Advertisement

என் பார்வை: மறந்து போன மருந்துப் பெட்டி

சமையலறையில் அஞ்சறைப் பெட்டியும், வரவேற்பறையில் கண்டூசப் பெட்டியும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். மருத்துவ வசதி இல்லாத காலத்தில், அவசரகால மருத்துவத்திற்காக கைப்பக்குவ
மருந்துகள் வைத்திருந்த மருந்துப் பெட்டி தான் கண்டூசப் பெட்டி.பால் சங்கு, வசம்பு, ஓமம், திப்பிலி, வேலிப்பருத்தி, வெற்றிலைக் காம்பு, பொடுதலை, ஓமவள்ளி போன்றவை குழந்தைகளுக்காக வீட்டில் இருந்தவை. அவற்றை நாம் மறந்துவிட்டதால் தான் சிறு குழந்தைகளுக்கு சின்ன சின்ன உடல் உபாதைகள் கூட முற்றிப் போய் பெரிய நோய்களாக தற்சமயம் மாறிவிடுகின்றன.குழந்தைகளுக்காக நமது வீட்டில் இருக்க வேண்டிய பாரம்பரிய மருந்துப் பொருட்களை பார்ப்போம்.
அன்னப் பொடி
குழந்தைகள் சாப்பிடாமல், ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்பட்டால் சாப்பிடும் போது 2 விரலிடையளவு இந்தப் பொடியை கலந்து கொடுக்கலாம். இதனால் பசிக்கும், உணவும் செரிக்கும்.தோல் நீக்கிய சுக்கு, இளவறுப்பாக வறுத்த மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், உலர்ந்த கறிவேப்பிலை, நீரில் கரைத்து வடிகட்டி உலர வைத்து எடுத்த இந்துப்பு ஆகிய 7 பொருட்களும் வகைக்கு 1 பங்கு அளவெடுத்து அத்துடன் கால் பங்கு பொரித்த பால் பெருங்காயம் சேர்த்து நன்கு பொடித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 3 மாதங்கள் இதனை பயன்படுத்தலாம். பஞ்சதீபாக்கனிப் பொடி குழந்தை வயிற்றில் காற்று கூடி, பொருமிக் கொண்டே ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் ொண்டிருந்தால் இந்தப் பொடியை கொடுக்கலாம். தோல் நீக்கிய சுக்கு, இளவறுப்பாக வறுத்த மிளகு, திப்பிலி, சீரகம், ஏலக்காய் விதை ஆகியவற்றை 1 பங்கு எடுத்து அரைத்து 5 பங்கு நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை தேக்கரண்டி தேன் அல்லது நெய்யில் கலந்து குழந்தையின் நாக்கில் தடவி முழுங்கச் சொல்லலாம்.
சுண்டை வற்றல் சூரணம்
குழந்தைக்கு செரிக்காமல் அடிக்கடி கழிச்சல் ஏற்பட்டால் சுண்டை வற்றல் சூரணம் கொடுக்கலாம். சுண்டை வற்றல், உலர்ந்த கறிவேப்பிலை, மாம்பருப்பு, நெல்லி வற்றல், உலர்ந்த மாதுளம் பழத்தோல், இளவறுப்பாக வறுத்த ஓமம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து 2 விரலிடையளவு புளித்த தயிரில் கொடுத்தால் செரிக்காததால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீரும்.ஓமத்தை இளவறுப்பாக வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். 1 தேக்கரண்டி அளவு பொடியை சோறுடன் பிசைந்து கொடுக்க நன்கு பசியெடுக்கும்; வயிறு உப்புசம் தீரும்.
வசம்பு பொடி
வசம்பின் மேல் தோலை நீக்கி, எரித்து, சாம்பலாக்கி, விபூதி போல் செய்து கொள்ள வேண்டும். அரிசியளவு இதனை எடுத்து தேன் அல்லது தாய்ப்பால் கலந்து கொடுக்க கழிச்சல், சீதபேதி, வயிற்று வலி நீங்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் நீங்க ஆரொட்டி மாவை கஞ்சி போல் செய்து தேவையெனில் மோர் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.
வாயின் உட்புறத்தில் நாக்கின் ஓரத்தில் கன்னத்தின் உட்புறம் குழந்தைகளுக்கு உண்டாகும் வாய்ப்புண்கள் நீங்க வெங்கார மதுவை வாயின் உட்புறம் தடவி வரலாம்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வெங்காரத்தை ஒன்றிரண்டாக இடித்து, மண்சட்டியில் போட்டு பொரித்து, தூளாக்கி, தேன் கலந்து ஊறவைத்து வாயில் புண் உள்ள இடங்களில் தினமும் இரண்டு முறை தடவி வர வேண்டும்.
குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளர்ந்து அடிக்கடி சளி, இருமல், வாந்தி, உடல் இளைத்தல் ஆகியன உண்டாகும். வெள்ளைப் பூண்டை தோலுரித்து நன்கு இடித்து அனலில் லேசாக வாட்டி சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு படுக்கும் பொழுது நாக்கின் உட்புறத்தில் தடவி, முழுங்கி அரை மணி நேரம் கழித்து வெந்நீர் குடித்தால் தொண்டைச் சதை விரைவில் கரையும்.கருப்பு துளசி அல்லது நல்ல துளசியை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து 1 தேக்கரண்டி கொடுத்தால் இருமல் நிற்கும். இரைக்குழம்பு
வயிற்றுப் புழுக்கள் வராமல் தடுக்க மாதம் ஒரு முறை மூன்று நாட்கள் இதனை கொடுக்கலாம். ஏலக்காய் உள்ளிருக்கும் விதைகளை வறுத்து, பொரித்த பெருங்காயம், தோலுரித்த வெள்ளைப்பூண்டு, பொரித்த வெங்காரம், சுழற்சிப்பருப்பு, மாங்கொட்டை உள்ளிருக்கும் பருப்பு ஆகியவற்றை பொடித்து, சலித்து வேலிப்பருத்தி இலைச்சாறு, நொச்சி சாறு, தும்பைச்சாறு, இஞ்சிச்சாறு மற்றும் பிரண்டைச்சாறு என அம்மியில் வைத்து அரைத்து லேசாக சூடு செய்து குழம்பு போல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2 விரலிடையளவு மூன்று நாட்கள் அதிகாலையில் கொடுக்க வேண்டும்.
பஞ்சகற்பம்
பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வறட்சி, வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்கு பஞ்சகற்பம் நல்ல மருந்து. வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், கடுக்காய், நெல்லி வற்றல், மிளகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பசும்பாலில் ஊறவைத்து நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் கழித்து தலை முதல் கால் வரை லேசாக அப்பி தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும்.
நலுங்குமாவு
பெண் குழந்தைகளுக்கு முகத்தில் முடி வளராமல் தடுக்கவும், முகப்பரு வராமல் தடுக்கவும் வாரம் இரண்டு நாட்கள் நலுங்குமாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இளவறுப்பாக வறுத்த பாசிப்பயறு, வெட்டி வேர், சந்தனகட்டை, கோரைக்கிழங்கு, கஞ்சியில் ஊறவைத்து காயவைத்த கார்போகரிசி, விளாமிச்சம் வேர், கிச்சிலி கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவடையும்.இவ்வாறு தேவையான மருந்துப் பொருட்களை நாமே வீட்டில் தயாரித்து வைத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.-டாக்டர் எஸ். ரோஜாமணி,சித்த மருத்துவர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பூவந்தி. rojaramanidryahoo.com.

வாசகர்கள் பார்வை

பழமொழி கருத்து
என் பார்வையில் 'வெற்றி அறுவடை செய்வது எப்படி ?' கட்டுரை வாசித்தேன். ஆசிரியர், மாணவர்களின் இன்றைய நிலை குறித்து முனைவர் செல்லத்தாய் செம்மையாய் விளக்கினார். பல இடங்களில் பழமொழிகள் அருமையான கருத்துக்களை வெளிப்படுத்தியது.
- பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.

அழகான விளக்கம்

என் பார்வையில் வெளியான 'கவனிக்கப்பட வேண்டிய கல்வி ஆண்டுத்திட்டம்' படித்ததும் என் கல்லூரிக் காலம் நினைவுக்கு வந்தது. நாங்கள் படித்த நாட்களில் கோடை விடுமுறை நேரத்தோடு விடப்பட்டு, அடுத்த ஆண்டுகளுக்கான எல்லா ஏற்பாடுகளும்
முறையாக செய்யப்பட்டதால் தான் எங்களால் நன்றாக படிக்க முடிந்தது. இதை அழகாக விளக்கிய என் பார்வை சேவைக்கு பாராட்டுக்கள்
- உஷா முத்துராமன், மதுரை.

புள்ளி விபரங்கள்

என் பார்வை பகுதி பல்வேறு கோணங்களில் பலவிதமான விஷயங்களை வாசகர்களுக்கு அறியத் தருகிறது. அதே போல் ஒவ்வொரு சிறப்பு தினங்களைப் பற்றியும் புள்ளி விபரங்களுடன் தருவது அருமை.
- என். சாந்தி தேவி, காரைக்குடி.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல்

கல்லூரி மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் என் பார்வையில் வெளியான 'கவனிக்கப்பட வேண்டிய கல்வி ஆண்டுத் திட்டம்' கட்டுரை படித்தேன். மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை கட்டுரை தெளிவுப்படுத்தியது.
- கே. கார்த்திகா, ராமநாதபுரம்.

அறிவுப் பட்டியல்

என் பார்வையில் 'வெற்றி அறுவடை செய்வது எப்படி' கட்டுரை படித்தேன். கல்வியில் உள்ள இடர்பாடுகளை நீக்கி வெற்றி காண அறிவுரைகளை பட்டியலிட்டிருந்தார்.
- அ.முகமது இஸ்மாயில், தேவகோட்டை.

இந்தியாவின் பெருமை

என் பார்வையில் வெளியான 'நாடு கால்நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். உலக அளவில் இந்தியா கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்பதை படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல் முட்டை உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
- கே. இளஞ்செழியன், குன்னூர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement