Advertisement

கோடையை கொண்டாடுவோம்

'தீவு ஒன்று கிடைத்தால் லீவை கொண்டாடலாம்' என்று கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பீர்கள். ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம், சிலருக்கு இரண்டு மாதங்கள் வரை கோடை விடுமுறை. மாணவர்கள் விடுமுறையில் காலையில் லேட்டாக எழுந்திரிக்கலாம். நாள் முழுக்க தொலைக்காட்சி பார்க்கலாம். ஊர் சுற்றி வரலாம். ஓய்வுதான். உற்சாகம்தான் என்று நினைப்பீர்கள்.ஆனால், நினைத்துப்பாருங்கள். விலங்குகளுக்கு விடுமுறை ஏதும் கிடையாது. அவை விரைந்து கொண்டே இருக்கின்றன.
பறவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகள் ஏதும் நாட்காட்டியில் இல்லை. அவை பறந்து கொண்டே இருக்கின்றன. அப்புறம் ஏன் மாணவர்களே... உங்களுக்கு மட்டும் கோடை விடுமுறை நாட்கள்? கோடை வெயிலின் கொடுமையினால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக உருவானது தான் இந்த விடுமுறை.இது சரியா ஆனால், நம் மாணவர்கள் கோடை வெயிலைக் கொஞ்சம் கூட வீணடிக்காமல் கொண்டாடித் தீர்க்கின்றனர். சின்ன கிரவுண்டுக்குள் ஐந்து டீம்கள் என்று சொல்லிக்கொண்டு 50 பேர் நின்று ஆடிக் களிக்கிறார்கள்.
வற்றிப்போன ஆறுகள், கோயில் பிரகாரங்கள், காய்ந்து போன கண்மாய்கள் என்று மொட்டை வெயிலில் கட்டாந்தரையில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். மண்டை பிளக்கிற வெயிலில் நின்று, கண்ட நோய்களையும் வாங்கிக்கொண்டு வந்து ஒரு மாதத்திற்குள் பெற்றோரை ஒரு வழி பண்ணிவிடுகிறார்கள்.வீட்டிற்குள் இருந்தாலும் இவர்களை சமாளிக்க முடியாது என்று பெற்றோர்களும் "எங்காவது போய் வரட்டும்" என்று அனுப்பி விடுகிறார்கள். இப்படி ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் ஓய்வெடுத்து ஓட்டினோம் என்றால் 12ஆம் வகுப்பு முடிப்பதற்குள் 24 மாதங்களை அதாவது 2 வருடங்களை வீணடித்திருப்போம். வளர் இளம் பருவத்தில் இப்படி வீணடிப்பது சரியா...?வாழ்வின் அடுத்த கட்டம் கோடையை கொண்டாட்டமாக்க என்ன செய்யலாம்?ஒவ்வொருவர் வயதிற்கும், அவர்கள் படிக்கும் வகுப்பிற்கும் ஏற்றார் போல இந்த விடுமுறையை உபயோகமாக செலவிடுவதன் மூலம் விடுமுறை நாட்களை மிகவும் பயனுள்ளதாக மாற்றலாம்.
12ஆம் வகுப்பு தேர்வெழுதியிருக்கும் மாணவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். பள்ளித் தேர்வை எழுதி முடித்திருக்கும் உங்களுக்கு, உண்மையில் வாழ்க்கைத் தேர்வு என்பது இப்போதுதான் தொடங்குகிறது. நிறைய உழைத்துக் களைத்து விட்டோம் என்று நீங்கள் நீண்ட நாட்கள் துாங்கி விடக் கூடாது. ஏனென்றால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குத் தயாராக நிறைய திட்டமிட வேண்டும்.எந்தத் திசையில் நம் பயணம் தொடர வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய கால கட்டம் இது. காலத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய படிப்புகள் வந்து விட்டன. உங்களுக்கு ஆர்வமும், திறமையும் இருக்கக்கூடிய துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் உங்கள் உள் மனம் சொல்கிற துறையை தேர்வு செய்யுங்கள். எதிர்காலத்திற்கான படிப்பை தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் அடுத்தவர்களை அதிகம் மூக்கை நுழைக்க விடாதீர்கள்.
இந்த விடுமுறையை, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேற்படிப்பு குறித்து நடக்கும் கருத்தரங்குகளுக்குச் செல்லலாம். உயர் கல்வி குறித்து வந்திருக்கும் சமீபத்திய புத்தகங்களைப் படிக்கலாம். துறை சார்ந்த அனுபவசாலிகளிடம் விவரங்களைக் கேட்டறியலாம்.
நவீன தொழில்கள் :10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கு இது பொற்காலம். வீணே விளையாடி பொழுதைக் கழிக்காமல் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் செலவு செய்து ஏதேனும் ஒரு நவீன தொழிலைக் கற்றுக்கொள்ளலாம்.அதிலும் மாணவிகளுக்கு வீட்டிலிருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கும் கைத்தொழில்கள் நிறைய வந்துவிட்டன. மருதாணியிடல், மணப்பெண் அலங்காரம், அழகுக்கலைப் பயிற்சி, எம்பிராய்டரி போன்ற பொழுதுபோக்குடன் கூடிய தொழில்களை, தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம். சில பல்கலைக் கழகங்கள் இவற்றை மூன்று வாரப் பயிற்சியாக அளிக்கின்றன. சான்றிதழும் தருகின்றன.மாணவர்கள் எனில் பாஸ்ட் புட் தயாரித்தல், அலைபேசி ரிப்பேரிங், ஏ.சி., ரிப்பேரிங், இன்டர்நெட் சர்வீசிங், டெஸ்க்டாப் பிரிண்டிங் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பகுதி நேரமாக தொழில் செய்து உங்கள் பாக்கெட் மணியை நீங்களே சம்பாதித்துக் கொள்ளலாம்.
நுண்கலைகள் :பெற்றோர்களே...நர்சரி, நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை படி, படி, சம்மர் கோச்சிங் போய் படி என்று பாடாய்ப் படுத்தி எடுக்காதீர்கள். உடல் களைப்புற்றால் உற்சாகம் பெற காபி, டீ, சாப்பிடுவது போல, மனம் களைப்புற்றால் அதற்கு உற்சாக பானம் ஊட்ட வேண்டாமா? அதற்குத்தான் பைன் ஆர்ட்ஸ் எனப்படும் நுண்கலைகள் இருக்கின்றன.பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் ஒரு நுண் கலையைச் சொல்லித் தருவது நல்லது. அது அவர்கள் படிப்பில் களைப்புறும் போது இளைப்பாற்றும். இசை, நடனம், பரதம், வாய்ப்பாட்டு, பெயிண்டிங், கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளை இந்தக் கோடையில் கற்றுக்கொடுக்கலாம்.
நுண்கலைகள் என்பவை மனம் விரும்பி செய்யக்கூடியவை. அதிலும் போய் போட்டிகள் வைத்து, அல்லது போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்று வர வேண்டும் என்று அழுத்தம் அளிக்காதீர்கள். நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள். இப்படி பல வழிகளில் கோடையை பயனுள்ளதாக மாற்றலாம்!வாருங்கள் இந்தக் கோடையை மனம் மகிழ கொண்டாடுவோம்.--முனைவர். ஆதலையூர் சூரியகுமார்,மாணவர் வள மேம்பாட்டு பயிற்றுநர்,அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி,மேலுார் 98654 02603.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement