Advertisement

இந்த புவி மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை: இன்று உலகப்புவி நாள்

புவி நாள் 1970 முதல் கொண்டாடப்படுகிறது. இதில் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. 1969ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா பார்பாராவில் பயங்கர எண்ணெய் விபத்து நடந்தது. அதன் பிறகு தான் வளிமண்டலம், நீர், மண் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேலார்டு நெல்சன் என்பவர் இந்த புவி நாளை தேர்ந்தெடுத்தார்.நீ ஏதாவது ஒன்றை பூமியிலிருந்து எடுத்தால் உடனடியாக திரும்ப வைக்க வேண்டும். இது அமெரிக்காவின் பழைய வழக்கம். புவியிலிருந்து நாம் பெற்ற நன்மைகளுக்கு கைம்மாறாக என்ன செய்யப் போகிறோம். மரங்களை ஆங்காங்கே நடுவதை விட நம்மால் வேறு என்ன நன்மை செய்ய முடியும். பூமி உங்களிடம் பணமோ அல்லது வேறு பொருளோ கேட்காது. மரங்கள் வளர்த்தால் பூமியையும், நம்மையும் பல்வேறு வழிகளில் காக்கும். ஒரு மரம் நடும்போது அது கரியமில வாயுவை தன்னுடைய உடலில் ஆயுட்காலம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும். மரம் வளர்ப்பதன் மூலம் மண்ணையும், பல்லுயிர்களையும், பயிரிடத்தகுந்ததாக நிலத்தையும் பாதுகாக்க முடிகிறது. வறுமையை அடியோடு ஒழிப்பதோடு உணவு பாதுகாப்பையும் நிர்ணயிக்கிறது. மரங்கள் வளர்த்து பசுமையாக மாற்றினால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்?ஸடை உறிஞ்சிக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் செழிப்பான சுற்றுப்புறத்தை கொடுக்கிறது.

மரங்கள் இல்லை என்றால்...:மரங்கள் புவிக்கு மட்டுமல்ல... நமக்கும் உதவியாக உள்ளன. முருங்கை மரத்தை எடுத்துக் கொண்டால் மண்ணை காப்பது மட்டுமின்றி அதன் இலைகள் 40 சதவீதம் புரதச்சத்தை தருகிறது. கேலியாண்டிரா செடி மண் அரிப்பை தடுக்கிறது. மரம், செடி, கொடிகளின் பூக்கள் தேனீக்களை ஈர்க்கின்றன. மரங்கள் இல்லையெனில் உயிரினங்களின் நிலை என்னாவது. மனிதனுக்கு தேவை தான் என்ன. உணவு, இடம், உடை தானே. இவற்றை மனிதன் தானாகவா சம்பாதிக்கிறான். ஆபரணங்கள், கனிமவளங்கள், உணவுப் பொருட்கள், மரப்பொருட்கள், மணல், ஜல்லி... பூமியிடம் இருந்து எல்லாவற்றையும் எடுக்கிறோம். அதை அளவோடு பயன்படுத்தாமல் அதிகமாக பயன்படுத்துகிறோம். மிச்சம் என்று திரும்பி பார்ப்பதற்கு ஏதாவது விட்டு வைக்க வேண்டாமா. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால், ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு பயன் தருகிறது. வேரிலிருந்து தண்டின் நுனிப்பகுதி வரை ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. வேரானது மண்ணை இறுகப் பற்றி மண் அரிப்பை தடுக்கிறது. வேரில் நுண்ணுயிரியில் ஆரம்பித்து பூஞ்சையினம், பாக்டீரியா, எறும்பு, பூச்சி, பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் வாழ்கின்றன. ஒரு மரத்தை நாம் வெட்டினால் பலதரப்பட்ட உயிரினங்களை சேர்த்து அழிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுத்தமான காற்று:மரங்களின் வேர்கள் மண் வளத்தையும், தரமான விதைகளையும் தந்து, மழையையும், சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றையும் தருகின்றன. அவற்றின் கிளைகள் பிரபஞ்சம் எங்கும் பரந்து விரிந்து பாகுபாடின்றி அனைத்து உயிரினங்களுக்கும் சமஅளவில் இலை, காய், கனி, விதைகளை வாரி வழங்குகின்றன. தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகளால் புவியினை பாழ்படுத்துகிறோம். பூச்சிக்கொல்லி என்ற பெயரில் நல்ல விளைநிலங்களை நஞ்சு நிலங்களாக்கி விட்டோம். நம் சுயலாபத்திற்காக மரங்களை வெட்டி சாய்த்து விட்டோம். அதற்கான படிப்பினையை இப்போதாவது அறிகிறோமா... இல்லையே. காலம் கடந்து விட்டது. சுனாமி, சூறாவளி, புவி அதிர்ச்சி வந்தும் கூட இன்னும் நாம் திருந்தவில்லை. வானம் பொய்க்கும் போதெல்லாம் இயற்கையை திட்டுகிறோமே ஏன். இன்னும் 'நான்' என்ற அகங்காரம் மனிதனாகிய நம்மிடம் உள்ளது. இந்த புவி மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை என்ற உணர்வு எப்போது வருமோ, அப்போது தான் நாம் விரும்பிய படி இயற்கை நமக்கு பரிசளிக்கும். இப்போதுள்ள காலநிலை மாற்றத்திற்கு வீடு, கார், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் பசுமை வாயுக்கள் தான் காரணம். கார்பன் வழித்தடத்தை அதிகப்படுத்தும் கரி, பெட்ரோல், இயற்கை வாயுக்களை குறைவாக பயன்படுத்துவோம். நம் முன்னே இருக்கக்கூடிய மற்றொரு பிரச்னை, கார்பனை எடுத்துக் கொள்ளக்கூடிய வனங்கள் அழிந்து கொண்டிருப்பதும், மண் பாழாவதும் தான். ஒரு நிமிடத்திற்கு 48 கால்பந்து மைதானம் அளவிலான வனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன் மரம் நட வேண்டும்:பூமியின் மத்திய வளையப்பகுதி தான் அதிகளவு சூரியஒளியை பெறுகிறது. அங்கே அதிகளவு மரங்களை நடுவதன் மூலம் அதிகமாக கார்பனை உட்கிரகிக்க முடியும். வேகமாக வளரக்கூடிய மரங்கள், 50 பவுண்டு கரியமிலவாயுவை எடுத்துக் கொள்கின்றன. தன்னுடைய 40 ஆண்டு ஆயுட்காலத்தில் ஒரு டன் அளவு கரியமில வாயுவை வளிமண்டலத்தில் இருந்து உட்கிரகிக்கிறது. சுற்றுப்புற ஆர்வலர்கள் அனைவருமே ஏன் மரம் நடச் சொல்கின்றனர் என்பது இப்போது புரியுமே. அனைவரும் ஒன்றுகூடி சிறிய அடி எடுத்து வைத்து, பாதிப்படைந்த நிலப்பகுதியை சீரமைப்போம். ஒருங்கிணைந்து கோடிக்கணக்கான மரங்களை நட்டு விலைமதிப்பில்லாத இயற்கையை பாதுகாப்போம். நாம் நடும் மரங்கள் நமக்கு நிழல் தருகிறதோ இல்லையோ... நம் எதிர்கால சந்ததியினருக்கு உயிர் தரும்.

- எம்.ராஜேஷ், உதவி பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை 94433 94233.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement