Advertisement

பாரதியார் வைத்து விட்டுப்போன சொத்து..! இன்று பாரதிதாசன் நினைவு நாள்

'பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டால் ஞான ரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்' என்பது புதுமைப்பித்தன் வாக்கு. பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அங்ஙனம் தொண்டாற்றிய பல்துறைகளுள் ஒன்று பெண் முன்னேற்றம். பெண் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் பாரதிதாசன் பாடல்களில் அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.'ஆணாய்ப் பிறப்பது அருமை, பெண்ணாய்ப் பிறப்பது எருமை' என்று பேசித் திரியும் உலகம் இது. ஆண் குழந்தையையே போற்றிப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் இன்றைய நிலையில், பெண் குழந்தைக்கும் தாலாட்டுப் பாடிய பெருங்கவிஞர் பாரதிதாசன். 'குழந்தையில் ஆண், பெண் இரண்டும் ஒன்றே. இரண்டில் எதுவாக இருந்தாலும் பேணி வளர்ப்பதே பெற்றோரின் தலையாய கடன்' என்று அறிவுறுத்தியவர். "வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்


பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!


நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும்


இப்புவிக்குத் தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!


மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற


காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!”


என்று பெண் குழந்தைக்குக் கவிஞர் தம் தாலாட்டில் ஏற்றம் தந்திருப்பது நெஞ்சை அள்ளுவதாகும்.

பெண் கல்வியின் இன்றியமையாமை:பாரதிதாசனின் பார்வையில் நல்ல குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமானால் குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவு உடையவர்களாக விளங்க வேண்டும் என்பது அவரது அழுத்தமான கருத்து.

"பெண்கட்குக் கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கே;


பெண்கட்குக் கல்வி வேண்டும் மக்களைப் பேணுவதற்கே;


பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுவதற்கே;


பெண்கட்குக் கல்வி வேண்டும் கல்வியைப் பேணுவதற்கே!”

என்று பெண் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்திய கவிஞர், தொடர்ந்து, 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்! அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்?' என்று பெண்கள் கல்வியறிவு உடையவர்களாக இருப்பின், அவர்கள் பெற்றுப் பேணும் இளைய தலைமுறையும் வளமையுறும் என்பதனையும் அறிவுறுத்துகின்றார். பெண்கள், நகை மீது பற்றுக் கொண்டவர்கள். நகை ஆசையால் ஒரு பெண் தன் தாயிடம், 'அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு; கைக்கு இரண்டு வளையல் வீதம் நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!' என்று கேட்கிறாள். அவளுக்குத் தாய் 'பெண்ணுக்கு எது ஆபரணம்' என்று அறிவுறுத்துகிறாள்:


"கற்பது பெண்களுக்கு ஆபரணம் கெம்புக்கல் வைத்த நகை தீராத ரணம்;


கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு”


என்று வறுமையிலும் செம்மையாக வாழத் தன் மகளுக்கு வழிகாட்டுகின்றாள்.

இழைக்கப்படும் அநீதிகள்:குழந்தை மணம், பொருந்தா மணம் என்று பெண்ணுக்கு நேரும் அநீதிகளைக் கண்டு கண்ணீர் வடித்தவர் பாரதிதாசன்.


"கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக்


கொடியதென்று எண்ணிடப் பட்டதண்ணே - குளிர் வடிகின்ற வட்ட நிலா”


என்று கணவன் இறந்தபின் கைம்மை என்னும் பெயரில் பெண்ணின் தலையில் ஒரு துன்பச் சுமையை ஏற்றி வைக்கும் சமூகத்தின் கொடுமை மாற வேண்டும்; கைம்பெண் நல்வாழ்வு பெற வேண்டும் என விழைகின்றார் கவிஞர். வேரில் பழுத்த பலாவாக, குளிர் வடிகின்ற வட்ட நிலாவாக விளங்கும் கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம் என்பது பாரதிதாசன் கருத்து. 'மனைவி இறந்தபின் வேறு ஒரு துணைவியை ஆண்மகன் தேடுவது போல், பெண்ணும் துணைவன் இறந்த பின் வேறு துணை தேடச் சொல்லிடுவோம் புவிமேல்' என்று அஞ்சாமல் எடுத்துரைக்கின்றார் அவர். மேலும் அவர் பயம் விடுத்து, பகுத்தறிவின் துணை கொண்டு, தனக்கு ஏற்றதொரு வாழ்க்கைத் துணையைக் கைப் பிடித்துத் துயர் கடக்குமாறு பெண்களுக்கு அறிவுறுத்துகிறார்.

"மாதே! கைம்பெண்ணாய் வருந்தாதே!


ஆசைக்குரியவனை நாடு - மகிழ்வோடு - தார்சூடு - நலம் தேடு!”


முன்னேற்றச் சிந்தனைகள்


"ஆண் உயர்வு என்பதும் பெண் உயர்வு என்பதும்


நீணிலத்து எங்கணும் இல்லை;


வாணிகம் செய்யலாம் பெண்கள் நல்


வானூர்தி ஓட்டலாம் பெண்கள்'

'ஆண் உயர்வு, பெண் தாழ்வு' என்று தான் யாரும் பொதுவாகக் கூறுவார்கள். பாரதிதாசனுக்கோ சொல்லளவிலும் அப்படிக் கூற பெண்மையைத் தாழ்த்திப் பாட மனமில்லை. எனவே, 'ஆண் உயர்வு என்பதும் பெண் உயர்வு என்பதும் நீணிலத்து எங்கணும் இல்லை' என்று அவர் பாடியிருக்கிறார்.


'நல்வானூர்தி ஓட்டலாம் பெண்கள்' என்னும் அவரது வாக்கு பலித்திருப்பது அவரது தொலைநோக்கிற்கு சான்று.


'அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் தமிழ்நாட்டின் கண்கள்' என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே அவர் படைத்துக் காட்டும் புதுமைப் பெண்கள் வீரத்தில் சிறந்தவர்களாக, கல்வியறிவு நிறைந்தவர்களாக, குடும்பத்தைப் பேணிப் பாதுகாக்கும் அன்பு மிகுந்தவர்களாக, உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களாக விளங்குகிறார்கள்.

"மகளிரெலாம் கல்வியறிவு ஒழுக்கம் உளராயின்


மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரர்


மகளிரெலாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்


மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை!'


பாரதிதாசனின் வாக்கினைப் பொன்னே போல் போற்றி, இந்நாட்டு மகளிரெலாம் கல்வியறிவு ஒழுக்கம் பெற்று, அரசியலைக் கைப்பற்றி ஆளும் நாளே நன்னாள்.

- முனைவர் நிர்மலா மோகன், தகைசால் பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். 94436 75931.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

Advertisement