Advertisement

'ஜோ' மழை 'ஜோர்'

சுரிதார் அணிந்து வந்த சொர்க்கம்... புடவை கட்டி மீண்டும் வருகிறது '36 வயதினிலே...' உருட்டிய விழிகள், வெற்றியின் வழிகள், கன்னத்தில் குழிகள் என உருகாத குல்பியாய் உலா வந்த ஜோதிகாவை, தமிழ் சினிமா எப்படி மறக்கும்? லகலகலக...வென நம்மையெல்லாம் மிரட்டி, உருட்டி விடைபெற்ற சந்திரமுகி, நீண்ட இடைவெளிக்கு பின் கேமரா முன் தோன்றுகிறார்.
மலையாளத்தில் 'மெகா ஹிட்' அடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யு' படத்தை '36 வயதினிலே' என்ற பெயரில் தமிழில் 'ரீமேக்' செய்து மீண்டும் தன் தமிழ் பிரவேசத்தை தொடங்கியிருக்கும் ஜோதிகா... நமது வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...
* ஜோதிகா மீண்டும் வந்தாரா? மீண்டு வந்தாரா?
என் பொண்ணு தியா மூன்றாம் வகுப்பு, பையன் தேவ் எல்.கே.ஜி., போறாங்க. இத்தனை நாட்கள் அவங்களை கவனிக்கிறது தான் என்னோட வேலையா இருந்துச்சு. ஒரு தாயா, மனைவியா என்னோட பணிகளில் நிறைவு கிடச்சது. 36 வயதினிலே கதை கேட்டதும் மீண்டும் நடிக்க வந்துட்டேன்.
* சினிமா- குடும்பம், குடும்பம்- சினிமா... எப்படி உணர்ந்தீங்க?
பசங்க வீட்டில் இருக்கும் போது எப்படி போவது என் யோசித்த போது, என் தோழி சாரா தான் 'ஜோ... உனக்கு விடுமுறை வேணும்.. போ...' என்றார். என்னை சுற்றியுள்ள 'பாசிட்டிவ் எனர்ஜி' தான் நான் திரும்ப கேமரா முன் நிற்க காரணம்.
* வெளியே கிடைத்த ஆதரவு... உள்ளே கிடைத்ததா?
அத்தையும், மாமாவும் ஒரு முறை கூட எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை குடும்பமே ஏற்றுக் கொண்டு என்னை வழி அனுப்பினர்.
* '36 வயதினிலே' தேர்வு செய்ய என்ன காரணம்?
ஏதோ நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தேர்வு செய்யவில்லை. இது உண்மையிலேயே கொஞ்சம் ஸ்பெஷல் படம் தான். ஆண்களின் நம்பிக்கையை இந்த கதை பெறும். பார்க்கும் போது உங்களுக்கும் அது புரியும்.
* உங்களின் தன்னம்பிக்கை குறையவே இல்லீயே?
என் அம்மா தான் அதற்கு காரணம். சின்ன வயதிலிருந்தே என் தம்பியை போல தான் எங்களையும் வளர்த்தாங்க. அது தான் இன்னைக்கு நான் இப்படி இருக்க காரணம்.
* ஜோதிகாவிற்கு மறக்க முடியாத இயக்குனர்கள் யார்?
என்னை அறிமுகம் செய்து வைத்த பிரியதர்ஷன். எனக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்த வசந்த். என் கேரியரில் முக்கியமான படமான 'மொழி'யை இயக்கிய ராதா மோகன். இவங்க எல்லோரும் எனது வழிகாட்டிகள்.
* '36 வயதினிலே' ஜோதிகா என்ன சொல்ல வருகிறார்?
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணின் சக்தி தெரியும். பெண்ணின் பெருமை சொல்ல ஆண் துணை நிற்பர். அதை '36 வயதினிலே' படம் சொல்லும்... என்ற நம்பிக்கை ஜோதி, ஜோ கண்ணில் தெரிய... 'வெற்றிக்கு ஏது வயது... 36 வயதிலும் அது சாத்தியமே,' என வாழ்த்தி விடைபெற்றோம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement