Advertisement

ஓடும் நதியைப் போல! இன்று உலக புத்தக தினம்

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிலர் பிறந்த தினமாகவும், நினைவு தினமாகவும் ஏப். 23ம் தேதியை, உலக புத்தக தினமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடகப் பேராசான் வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த நாளும் ஏப்.,23 தான்.
தேனீக்கு தேன் எடுப்பது வேலையல்ல. அது ஒரு பரவசம். நமக்கு புத்தகம் படிப்பது வேலையல்ல. வேலை என்று நினைத்தால் அது சுமை. பரவசம் என்று நினைத்தால் அது சுவை. சுவாசிப்பதும் வாசிப்பதும் தான் வாழ்க்கை. சுவாசிப்பது உயிருக்கு, வாசிப்பது வாழ்க்கைக்கு. அப்படி வாழ்ந்தவர்களே சாதனைகளை படைத்திருக்கின்றனர். எந்த துறையை சேர்ந்தவர்களாயிருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த நூல்களை படிப்பது முக்கியம். அறிவை விரிவு செய்ய விரும்புகிறவர்கள் பலவகை நூல்களை படிப்பது அவசியம். மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமல்ல... ஒவ்வொரு நாளும் பயனுள்ள புத்தகங்களை தேடி படிக்க வேண்டும்.

நட்பு பாலங்கள்:தேடலில் உள்ள சுகம் சுமையானதல்ல. புத்தகங்கள் காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கின்ற கலங்கரை விளக்கங்கள். இவை திசைகளை காட்டும். திசைகளை தெரிந்து கொண்டால் தேடுவது கிடைத்து விடும். ஒரு மனிதன் எத்தனை புத்தகங்கள் படித்தான் என்பதை வைத்து தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும் என்றார் ?ஹன்றி டேவிட் தாரோ. வாழ்தலின் அடையாளம் புத்தகங்கள். புரட்டி போடுகின்ற வாழ்க்கையின் ராட்சத சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனதை ஈரப்படுத்தி கொள்வதற்கும், வற்றிப் போய் கொண்டிருக்கின்ற இருதயத்தில் அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக் கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பயன்படுகிறது.தோழனே இது புத்தகமல்ல இதைத் தொடுபவன் மனிதனை தொடுகிறான் நீயும் நானும் நெருக்கமாகிறோம் இதோ இதன் பக்கங்களிலிருந்து நான் உன் கைகளுக்கு தாவுகிறேன் என்கிறான் புதுக்கவிதையின் பிதாமகன் வால்ட் விட்மன். எல்லைகளையும் காலங்களையும் கடந்து இருதயங்களை ஒன்றிணைக்கும் நட்பு பாலம் புத்தகங்கள். புத்தகங்கள் வாசிக்காத நாட்கள் எல்லாம் நாம் சுவாசிக்காத நாட்கள். புத்தகங்கள் ஞானம் தரும் போதி மரங்கள். கருத்துகள் பிறக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம். அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டுமே. அது புதுமையையும் புரட்சியையும் படைக்கும். உலகில் பெரிய மாறுதல்களை போர்க்களங்கள் மட்டும் செய்யவில்லை. புத்தகங்களும் செய்திருக்கின்றன. 18 ம் நூற்றாண்டு, புத்தகங்களின் பொற்கால நூற்றாண்டு. ரூசோவும், வால்டேரும், போமர்சேவும் தங்களின் கருத்துக்களால் பிரான்சிலும், ஐரோப்பாவிலும் மாற்றங்களை ஏற்படுத்தினர்.

புத்தகங்கள் தந்த மாற்றங்கள்:கார்ல் மார்க்சின் 33ஆண்டுகால உழைப்பில் உருவான மூலதனம், உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தி பிடித்தது. ரூசோவின் புத்தகங்கள் தான் லியோ டால்ஸ்டாயின் உள்ளத்தில், ஞானியாகும் எண்ணங்களை உருவாக்கின. புத்தகம் தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக்கியது. சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் தான், திருச்சுழியில் பிறந்த வெங்கட்ராமனை ரமண மகரிஷியாக மாற்றியது. கம்பரும் வள்ளுவரும் இன்று இல்லை. அவர்கள் எழுதிய படைப்புகளில் இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாவீரன் நெப்போலியன் ஒருமுறை என் வாளின் வலிமையாலும் ?ஹாமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தை வெல்வேன் என்றார், அதைப்போலவே வென்றார். தியோடர் ரூஸ்வெல்ட் இறந்த பிறகு பார்த்தால் அவரது தலையணையின் கீழ் ஒரு புத்தகம் இருந்திருக்கிறது. கடைசி வரை பிறரது கருத்துக்களை உள்வாங்கியவாறே இறந்துள்ளார். தமிழகத்தில் அண்ணாதுரை புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, 'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்' என்றார் நேரு. 'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது' என்று சொன்னார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்டபோது, சற்று யோசிக்காமல் 'புத்தகம்' என்று பதில் அளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். சிறையில் புத்தக வாசிப்பை அனுமதிக்க வேண்டும் என்றார் நெல்சன் மண்டேலா. ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, அதில் வரும் பணத்தில் முந்நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின். ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் சிறந்த பரிசு புத்தகம் தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்றார் காந்தி. 'பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை' என்று கேட்டபோது புத்தகங்கள் தான் என்றார் மார்ட்டின் லூதர்கிங். தான் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரையிலும் வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிக்கலாம். 'புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்' என்பார் பாரதிதாசன். நாட்டிற்கு மட்டுமல்ல, வீட்டிற்கு ஒரு புத்தகசாலை அமைவது அவசியம். புத்தகங்களை நாமே விலை கொடுத்து வாங்குவது அவசியம். புத்தகங்களை படியுங்கள் புத்தகம் எழுதுங்கள் அல்லது புத்தகம் எழுதும்படி வாழ்ந்து காட்டுங்கள்!

- முனைவர் இளசைசுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை. 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement