Advertisement

நோயில்லா சமுதாயம் வேண்டும்

நோய் தடுப்பாற்றல் ஆய்வுகள் நீண்ட வரலாறு கொண்டது. 'உலக நோய் தடுப்பாற்றல் இயல்' தினம் ஏப்.,29ல் கொண்டாடப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் சார்ந்த ஆய்வுகள் செய்யும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைகழங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.விஞ்ஞானி ராபர்ட் கோச் 1891ல் டியூபர்குளோசிஸ் பாக்டீரியாவை (டி.பி) காசநோயுள்ள மற்றும் நோயில்லாத கினி பன்றிகளுக்கு செலுத்தி ஆராய்ந்தார். ஏற்கனவே நோயுற்றிருந்த விலங்குகள் முற்றிலும் மாறுபட்ட முறையில் எதிர்வினையாற்றியதை கண்டறிந்தார். டி.பி பாக்டீரியாக்களால் தாக்குதலுக்கு உள்ளான விலங்கு, மனிதர்களுக்கு மறுபடியும் டி.பி கிருமிகளை உட்செலுத்தும் போது ரத்தத்தில் வெள்ளையணுக்கள் எதிர்த்து செயல்படுவதை நிரூபித்தார். நோய் தாக்கப்பட்ட உடலில் ஏற்படும் இந்த நிகழ்வுகள் 'கோச் விளைவு' என்று கூறப்படுகிறது.கண்டுபிடிப்புகள் பிரெஞ்ச் விஞ்ஞானி லுாயி பாஸ்டியர் 1879ல் சின்னம்மைகு காரணமான வைரஸ் தடுப்பு மருந்து, 1885ல் வெறிநாய்க்கடிக்கு காரணமான ரேபிஸ் வைரஸ் மருந்துகளை கண்டறிந்தார். இவர்களின் ஆய்வுகள் மனிதகுலத்திற்கே மிகப்பெரிய வரப்பிரசாதம். விஞ்ஞானிகள் கோச் மற்றும் சீபர்ட் ஆய்வு முடிவுகளால் 'பியூரிபைடு புரோட்டின் டெரிவேட்டிவ்' எனும் டி.பி கண்டறியும் மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. இன்றைக்கும் பி.பி.டி தான் நோயாளியின் கையில் தோலுக்கு அடியில் செலுத்தப்பட்டு 'மேண்டு' பரிசோதனை மூலம் டி.பி இருப்பது கண்டறியப்படுகிறது. 1924ல் ஆல்பர்ட் கால்மிட்டி, காமிலி கூரின் இருவரும் டி.பி நோய்க்கான 'பாசில்லஸ் கால்மிட்டி கூரின்' (பிசிஜி) தடுப்பு மருந்தை கண்டறிந்தனர்.
1928 முதல் பிசிஜி பயன்பாட்டுக்கு வந்தாலும் இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மதனபள்ளியில் 1948 ல் தான், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பாவிற்கு வெளியே முதன்முதலில் இங்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 1960ல் இந்தியா முழுவதும் இரண்டரை கோடிக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது, உலகசாதனையாக கருதப்பட்டது. 1968ல் டி.பி நோய் தாக்கம் அதிகமாக இருந்த தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிசிஜி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு ஏழரை ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டது. இது இந்திய நோய் தடுப்பாற்றல் ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்.
மதுரையில் முதன்முதலாக இந்தியாவில் நோய் தடுப்பாற்றல் குறித்த ஆய்வுகள் 1970 களில் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் பேராசிரியர் முத்துகருப்பன் தலைமையில் நோய் தடுப்பாற்றல் துறை முதன்முதலாக நிறுவப்பட்டது. வேலி ஓணான், புறா, கோழி, வெள்ளை எலிகளில் ஆய்வைத் தொடர்ந்து, மனிதர்களிடமும் நோய் தடுப்பாற்றல் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.இந்தியாவில் முதன்முறையாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு செய்யப்படும் 'ஹியூமன் லுகோசைட் ஆன்டிஜென்' (எச்எல்ஏ) பரிசோதனை முறைகளை, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் பிச்சப்பன் துவக்கினார். இதன் மூலம் சிறுநீரக தானம் தருபவரை தேர்வு செய்ய முடியும். இன்றளவும் 'எச்எல்ஏ' பரிசோதனையை தொடர்ந்து செய்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த வசதிகளால் பயன்பெற்று வருகின்றன. டில்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான மையத்தில் (எய்ம்ஸ்) விஞ்ஞானி ஜி.பி.தல்வார் தலைமையில் நோய் தடுப்பாற்றல் குறித்த ஆய்வுகள் துவங்கப்பட்டன.
தொடர் மாநாடுகள் :உலகளவில் ஐயூஐஎஸ், ஆசியளவில் பிம்சா மற்றும் இந்தியாவில் இந்தியன் இம்யூனாலஜி சொ.ைஸட்டி போன்ற அமைப்புகள் நோய் தடுப்பாற்றல் குறித்த ஆய்வுகளை செய்து வருகின்றன. சர்வதேச கருத்தரங்குகளை நடத்துகின்றன. இந்த சொ.ைஸட்டி சார்பில் கடந்தாண்டு டிசம்பரில் 41வது தேசிய நோய் தடுப்பாற்றல் மாநாடு, மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் நடந்தது. இந்திய அளவில் எய்ம்ஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி, மும்பை டாடா ஆய்வு மையம், சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், புனே தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நோய்க்கான காரணிகளான பாக்டீரியா, வைரஸ் கிருமிகளின் தொற்றும் தன்மை, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்ப்பு சக்திக்கு காரணமான மரபணு கூறுகள், தடுப்பு மருந்து கண்டறிதல் போன்ற ஆய்வுகள் உலகளவில் செய்யப்படுகின்றன. சமீபகாலமாக கம்ப்யூட்டர் உதவியுடன் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் :'இம்யூனோ இன்பர்மேட்டிக்ஸ்' முறை கவனத்தை ஈர்த்து வருகிறது.சவாலான விஷயம் இந்தியா போன்ற மக்கள் தொகை மிக்க நாடுகளில் நோய் வருவதை கண்டறிவது, காரணியை பிரித்தெடுப்பது, மருந்து தயாரிப்பது, பரிசோதிப்பது எல்லாமே சவாலான விஷயம். கல்வியறிவு அதிகம் பெறாத மக்களுக்கு சுத்தம் குறித்தும், சத்தான உணவுகளை உட்கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே நோய் தடுப்பை கடைபிடிக்க முடியும்.கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் உணவால், பிறந்த சிசுவுக்கும் பலவகையான நோய்கள் தாக்கும் என்பதை புரியவைக்க வேண்டும். எச்ஐவி போன்ற கொடிய கிருமிகள், பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கும் வரும் என்பதை புரியவைக்க வேண்டும். மக்களுக்கு புரியாத பல உண்மைகளை, இந்த நோய் தடுப்பாற்றல் நாளில் உரக்கச் சொல்லி, நோயில்லா சமுதாயம் அமைய அனைவரும் உறுதி ஏற்போம்.-க. பாலகிருஷ்ணன், இணைப்பேராசிரியர், நோய் தடுப்பாற்றல் துறை, மதுரை காமராஜ் பல்கலைகழகம்,98421 14117.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement