். அடித்து வேலை வாங்கும் பரிதாபம் இருந்தது. தொழிலாளர் வர்க்கம், சாட்டை நுனியில் ஆடும் சர்க்கஸ் மிருகம் போல் வதைப்பட்டு கொண்டு இருந்தது. குறிப்பாக இரு உலகப்போருக்கு பின் பல்வேறு கட்டங்களில் மாற்றங்கள் காணப்பட்டு தொழிலாளர்களின் நிலை உயர்ந்துகொண்டே வந்தது. சுதந்திரமாக சங்கம் அமைத்து தங்களை பாதுகாக்கும் அளவிற்கு தொழிலாளர் நிலை உயர்ந்து உள்ளது.
அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், படுகொலைகளுக்கு பின் எட்டுமணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. இதன் அவசியத்தை தீவிரப்படுத்தியதால் 1914ல் அமெரிக்க போர்டு மோட்டார் கம்பெனி எட்டுமணி நேர வேலையை அறிவித்தது. உலகில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் மே 1ம் தேதியை ஆர்ப்பாட்ட நாளாக அறிவித்து உரிமையை நிலைநாட்டினர்.
நம்நாட்டில் 1923ல் சென்னை கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து டில்லியில் 1927ல் நடந்த மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடும்படி அறிவித்தது. இது தொடர்கிறது. ஆனால் மேலைநாடு எட்டுமணி நேர வேலை அறிவிக்கும் முன்னே இந்தியாவில் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912ல் தனது தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலையை தானாக முன்வந்து செயல்படுத்தியது.
தொழிலாளர் நிலை இன்று அரசே, தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு என்ற கொள்கையை அமல்படுத்தி உள்ளது. அன்று ஒரு தொழிலாளியை வேலைக்கு வைத்து கொள்ளவும், நீக்கவும் அதிகாரத்துடன் அராஜகம் நடந்தது. இன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையில், ஒவ்வொரு
கட்டத்திலும் முறையான செயல்கள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா? இயற்கை மற்றும் சமூக நீதி, மனிதாபிமானம் பின்பற்றப்பட்டு உள்ளதா என அரசே கேள்வி கேட்கும் நிலை உள்ளது. வேலைப் பளு நிர்ணயித்து, அதற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை உள்ளது. தொழில், தொழிலாளர் நிலை வளர்ச்சி காரணமாக தொழில் உறவு என்ற நிலையில் இருந்து மனிதநேய உறவாக வளர்ந்து உள்ளது. தொழிலாளியும், முதலாளியும் இரு காளை போல் செயல்படுகின்றனர். இதற்கு தொழிற்சங்க அமைப்பு தான் காரணம். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட அமைப்பு, மேலைநாடுகளுடன்
ஒப்பிட்டு பார்க்கும்போது நம் நாட்டில் அந்தநிலையை இன்னும் அடையவில்லை என்றே சொல்லலாம்.
உலக தொழிலாளர்கள் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர் வாழ்வு உயர, கொள்கைகளை பரிந்துரைத்தும் நாட்டுக்கு நாடு தொழிலாளர்களிடையே இடைவெளி தென்படுகிறது. வேலைபாதுகாப்பு
இல்லாத அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நம்நாட்டில்
நான்குகோடி பேர் உள்ளனர். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் மட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளே காரணம்.
சங்கம் அமைப்பு தேவை ஏன் பெரும்பாலும் கோர்ட், ஊதிய குழுக்கள், சில அமைப்புகளால் ஊதியம் மற்றும் வேலை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட
சக்தியை விட வெளிஅமைப்புகளையே அதிகஅளவில் நம்பி நாடுகின்றனர். இதனால் சங்கங்களை தேவையற்ற அமைப்பு என கருதுகின்றனர். எந்த பிரச்னையையும் பேசி தீர்க்க தொழிற்சங்கங்கள் முயலவேண்டும், அப்போது தான் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய முக்கியமான பண்பு இது தான். தொழிலாளர் அமைப்புகள் தங்களது அணுகுமுறையை மாற்றவேண்டும். அப்போது தான் சிறந்த தொழிற்சங்கமாக திகழ முடியும்.
விழிப்புணர்வு தேவை தற்போது நம்நாட்டில் 44 மத்திய சட்டங்கள், 100க்கு மேல் மாநில சட்டங்கள் தொழிலாளர் நலனுக்காக அமலில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி என்ற வாகனத்திற்கு தொழிலாளர்கள், நிர்வாகம் இரு சக்கரங்களாக உள்ளன. தொழிலாளர்
நலசட்டங்கள் இதற்கு அச்சாணி ஆகும். சீனாவில் அடங்கிபோகும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியா போன்ற நாடுகளில் உழைப்பாளர்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய துடிக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார மண்டலங்கள், உலகமயமாக்கல்,
தாராளமய மாக்கல், சமூக பாதுகாப்பு சட்டங்களின் வளர்ச்சி என்ற கோணத்தில் நவீனமயமாகும் இன்றையநிலையில்
இந்திய தொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கவேண்டும். நவீன தகவல் தொழில்நுட்ப துறையில், பழைய வேலை நேரங்கள்
எட்டிப்பார்க்கும் நிலை உள்ளதால் உழைக்கும் வர்க்கத்திற்கு விழிப்புணர்வு தேவைதான். இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர் அமைப்புகள் ஒன்றுபட்டு பொருளாதார நடவடிக்கைக்கு உதவவேண்டும்.
'ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒன்றையொன்றை புடுச்சிருக்குஒழுங்காக குருத்து விட்டு
கொள்ளைகொள்ளையாய் வெடிச்சிருக்குஒட்டாமே ஒதுங்கி நின்னால் உயர முடியுமா?
எதிலும்ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?'
என்று பட்டுக்கோட்டையார் உவமை நயத்தோடு பாடிய பாடலை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு நாமும் வளர்ந்து இணைந்து செயல்பட்டு, பொருளாதாரத்தை மேன்மையடைய மே 1ம் நாளில் உறுதிமொழி ஏற்போம்.-வி.குருசாமி,நல்லாசிரியர்(ஓய்வு)மத்திய தொழிலாளர் கல்வி,ராஜபாளையம்94435 69810.வாசகர்கள் பார்வை

இந்தியாவின் பெருமை

என் பார்வையில் வெளியான 'நாடு கால்நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். உலக அளவில் இந்தியா கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்பதை படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல் முட்டை உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
- கே. இளஞ்செழியன், குன்னுார்.

அற்புத தகவல்

என் பார்வையில் வெளியான 'நோயில்லா சமுதாயம்' கட்டுரை படித்தேன். உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறித்த அற்புத தகவல்களை தாங்கி வந்தது மகிழ்ச்சி.
- சு.பாலசுப்பிரமணியன், ராமேஸ்வரம்.

ஆனந்த விளையாட்டு

என் பார்வையில் வெளியான 'ஆனந்தமாய் வாழ' கட்டுரை அருமை. மறக்கப்பட்ட பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்களை நினைவுப்படுத்தியது. மாணவர்கள் இது போன்ற பழமையான விளையாட்டுக்கள் குறித்து தெரிந்து கொள்ள வழிகாட்டியது.
- அ. அபுதாகிர், பழநி.

விவசாய நண்பன்

என் பார்வையில் வந்த 'நாடு கால் நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். விவசாயத்தின் நண்பனாக திகழும் கால்நடைகளை எல்லோரும் மறந்து வரும் வேளையில் என் பார்வையில் இந்த கட்டுரை வெளியானது மிகப்பொருத்தமாக இருந்தது.-- என்.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா, ராஜபாளையம்.

சமூக விழிப்புணர்வு

என் பார்வை பகுதியில் வெளியாகும் பல்துறை நிபுணர்களின் கட்டுரைகள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வை சுமந்து வருவது மகிழ்ச்சி. இப்படி ஒரு அருமையான பகுதியை தரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.
- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement